‘உங்களால் முடியுமா, முடியாதா.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’ 144 உத்தரவை திரும்ப பெற கூறி கலெக்டருக்கு நீதிபதி அழுத்தம்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு காரசார விவாதம்
மதுரை: திண்டுக்கலைச் சேர்ந்த சித்திரபால்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திண்டுக்கல், பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பண்ணசாமி கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். இதனிடையே பெருமாள்கோவில்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சித்திரபால்ராஜ் மீண்டும் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திண்டுக்கல் கலெக்டர், திண்டுக்கல் எஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருந்தார். பின்னர் பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கலெக்டர் சரவணன், எஸ்பி பிரதீப் ஆகியோர் ஆஜராகினர். அப்போது கலெக்டர் தரப்பில், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும், போலீசாருடன் இணைந்து உத்தரவை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலுமா, இல்லையா என்றார். இதற்கு கலெக்டர் தரப்பில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழும். இதை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.
இதையேற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலுமா, இல்லையா என்பதற்கு மட்டும் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றார். அப்போது அரசுத் தரப்பில், ‘‘அரசுக்கு எந்த சார்பும் இல்லை. மதநல்லிணக்கமும், அமைதியுமே முக்கியம். இந்த வழக்கில் காலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால், சில விரும்பத்தகாத சூழல் எழுகையில், அதனை கருத்தில் கொள்ள வேண்டும். கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக முன்பு ஏற்பட்ட பிரச்னைகளில் கொலை நடந்துள்ளது. இதுவரை 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. 144 தடை உத்தரவை திரும்ப பெறுவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, பொது அமைதியையும், கள நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கலெக்டர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற இயலுமா, இயலாதா? என்றார். அப்போது கலெக்டர் தரப்பில், நேற்றே உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘நான் கேட்பது உங்களால் முடியுமா, முடியாதா? என்பது தான்’’ என்றார்.
அப்போது அரசுத்தரப்பில், நீதிபதி அழுத்தம் கொடுக்கிறார் எனக் கூற, நான் அழுத்தம் தரவில்லை. பதிலைத் தான் எதிர்பார்க்கிறேன் என்றார் நீதிபதி. கலெக்டர் தரப்பில், வேறு வழியின்றி பிரச்னை எழுந்ததால், அதனை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என கூறப்பட்டது. இதற்கு நீதிபதி, அவ்வாறெனில் உங்களால் செய்ய இயலாது. அப்படித்தானே? என்றார். இதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க முயன்றபோது, சத்தத்தை கூட்டாதீர்கள் என்றார் நீதிபதி. அப்போது அரசு வழக்கறிஞர் அஜ்மல்கான், ‘சட்டத்திற்கு உட்பட்டு, எனது கருத்துக்களை வைக்க இடமுண்டு. எங்களுக்கும் மரியாதை உண்டு’ என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமான உத்தரவுகளை மட்டும் நீங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானவரை கேள்வி எழுப்பும் போது குரலை உயர்த்துவது ஏற்கத்தக்கதல்ல’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா? என்றார். இதற்கு அரசுத்தரப்பில், ‘‘காலையில் முறையீடு செய்யப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் பிரதான எண் வழங்கப்படவில்லை. 30 ஆண்டுகளாக இது போல கோரிக்கை எழாமல், கடந்த வாரம் மனு செய்திருக்கிறார்கள். கள நிலவரத்தையும், சட்ட ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டது.
கலெக்டர் தரப்பில், 144 தடை உத்தரவை திரும்பப் பெற்றால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாலும், கள நிலவரத்தை கருத்தில் கொண்டும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற இயலாது என கலெக்டர் மற்றும் எஸ்பி தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மனுவின் மீது மாலை 6 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் 6 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைப்பதாகவும், கலெக்டர், எஸ்பி, ஆஜராக தேவையில்லை எனவும் உத்தரவிட்டார்.
* சமூக நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும் சக்திகளை நிராகரிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் அரசியல் ஆதாயம் அடைவதற்கு திருப்பரங்குன்றத்தில் சமூக அமைதியை கெடுக்க முயல்வதை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு மக்களும் அதற்கு இடம் தர மாட்டார்கள். காலம் காலமாக பின்பற்றப்படும் மரபுகளை மீறி மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் இந்துத்துவ மதவாத சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினால் எந்தவித சட்ட ஒழுங்கும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. நீதிமன்ற மேல்முறையீட்டின் மூலமாக மதச்சார்பற்ற சக்திகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்து முன்னணியினர் மலைக்கு சென்று, அமைதியாக நடந்து கொண்டிருந்த தீப வழிபாட்டுக்கு இடையூறாக, கலக சூழலை உருவாக்கியதையும், அமைதிப்படுத்த முயன்ற காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது. இந்து முன்னணியும் அதன் ஆதரவு அமைப்புகளும் தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. சமூக நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும் சக்திகளை நிராகரிக்க வேண்டும்.