10 வளர்ப்பு நாய்களை வேட்டையாடிய அட்டகாச சிறுத்தையை பிடிக்க கூண்டு
ஊட்டி : ஊட்டி கிளன்ராக் பகுதியில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கார்டன் மந்து பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.
இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதேபோல், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்க கூடிய ஊட்டி நகரத்தை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன.
இந்த வனங்களில் இருந்து வெளியேறும் காட்டு மாடுகள், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கை. வனத்துறையினர் அவற்றை வனத்திற்குள் விரட்டுவார்கள்.
உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளான நாய், கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வது வழக்கம். மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும், நாய் போன்றவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனிடையே, ஊட்டி நகரின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் பகுதி உள்ளது. இப்பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளது.
அருகில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஒன்று இப்பகுதியில் குடியிருப்புகளில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த நாய்களை வேட்டையாடி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நாய்களை வேட்டையாடியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அருகேயுள்ள கார்டன்மந்து பகுதியில் தோடர் வளர்ப்பு எருமை கன்றுகளையும் வேட்டையாடியதாக தெரிகிறது. தொடர் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறை சார்பில் கார்டன்மந்து பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கூண்டின் ஒருபகுதியில் ஆடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.