எழுத்தே என்னுடைய அடையாளம்!
நன்றி குங்குமம் தோழி
எழுத்தாளர், பாடலாசிரியர், நாவலிஸ்ட், திருமண வரன் அமைத்து தருபவர் என பன்முகங்களை கொண்டவர் கீதா. இவர் ‘கீதம்’ என்ற பெயரில் மேட்ரிமோனியல் மையம் ஒன்றினை 25 வருடங்களாக தன் கணவர் தெய்வசிகாமணியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் 700க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தியுள்ளார். மேட்ரிமோனியல் இவரின் தொழில் என்றாலும், இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். தன் எழுத்து மற்றும் தொழில் சார்ந்த விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
‘‘எனக்கு எழுத்து மேல் ஆர்வம் ஏற்பட என் அம்மா லீலா கிருஷ்ணன்தான் காரணம். அம்மா 50க்கும் மேற்பட்ட நாவல் கதைகளை எழுதியுள்ளார். அவரின் அந்தக் கதைகள் எல்லாம் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அம்மாவினை எழுத்துலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். என்னுடைய தாத்தாவும் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரின் ஊர் சிவகங்கை. அங்குள்ள இலக்கிய வட்டாரத்தில் சிவகங்கை கம்பர் என்று அவருக்கு பெயர். அதனால் எழுத்து என்னுடைய ரத்தத்தில் ஊறி இருக்குன்னு சொல்லணும். 1987ல் ‘கடமை’ என்ற தலைப்பில் கதை ஒன்றை முதல் முறையாக எழுதினேன்.
அது பத்திரிகையில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து பெண்களின் சுயமுன்னேற்றம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகள் எல்லாம் எழுத ஆரம்பித்தேன். மாலையில் வெளியாகும் பிரபல நாளிதழ் காலை நாளிதழ் ஒன்றை ஆரம்பிச்சாங்க. அதில் இலவச இணைப்பாக ஒரு புத்தகம் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் பத்து பக்கம் எழுத எனக்கு வாய்ப்பு வந்தது. அதன் ஆசிரியர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் என்னை நிறைய ஊக்குவித்தாங்க. அவங்கதான் என்னுடைய கட்டுரையினை தொகுப்பாக மாற்றி ஒரு புத்தகமா வெளியிட சொன்னாங்க.
வானதி பதிப்பகத்தின் உரிமையாளரிடம் என் கட்டுரையை கொடுத்தேன். படித்து பார்த்தவர் நன்றாக இருப்பதாக கூறி அதனை புத்தகமாக வெளியிட்டார். ‘உங்கள் உயர்வு உங்கள் கையில்’ என்ற தலைப்பில் என்னுடைய முதல் புத்தகம் வெளியானது. அதன் பிறகு சுய முன்னேற்றம், ஆன்மிகம், சமையல் என பல தலைப்புகளில் எழுதிய கட்டுரை தொகுப்புகள் புத்தகமாக வெளிவந்தது. இதுவரை 25 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். என் கணவரும் எழுத்தாளர் என்பதால் அவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் ஜெம்மாலஜி பற்றிய புத்தகமும் வெளிவந்துள்ளது’’ என்றவர் தன் பாடலாசிரியர் பயணம் பற்றி பேசினார்.
‘‘ஒரு முறை பிரபல பின்னணி பாடகியான எம்.ஆர்.விஜயா என்னை அணுகி கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் வெங்கடேச சுப்ரபாதத்தினை தமிழாக்கம் செய்து தரச்சொல்லி கேட்டாங்க. முதலில் செய்ய முடியுமான்னு தயக்கமா இருந்தது. கடவுள் மேல் நம்பிக்கை வைத்து எழுதினேன். அது 2000ல் பாம்பே சரோஜா அவர்கள் பாடி வெளியானது. அதைப் பார்த்த இசை அமைப்பாளர் கிரிஷ் பாபா குறித்து பக்தி பாடல்கள் எழுதச் சொல்லி கேட்டார். ஐந்து பாடல்களை எழுதிக் கொடுத்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அந்தப் பாடல்களை பாடினார். அது என்னால் மறக்க முடியாத தருணம். இன்றும் பக்தி பாடல்களை வெளியிடும் ஆடியோ நிறுவனம் ஒன்றுக்கு எழுதி வருகிறேன்’’ என்றவர் சிவன், அம்மன், அம்பாளுக்கு என 100க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார்.
‘‘தெய்வீகப் பாடல்கள் எழுதும் போது கடவுள் எனக்குள் இருந்து எழுதுகிறார் என்று எனக்கு தோன்றும். இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடமாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் நான் எழுதி, பாடல்களை என் கணவர் பாட வெளியிட்டு வருகிறேன். மேலும், ‘தினமும் ஒரு செய்தி’ என்ற தலைப்பில் செய்திகளை பரிமாறி வருகிறேன். என் கணவர் நன்றாக பாடுவார். பாடகரும் கூட. அவர் 400க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடி அதனையும் அதில் வெளியிட்டுள்ளோம்.
தயாரிப்பு நிறுவனம் ஒன்று துவங்கி இருக்கிறோம். உத்திரயன் இசை அமைப்பாளர் அவர்களின் பாபா பாடலினை என் கணவர் பாட, அதை நாங்க வெளியிட்டு இருக்கிறோம். எங்களின் எதிர்கால கனவு ஒன்று உள்ளது. வீட்டில் உள்ள முதியவர்களின் மதிப்பினை இளம் தலைமுறையினர் உணரும் வகையில் திரைக்கதை ஒன்றினை அவர் எழுதி இருக்கிறார். அதை திரைப்படமாக வெளியிட வேண்டும். அதுதான் எங்களின் கனவு’’ என்றார் கீதா.
தொகுப்பு: நிஷா