100 சதவீத பணிகள் நிறைவு இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளபாதை திறப்பு எப்போது?
*ஒன்றிய அரசின் முடிவுக்கு காத்திருப்பு
புதுச்சேரி : புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன. இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கைப்பந்து மைதானங்களும் உருவாக்கப்பட்டது.
பிறகு ரூ.80 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. பகல் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மாநில அளவிலான பகல், இரவு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்து காட்டினர். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக்ட்ராக் (செயற்கை தடகள ஓடுபாதை) அமைக்க அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு இதற்கான முதற்கட்ட நிதியாக ரூ.3 கோடி நிதியை விடுவித்தது.
அதன் மூலம் ஆரம்ப கட்ட பணியாக 400 மீட்டர் ஓடு பாதை முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டது. சிந்தடிக் ஒட்டும் பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப்பட்டது. ஆனால் மீதியுள்ள ரூ.4 கோடியை மத்திய அரசு விடுவிப்பதில் நிர்வாக ரீதியாக சிக்கல் எழுந்தது. இதனால் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ம், ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு நிதியை விடுவித்தது. இதையடுத்து 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடுபாதையில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டு கோடுகள் வரையப்பட்டது. எனினம் 4 ஆண்டுகளை கடந்தும் விளையாட்டு மைதானம் வீரர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் நடைபெறவிருந்த பல்வேறு போட்டிகளின் அட்டவணை பிறமாநிலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, செயற்கை ஓடுதள பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என அனைத்து விளையாட்டுகளுக்கான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால்பந்து மைதானத்தில் முதலில் கொரியன் கிராஸ் அமைக்க திட்டமிடப்பட்டது.
பின்னர் இயற்கையான புல்லே போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சீரமைத்தாலே மைதானம் 100 சதவீதம் முழுமையாக தயாராகிவிடும். பிரத
மரின் திட்டம் என்பதால், ஒன்றிய அரசின் முடிவுக்காக மைதானம் காத்திருக்கிறது. பிரதமர் நிகழ்ச்சி நிரலில் உள்ளதால், மைதானம் திறப்பு காலதாமதமாகி வருகிறது, என்றனர்.