தீபாவளி பட்டாசு வெடித்ததால் குழந்தைகள் உள்பட 250 பேரின் கண் பாதிப்பு: பெங்களூரு மருத்துவமனைகளில் குவிந்த மக்கள்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சுமார் 250 பேர் கண்களில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரெங்கிலும் உள்ள கண் மருத்துவமனைகளில், பட்டாசு விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய தீக்காயங்கள் முதல் பார்வை இழப்பை ஏற்படுத்தும் அளவிற்கான கடுமையான பாதிப்புகள் வரை ஏற்பட்டுள்ளன. அதன்படி நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில் 93 பேர் சிகிச்சை பெற்றனர்; அவர்களில் 56 பேர் குழந்தைகள்.
இவர்களில் 7 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மிண்டோ கண் மருத்துவமனையில், பண்டிகையின் நான்கு நாட்களில் 44 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்; இதில் 21 பேர் குழந்தைகள். இந்த பாதிப்புகளில் 16 பேர் கடுமையான நிலையில் இருந்ததாகவும், 5 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கரா கண் மருத்துவமனையில் 28 நோயாளிகள் காயமடைந்தனர், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குழந்தைகள். இதேபோல், நேத்ரதாமா சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 21 பேரில் 13 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.