சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் தமிழ்நாட்டில் பொங்கல் விழா களைகட்டியது: கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு
தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ உள்ளனர். பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைய உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புதுத் துணிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். சிறு வியாபாரிகள் 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்ேபடு மார்க்கெட்டில் ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. அதன்படி ஒரு கரும்பு ரூ.50, ரூ.60, ரூ.70, 80 என்று தரத்திற்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது.
குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் ரூ.1000 வரை வாழைத்தார்கள் விற்பனையானது. பூக்கள் மடங்கு 4 மடங்கு அதிகரித்து இருந்த போதிலும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். ெபாங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்போர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். அவர்கள் முதல் ரயில், பஸ், கார்கள், விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அனைத்து ரயில்களும் ஹஸ் புல்லாக காட்சியளித்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. நேற்றும் ஏராளமோனோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை ரயில், பஸ், கார்கள், விமானம் எனற சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னையில் நேற்று காலை முதல் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவில் வர இருப்பதால் முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.