பிடித்த டிசைனில் உடைகள் அணியணும்!
நன்றி குங்குமம் தோழி
‘‘குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் படிக்க முடியாத நிலை. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. எனது ஆர்வத்தை அண்ணன் புரிந்து கொண்டார். அவர் என் பெரியம்மாவின் மகன். மூன்று வயதில் என்னை தன் வீட்டிற்கு அழைத்து சென்றவர் இன்று என்னை ஒரு செவிலியராக மட்டுமில்லாமல், எனக்கு விருப்பமான கலை துறையில் நான் ஈடுபட என்னை ஊக்குவித்தும் வருகிறார்’’என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த காவ்யா.இவருக்கு அழகாக கோலம் போட பிடிக்கும். அதனால் மார்கழி மாதம் தினமும் அழகிய ேகாலங்கள் கொண்டு தன் வாசலை அலங்கரித்துள்ளார். கோலம் மட்டுமில்லாமல், மெஹந்திப் புடவை ப்ரீபிளீட்டிங் என அனைத்தும் செய்து வருகிறார்.
‘‘என்னுடைய அப்பா தினக்கூலி வேலைதான் பார்த்து வந்தார். அம்மா இல்லத்தரசி. அவருக்கு அன்று வேலை இருந்தால்தான் சம்பாத்தியம். அதனால் வறுமைதான் எங்களின் அடையாளமாக இருந்தது. வீட்டின் சூழல் என் பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியாத நிலை. அந்த சமயத்தில் என் அண்ணன் என்னை தங்கையாக தத்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் கிடையாது.
அதனால் பெரியம்மாவிடம் என்னை அவர்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்னு கேட்க, பெரியம்மாவும் சம்மதிக்க, மூன்று வயதில் அண்ணனின் கைப்பிடித்து அவர்கள் வீட்டிற்கு சென்றேன். இன்றுவரை எனக்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்கிறார். டிப்ளமோவில் செவிலியர் படிப்பை முடித்தேன். தற்போது செவிலியரில் பட்டப் படிப்பு படிக்கிறேன். மேலும் எனக்கு திருமணமாகி எட்டு மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. என் கணவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். அவரும் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு தற்போது அதில் எம்.டி படிக்கிறார்’’ என்றவர், தன் கலை ஆர்வத்தை பகிர்ந்தார்.
‘‘நான் 2ம் வகுப்பு படிக்கும் போதே கோலம் போட ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் சின்னச் சின்ன கோலம் போடுறது முதல் பூ கட்டுவது வரை எல்லா வேலையும் செய்வேன். விழாக்கால நாட்களில் முதல் நாள் இரவே வீட்டு வாசலில் கோலமிட்டு வண்ணப் பொடியால் அலங்கரிப்பேன். ேகாலமிடுவது சுலபமாக இருந்ததால், மெஹந்தியும் போட கற்றுக்ெகாண்டேன். ஒரு டிசைனை ஒரு முறை பார்த்தா போதும், அதை அப்படியே கைகளில் அழகாக வரைந்திடுவேன். என் கைகளில் நான் மெஹந்தி போட்டிருப்பதைப் பார்த்து எங்க வீட்டில் உள்ள குட்டீஸ்கள் எல்லாம் அவர்கள் கையிலும் போடச் சொல்வார்கள். விசேஷ தினங்களில் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் தான் மெஹந்தி ஆர்டிஸ்ட். இதனைத் தொடர்ந்து புடவையை ப்ரீபிளீட்டிங்கும் செய்ய கற்றுக் கொண்டேன். அதையும் சிறிய அளவில் தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்து தருகிறேன்.
கோலம் போட ஆரம்பித்ததுதான் இப்போது மெஹந்தி போடுவது முதல் புடவை ப்ரீபிளீட்டிங் வரை என் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நான் பள்ளியில் படிக்கும் போது மார்கழி மாசம் தோறும் பெரியம்மாவும் நானும் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திடுவோம். அவங்க வாசலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வாங்க. நான் கோலம் போட்டு விட்டு மீண்டும் வந்து தூங்கிடுவேன். மற்ற நாட்களில் வாசலில் கோலம் போடவில்லை என்றாலும், மார்கழி மாதம் 30 நாட்களும் தவறாமல் கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.இந்த மார்கழி மாதம் கைக்குழந்தை இருந்தாலும், போட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கோலம் போட்டு அதற்கு வண்ணங்கள் தீட்டி முழுமையாக பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.
கோலங்களில் கம்பிக் கோலம், புள்ளிக் கோலம், ஊடுபுள்ளி கோலம், பிற புள்ளிக் கோலம் என ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளது. எனக்கு ரங்கோலி ேகாலம்தான் போடப் பிடிக்கும். காரணம், இந்தக் கோலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை எல்லாம் கிடையாது. நம் மனசுக்கு தோணும் டிசைன்களை கலை வண்ணத்துடன் அமைக்க முடியும். புள்ளிக் கோலம் போல் எண்ணிக்கை எல்லாம் கிடையாது.
எவ்வளவு பெரிய அளவிலும் இந்தக் கோலத்தினை வரையலாம். பார்க்கவும் அழகாக இருக்கும். பார்ப்பவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும். அதுதான் ரங்கோலியின் ஸ்பெஷல். இதற்காக நான் எந்த உபகரணங்களையும் பயன்படுத்துவது இல்லை. வீட்டில் இருக்கும் குட்டி ஸ்பூன், வளையல் மற்றும் தட்டினை பயன்படுத்திக்கூட ரங்கோலி தீட்ட முடியும். சில சமயம் வண்ணங்களுக்காக சின்னச் சின்ன குப்பிகளை பயன்படுத்துவேன்.
இதன் தொடர்ச்சியாக ஆடை வடிவமைப்பிலும் ஆர்வமுள்ளது. சின்ன வயசில் விரும்பிய உடைகளை வாங்க முடியாத சூழலில் வளர்ந்தேன். அந்த ஏக்கம்தான் அழகாக உடையமைத்து அதை மற்றவர்களுக்கு போட்டுப் பார்த்து அழகு பார்க்க வேண்டும். அதே சமயம் எனக்குப் பிடித்த டிசைன்களில் உடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். செவிலியர் படிப்பினை தொடர்ந்து ஆடை வடிவமைக்கும் பயிற்சியும் எடுக்க இருக்கிறேன்’’ என்றார் காவ்யா.
தொகுப்பு: திலகவதி