கோயிலுக்கு சென்று திரும்பிய 10 பக்தர்கள் விபத்தில் பரிதாப பலி: ராஜஸ்தானில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஷ்யாம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற காட்டு ஷ்யாம் கோயிலுக்கு சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு பக்தர்கள் குழுவாக திரும்பிக் கொண்டிருந்தனர். பயணிகளுக்கான பிக்கப் வாகனத்தில் பக்தர்கள் பயணித்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் பிக்கப் வாகனத்தின் மீது, எதிர்திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த கோரமான மோதலில், பிக்கப் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியதில், அதில் பயணம் செய்தவர்களில் 10 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாகர் ராணா கூறுகையில், ‘காட்டு ஷ்யாம் கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும், காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயர் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கும், மூன்று பேர் உள்ளூர் மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார்.