குலதெய்வ வழிபாட்டிற்காக அழகர்கோவிலுக்கு 18 கிராம மக்கள் மாட்டுவண்டி பயணம்
காரைக்குடி : அழகர்கோவில் ஆடி திருவிழாவிற்காக, காரைக்குடி அருகே வேலங்குடி உட்பட 18 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டியில் பயணத்தை துவக்கினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், வேலங்குடி உள்பட 18 கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டிற்காக அழகர்கோவிலுக்கு பராம்பரியம் முறைப்படி பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணத்தை துவங்கினர்.
மதுரை அழகர்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கியவுடன் வேலங்குடியில் உள்ள நாட்டார்களுக்கு திருஓலை அனுப்பப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்கு என உள்ள மாட்டுவண்டிகளில் காளைகளை பூட்டி, நேற்று வேலங்குடி பிள்ளையார்கூடத்தில் இருந்து 18 வண்டிகளில் 7 நாள் பயணத்தை துவங்கினர். இவர்கள் குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் வழியாக எஸ்.எஸ்.கோட்டை செல்வார்கள். இரவு அங்கு தங்கிவிட்டு இன்று (ஆக.6) பயணத்தை துவங்கி மதுரை மாவட்டம், மேலூரில் தங்குவார்கள்.
நாளை அழகர்கோவில் சென்றடைவர். அங்கு தீர்த்தமாடி விட்டு மறுநாள் 18ம் படி கருப்பண்ணசாமிக்கு கிடாவெட்டி படையல் இடுவார்கள். குலதெய்வ வழிபாடு முடிந்து மீண்டும் மாட்டு வண்டியில் பயணத்தை துவங்கி சொந்த ஊர் திரும்புவார்கள்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பாரம்பரியம் மாறாமல் பல தலைமுறைகாளாக இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். 7 நாள் உறவினர்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறோம். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்ற வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து விடுவார்கள்’’ என்றனர்.