14 எம்பிக்கள் புறக்கணித்த நிலையில் செல்லாத ஓட்டு போட்ட 15 எம்பிக்கள் யார்..? துணை ஜனாதிபதி தேர்தலில் திருப்பம்
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில், 14 எம்.பி.க்கள் தேர்தலை புறக்கணித்ததும், 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 767 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன்மூலம் 98.2 சதவீத வாக்குகள் பதிவாகின. 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வரவில்லை. இவர்கள் குறித்த புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன.
அந்த வகையில் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள், சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் சுயேட்சை உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 13 பேர் தேர்தலை புறக்கணித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், தபால் வாக்கை அளிக்க மறுத்த மற்றொரு உறுப்பினர் என மொத்தம் 14 பேர் வாக்களிக்கவில்லை. மொத்தம் பதிவான 767 வாக்குகளில் 752 வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகும் என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதில் சுமார் 10 வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 5 வாக்குகள் ‘இந்தியா’ கூட்டணி தரப்பிலும் செல்லாதவையாக இருக்கலாம் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்பிக்கள் வாக்களிக்கும் முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் அல்லது தவறுகள் காரணமாக இந்த வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இருந்தாலும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்ட 15 வாக்குகளில் 7 வாக்குகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. எனவே இரு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தான், ஆளுங்கட்சிக்கோ, எதிர்கட்சியின் வேட்பாளருக்கோ வாக்களிக்காமல் செல்லாத வாக்குகளை (குறுக்கு வாக்கு) அளித்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.