தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்ரகதி, சிற்பக்கலை ஓவியங்களுக்கு புத்துயிர் அளிக்கிறோம்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

சித்ரகதி என்பது ஒரு இந்திய பாரம்பரியக் கலை ஓவியம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் தோன்றிய இந்தக் கலை தன் பாரம்பரியத்தை இழந்து வரும் நிலையில் அதற்கு புத்துயிர் கொடுத்து, அதில் புதுமைகள் செய்து, புதிய பரிணாமங்களுடன் சித்ரகதி ஓவியங்களை படைத்து வருகிறார் ஓவியக்கலைஞர் ஷண்முக ப்ரியா. பாரம்பரிய ஓவியக்கலைகளான சித்ரகதி, தஞ்சாவூர் ஓவியம், நாயக்கர் ஓவியங்கள் மட்டுமின்றி சிற்ப சாஸ்திரம் அடிப்படையில் சிற்பக்கலை ஓவியங்களையும் படைத்து வருகிறார். “ஓவியங்கள் ஆத்மார்த்தமானவை. என்னை உயிர்ப்புடன் இருக்க உதவுகிறது. ஓவியக் கலைஞராக இருப்பதே மிகப்பெரிய பாக்கியம்” எனும் ஷண்முக ப்ரியா, பாரம்பரிய ஓவியங்கள் மீதான ஈர்ப்பை பகிர்கிறார்.

“சிறுவயது முதலே ஓவியங்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆரம்பநிலையில் என் விருப்பப்படி ஓவியங்கள் வரையப் பழகினேன். ஆனால், எனக்கு முறைப்படி ஓவியக்கலை கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அவ்வப்போது நான் சந்திக்கும் ஓவியக் கலைஞர்களிடம் ஓவியம் தொடர்பான நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வேன். கோவில்களில் இருக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பக்கலைகளும் எனக்குள் இந்தக் கலை குறித்து மேலும் ஆர்வத்தினை அதிகரித்தது. ஒரு ஓவியத்தை பார்த்து வரைவதை விட, நானே சுய சிந்தனையாக படைப்புகளை உருவாக்க ஆசைப்படுவேன். ஆதலால் ஓவியக்கலையில் எனக்கொரு தேடல் இருந்தது. பள்ளிப் படிப்பிற்கு பின்னர் தொலைதூரக் கல்வி முறையில் ஓவியக்கலையில் டிப்ளமோ படிப்பை படித்தேன்.

வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பதை வைத்து ஓவியங்கள் வரையணும். ஆசிரியர்கள் அதில் திருத்தங்கள் செய்வார்கள். அரசு சார்பில் வழங்கப்படும் ‘டிராயிங் மாஸ்டர்’ எனும் படிப்பை முடித்ததும், அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை. பள்ளியில் சேர்ந்து மாதம் ஊதியம் பெறும் பணியில் இருந்துவிட்டால், ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்துவிடுவேனோ என்ற தயக்கம் இருந்தது. எனக்கு நிறைய இந்திய பாரம்பரிய ஓவியங்களை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தது’’ என்றவர், சித்ரகதி ஓவியம் குறித்து விளக்குகிறார்.

“ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடிதான் என் சொந்த ஊர். சென்னைக்கு வந்தபின் சென்னை மாமல்லபுரத்தில் ஓவியக்கலைஞர் திருஞானம் என்பவரை சந்தித்தேன். மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், சிற்ப சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். மாமல்லபுரத்தில் என் மாமா வீடு இருந்ததால் அங்கேயே தங்கி அவரிடம் பாரம்பரிய ஓவியம் கற்றேன்.

ஒரு ஓவியப் படைப்பை உருவாக்குகிறோம் எனில் அது தொடர்பான ஆழமான தகவல்களை உள்வாங்கி அதனை முழுமையாக செய்ய வேண்டும் என்பார். அவரிடமிருந்து இது போன்ற பல அறிவுத்திறன்களை நான் கற்றுக்கொண்டேன். நானும் ஓவியம் தொடர்பான புத்தகங்களை தேடி படிப்பது, கலை சார்ந்த இடங்களுக்கு செல்வது, கோவில்களுக்கு சென்று அங்கிருக்கும் பழமையான ஓவியங்கள் மற்றும் சிற்பக்கலைகளை ஆராய்ந்து ஆவணங்கள் தயார் செய்து, அதனைக் கொண்டு என் தனித்துவமான நடையில் ஓவியங்களை வரைவேன்.

தஞ்சாவூர் ஓவியங்களை ஓவியக்கலைஞர் பாலாஜி னிவாசன் என்பவரிடம் கற்றேன். எந்த சந்தேகம் கேட்டாலும் துல்லியமாக பதிலளிப்பார். தவறுகளை திருத்தி எனக்கு விளக்கம் தருவார்.

ஓவியக்கலை எனும் கடலின் ஆழத்தை கண்டறிய எனக்கு வழிகாட்டியாக இருந்தவர். மிகவும் அரிதான இந்திய பாரம்பரிய ஓவியமான சித்ரகதி ஓவியக்கலையை ஆர்வமுள்ள ஓவியர்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது குழுவாக இணைந்து ஒரு ஆர்ட் ப்ராஜெக்ட் செய்தோம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டு தெருக்கூத்து ஓவியங்களையும் சித்ரகதி ஓவியங்களின் பாரம்பரியமான நுணுக்கங்களை குறிப்புகளாகக் கொண்டு அவற்றை ஒன்று சேர்த்து சம காலத்துக்கு ஏற்றாற் போல சித்ரகதி ஓவியங்களை படைக்க திட்ட

மிட்டோம்.

2012ல் பாலாஜி அவர்களின் தலைமையில் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சுய சிந்தனையில் ஒரு தலைப்பினை கருத்தாக கொண்டு, சித்ரகதி ஓவியங்களை படைத்து காட்சிப்படுத்தினோம். எங்களின் இந்தப் படைப்புகள் அதிக கவனம் பெற்றது. சித்ரகதி, 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஓவியக்கலை. அழிவின் விளிம்பில் இருந்த இந்தக் கலை வடிவத்தை மீண்டும் புத்துயிர் பெற செய்ததுதான் எங்கள் படைப்புகளின் சிறப்பு. திரௌபதி பாத்திரத்தை மையமாக வைத்து சித்ரகதி ஓவியத்தை படைத்தேன்.

இதற்காக நிறைய பாரம்பரியமான விஷயங்களை ஆராய்ந்திருக்கிறேன். திரெளபதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். அதில் திரெளபதி பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு கதையை சொல்வார்கள். அங்கு சென்று திரெளபதியின் வரலாற்றை தெரிந்து கொண்டேன். மேலும் தெருக்கூத்து நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் படி மகாபாரதம் எப்படி காண்பிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை ஆராய்ந்து பின்னர் ஓவியங்களை உருவாக்கினோம்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“சித்ரகதி ஓவியம் அரிதானது என்பதால், அதன் சிறப்பம்சங்களை மீட்டெடுக்க வேண்டும். அவற்றை பிரமாண்டமாக காட்சிப்படுத்த வேண்டும். தற்போது கலை பண்பாட்டு துறையில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். முதன் முதலில் திருஞானம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட சிற்ப சாஸ்த்ரா கலையை ஆன்லைன் மூலம் கற்பிக்கிறேன். மிகவும் அரிதான இந்த ஓவியக் கலையை பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கற்கின்றனர். ஆரம்பம், இடைநிலை மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் என மூன்று நிலைகளில் உள்ள ஓவிய மாணவர்களுக்கும் இக்கலையை கற்பிக்கிறேன்.

ஓவியங்கள் வரைவது மன ரீதியான அமைதியை அளிக்கிறது. உதாரணமாக என் வகுப்புகளில் நிறைய இல்லத்தரசிகள் இருக்கின்றனர். சிறுவயதில் கற்றுக்கொள்ள நினைத்து முடியாமல் போன ஆசையாக இது இருக்கலாம். சிலர் மன அமைதி வேண்டி கற்கிறார்கள். சித்ரகதி, தஞ்சாவூர் ஓவியம், நாயக்கர் ஓவியம் போன்ற பாரம்பரியமான ஓவியங்களை அழிந்துவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதனை கடத்த வேண்டும். வருங்கால ஓவியக் கலைஞர்களும், கற்றுக்கொண்டிருப்பவர்களும் நிறைய பயிற்சி செய்து உழைத்தால் ஓவியக் கலையில் சிறந்து விளங்கலாம்” என்றார் ஷண்முக ப்ரியா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Advertisement

Related News