புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 துணை கலெக்டர்கள் அமைச்சருடன் கலந்துரையாடல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பணிநியமன ஆணை பெற்ற 15 துணை ஆட்சியர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் கலந்துரையாடினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-I தேர்வு மூலம் துணை ஆட்சியர் பணியிடத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் முதல்வர் பணிநியமன ஆணை வழங்கினார். இதை தொடர்ந்து பணி நியமன ஆணையை பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடியதுடன், அவர்களது பணி சிறப்புடன் அமைய உரிய அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் நிர்வாகம்) நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.