1 டன் குப்பைகள் வனத்துறை சார்பில் சேகரித்து அகற்றம்
ஊட்டி : நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 1 டன் அளவிற்கு குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.
இந்த வனங்களில் அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. இருப்பினும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட கட்டுபாடுகள் இருப்பது தெரியாமல் அவற்றை கொண்டு வந்து பயன்படுத்தி விட்டு சாலையோரங்கள் அல்லது வனத்திற்குள் வீசி செல்கின்றனர்.
வனத்திற்குள் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு வனவிலங்குகள் உயிாிழக்கும் அபாயம் உள்ளதால் வனத்துறை சார்பில் அவ்வப்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, பைக்காரா, ஊட்டி வடக்கு, கட்டபெட்டு உள்ளிட்ட அனைத்து வனச்சரகங்களிலும் சுற்றுலா தலங்கள், காப்பு காடுகள், சாலையோர வனப்பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளையும் வனத்துறை ஊழியர்கள் சேகரித்தனர்.
அனைத்து வனச்சரகங்களிலும் சேர்த்து சுமார் 1 டன்னுக்கும் மேல் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றியுள்ளனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குப்பைகளை வனத்திற்குள் வீசி எறிய வேண்டாம். ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று அடிக்கடி தூய்மை முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.