2024 ம் ஆண்டில் நாய்க்கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்தனர்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: 2024 ம் ஆண்டில் நாய்க்கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்தனர் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 8 வாரங்களுக்குள் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடைத்துறை செயலாளர் சுபையன், இயக்குனர் கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தெருநாய்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தவும், நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மாநில அளவில் மேற்கொள்ளவும் கால்நடைத்துறை செயலாளர் தலைமையியல் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகர ஆணையர் குமரகுருபரர், பேரூராட்சி ஆணையர் பிரதீப் குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன ரெட்டி உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். மோசமான உடல்நலம் பாதித்த நாய்களுக்கு உரிய கால்நடை மருத்துவர்கள் மூலம் உள்ளாட்சி அனுமதி பெற்று கருணைக்கொலை செய்யும் நடைமுறை பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கடித்தால் உரிமையாளரே பொறுப்பு என்னும் விழிப்புணர்வை பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2024ல் நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது கவலைக்கிடம் எனவும் இதை தடுக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் மாநில அரசு தீர்மானித்துள்ளது.தமிழகத்தில் 4.5லட்சம் தெருநாய்கள் இருப்பதாகவும் வளர்ப்பு நாய்கள் 4.5 லட்சம் என 9 லட்சம் நாய்கள் இருப்பதாக தமிழக அரசின் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி.1 முதல் ஆகஸ்ட்.10 வரை 3,67,604 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் நாய்க்கடியால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் நாய்க்கடியால் 25,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024 ம் ஆண்டில் நாய்க்கடியால் 4,80,483 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், 8 வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டது.