உத்திரமேரூர் அருகே பெரியாண்டவர் ஆலயத்தில் 10ம் ஆண்டு திருவிழா
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பெரியாண்டவர் ஆலயத்தில் 10ம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத பெரியாண்டவர் ஆலயத்தில் நேற்று 10ம் ஆண்டு திருவிழா நடந்தது. காலையில் கோ பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விரதம் இருந்து பக்தர்கள், விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.
பின்னர், பெரியாண்டவருக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியாண்டவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் காக்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.