மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு: ஜம்மு-காஷ்மீரில் சோகம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது மிச்சைல் மாதா துர்க்கை கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இன்று பல மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மிச்சைல் துர்க்கை கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 12 மணியளவில் அந்த பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது.
பின்னர் சில நிமிடங்களில் மேகவெடிப்பு நிகழ்ந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மழை அருவி போல கொட்டியது. இதனால் அங்கு சிறிது நேரத்திலேயே வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் பயத்தில் அலறினர். சிறிது நேரத்தில் தண்ணீர் மட்டும் அதிகரிக்க தொடங்கியதால், பலர் வெள்ளத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கிஷ்த்வார் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோஸ்டி பகுதியில் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் மசாயில் மாதா கோயிலை நோக்கி நடத்தப்படும் புனித யாத்திரை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அமைந்திருந்த ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.