துர்கை சிலை கரைப்பில் கோர விபத்து; ஆற்றில் மூழ்கி 12 இளைஞர்கள் பலி: 3 பேர் உடல் மீட்பு; 9 பேரை தேடும் பணி தீவிரம்
ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பின்போது ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்திலுள்ள கைராகர் பகுதியில் குசியாப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள உத்தங்கன் ஆற்றில் நேற்று துர்கை சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குழுவினர், சிலையை கரைப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றவர்களும் ஆற்றின் ஆழமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உள்ளூர் கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் நீரில் மூழ்கியதாக முதலில் தகவல் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய விஷ்ணு என்ற இளைஞர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை, ஓம்பால் (25), ககன் (24) மற்றும் மனோஜ் என்ற சிறுவன் என மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து சிறுவர்கள் உட்பட காணாமல் போன 9 பேரைத் தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் தாமதமாக வந்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள் வந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த துயரச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
‘ஆற்றின் பாலத்திற்கு அடியில் சிலை கரைப்பதற்காக பாதுகாப்பான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இளைஞர்கள் ஆபத்தான வேறு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.