237 வாக்குகளை பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகாய்ச்சி தேர்வு
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக 64 வயதான சானே தகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவராகவும், ஜப்பான் பிரதமராகவும் ஷிகரு இஷிபா பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஷிகரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இஷிபா விலகினார். இதைத்தொடர்ந்து லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 4ம் தேதி நடைபெற்றது.
இதில் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே தகாய்ச்சியும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமிக்கும் போட்டியிட்டனர். இந்த வாக்கெடுப்பில் சானே தகாய்ச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி 164 வாக்குகளும் வென்றனர். இதையடுத்து சானே தகாய்ச்சி லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜப்பான் பிரதமருக்கான தேர்தல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 465 உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில், சானே தகாய்ச்சி 237 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயக கட்சி தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து ஜப்பான் அரசரை சந்தித்து வாழ்த்து பெற்ற சானே தகாய்ச்சி, ஜப்பானின் 104வது பிரதமராக விரைவில் பதவி ஏற்க உள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ள 64 வயது சானே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.