வித்தியாசமாக சிந்தித்தால் ஜெயிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி
உலகம் முழுதும் அவசரமாக இயங்கி வருகிறது. அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களின் வாழ்க்கையை வாழ அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெண்களும் வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். பெண்கள் வேலைக்கு சென்றாலும், வீட்டை பராமரிப்பது, குடும்பத்தினரை பார்த்துக் கொள்வது, வீட்டை சுத்தமாக அழகாக வைத்துக் கொள்வதில் பெண்கள் தவறுவதில்லை.
இவர்கள் வேலை, குடும்பம் என்று பம்பரம் போல் சுழல்வதால், அவர்களின் வேலைகளை எளிமையாக்க பல வீட்டு உபயோகப் பொருட்கள் இன்று மார்க்கெட்டில் உள்ளன. அதில் முக்கியமாக வாசலில் கோலமிடுதலை எளிமையாக்க விற்பனைக்கு வந்துவிட்டன ரங்கோலி ஸ்டென்சில்கள். “எனக்கு கோலமே போட வராது” என புலம்பு பவர்களுக்கும், வேலைக்குப் போகும் அவசரத்தில் கோலம் போட நேரமில்லை என சொல்பவர்களுக்கும் இந்த ரங்கோலி ஸ்டென்சில்கள் வரப்பிரசாதம். இதனை ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்து வருகிறார் சேலத்தை சேர்ந்த வித்யா வெங்கட்ராஜன். இவர் தன்னுடைய யுடியூப் சேனலில் ஸ்டென்சில்களை பயன்படுத்தி எவ்வாறு அழகான கோலங்களை போடலாம் என்றும் பதிவு செய்து வருகிறார்.
“எனக்கு குழந்தை பிறக்கும் வரை நானும் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். என் கணவர் பேராசிரியராக வேலை பார்க்கிறார். நானும் கணித உதவிப் பேராசிரியராக வேலை பார்த்து வந்தேன். மகன் பிறந்த பிறகு அவனைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால், நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அப்போதுதான் வீட்டில் இருந்தபடியே ஏதாவது புதுமையான பிசினஸ் செய்யலாம்னு நினைத்தேன். அதே சமயம் கிரியேடிவ்வா இருக்கணும்னு நினைச்சேன்.
எனக்கு கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம். தினமும் புதுவிதமான கோலங்களை என் வீட்டு வாசலில் போடுவேன். பலரும் அதைப் பார்த்து நன்றாக இருப்பதாக கூறுவார்கள். அப்போதுதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியே போக முடியாத காரணத்தால், விளையாட்டாக யூ டியூப்பில் கோலம் போடும் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து 365 நாட்கள் கோலங்கள் சேலஞ்ச்னு தினமும் புள்ளிக்கோலம், ரங்கோலி கோலங்கள் போடுவதை வீடியோவாக பதிவேற்றினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்றவர் கோல ஸ்டென்சில்கள் பற்றி விவரித்தார்.
‘‘என்னைப் போல் பலரும் யுடியூப்பில் கோலங்களை அப்லோட் செய்து வராங்க. ஆனால், இது கோலம் போடத் தெரிந்தவர்களுக்கு. இன்றைய தலைமுறையினருக்கு கோலம் போடத் தெரியாது. கோலம் போட விருப்பம் இருக்கும். ஆனால், போடத் தெரியாது என்பதால், அவர்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர்களை ஒட்டி விடுகிறார்கள். நாளடைவில் அவை தன் பொலிவை இழந்துவிடும். அதனால் கோலம் போடத் தெரியாதவர்களும் எளிதாக அழகாக கோலம் போட என்ன செய்யலாம்னு யோசித்தேன். அப்படித்தான் கோல ஸ்டென்சில்கள் ஐடியா வந்தது.
சின்ன வயசில் அம்மா அச்சுகள் பயன்படுத்தி கோலங்கள் போட்டதை கவனிச்சிருக்கேன். அதனால் நானும் சில ஸ்டென்சில்களை வாங்கினேன். அதைப் பயன்படுத்தி கோலங்கள் போட்ட போது பார்க்க அழகாக இருந்தது. கிரியேடிவ்வா கோலங்கள் போடலாம் என்றும் தெரிந்துகொண்டேன். சில நிமிடங்களில் நம்முடைய வாசலில் அழகான கோலங்களை போடலாம் என்றும் ஸடென்சில்களைப் பயன்படுத்தி எவ்வாறு கோலங்களை போடலாம் என்று வீடியோக்களை பதிவு செய்ய துவங்கினேன். நான் எதிர்பாராத அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
கோலம் போடத் தெரியாதவங்க என்னிடம், ‘எங்க வீட்டில் கோலம் போடத் தெரியலைன்னு கிண்டல் செய்தாங்க. இப்ப நான் அழகான கோலம் போட காரணம் உங்க ஸ்டென்சில்தான்’ என்று நிறைய பேர் சொல்லி இருக்காங்க. அதைக் கேட்கும் போது மனசுக்கு நிறைவாகவும் பெருமையாகவும் இருந்தது. பலரும் ஸ்டென்சில்களை விற்பனைக்கு தரச்சொல்லி கேட்ட போதுதான் ஸ்டென்சில்களை விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் வந்தது.
இந்த ஸ்டென்சில்கள் எங்கு கிடைக்கும்னு அலசினேன். வட இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக அறிந்தேன். ஆனால், மொத்த விற்பனைக்கு கொடுப்பவர்களை தேடினேன். சரியான நபர் கிடைக்கவில்லை. அப்போது என் கணவர் இது போன்ற வீட்டுப் பொருட்கள் மொத்த விற்பனையில் கிடைக்கக் கூடிய இணையதளம் பற்றி கூறினார். அதில் பார்த்த போது பல டிசைன்களில் ஸ்டென்சில்கள் கிடைத்தது. முதலில் 2000 ரூபாய்க்கு வாங்கி விற்பனை செய்தேன்.நல்ல லாபம் கிடைத்தது. தற்போது முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி விற்பனை செய்து வருகிறேன். என் கணவர்தான் எனக்கு மிகப்பெரிய பலம். தொடர்ந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது’’ என்றவர், மற்றவர்களுக்கு இந்த பிசினஸ் யுக்தியினை சொல்லிக் கொடுத்து வருகிறார்.
‘‘நான் பிசினஸ் செய்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களும் விற்பனை செய்ய விரும்புவதாக கூறினார்கள். அவர்களுக்கு ஸ்டென்சில்களை எவ்வாறு வாங்க வேண்டும் என்று விற்பனை செய்யும் முறைகளை சொல்லிக் கொடுத்தேன். வாங்க வசதி இல்லாதவர்களுக்கு என்னிடம் இருக்கும் ஸ்டென்சில்களை கொடுத்து விற்க சொன்னேன். இப்போது என்னுடன் சேர்ந்து நான்கு பெண்கள் இந்த பிசினஸ் செய்து வராங்க’’ என்றவர் தன்னிடம் உள்ள ஸ்டென்சில்கள் பற்றி விவரித்தார்.
‘‘நான் அனைத்து வகை ஸ்டென்சில்களையும் விற்கிறேன். பார்டர், பென்சில், லைன் பாக்ஸ், டபுள் பென், ஸ்டீல் லைனர், ஸ்டாம்ப் பாக்ஸ் ஃபில்டர் என எல்லா விதமான ஸ்டென்சில்களையும் அனைத்து அளவுகளில் விற்பனை செய்கிறேன். இவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் என் சேனலைப் பார்த்து ஸ்டென்சில் கோலம் போட கற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களில் என்னுடைய ஸ்டென்சில்களின் விற்பனையை துவங்க வேண்டும். இவை தவிர வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான சுலபமான வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். எதிலும் வித்தியாசம் காட்டினாதான் ஜெயிக்க முடியும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வித்யா வெங்கட்ராஜன்.
தொகுப்பு: கலைச்செல்வி