தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கம்: 12 முன்பதிவு மையங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயங்கும் 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14 ஆயிரத்து 268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து இந்த நாட்களில் இயக்கப்படும் 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,253 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என மொத்தம் 15 ஆயிரத்து 129 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் 16ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்த , புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கத்தில் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும். கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மற்றும் வழக்கம்போல் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும். கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, பழைய மாமல்லபுரம் ஓ.எம்.ஆர். சாலை கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு சாலை வழியாக செல்லலாம்.
தீபாவளி பயணத்திற்கான 12 முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10, கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 2 மையங்கள் இயங்கும். முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் 9445014436 என்ற தொலைபேசி நம்பரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (இலவச டோல் எண்) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள், வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 2 பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக ரயில்வே துறையிடம் பேசப்பட்டுள்ளது. வெளியூருக்கு செல்ல பயணிகள் இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கினோம். அது வெற்றிகரமாக நடைபெற்றது. ஆயுத பூஜைக்கு 300 பேருந்துகள் இயக்கப்பட்டன. குறைந்த பயண நேரம் உள்ள ஊர்களுக்கு தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் அனைத்து நேரமும் அதிக கட்டணம் வசூலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில்தான் ஒரு சிலர்தான் அவ்வாறு வசூலிக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.