10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4ம் தேதி வெளியாகிறதா?
சென்னை: நடப்பாண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை நவம்பர் 4ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில்தான் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு கால அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி பெற்று, தேர்வுக்கால அட்டவணையை நவம்பர் 4ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மேலும், சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளதால், அதை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.