வீட்டிலேயே கழிவு மேலாண்மை செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி
இயற்கை நிறைய வளங்களை நமக்கு அளித்ததோடு மட்டுமின்றி, அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது இயற்கை கழிவு மேலாண்மை. இதன் மூலம் பயோ கேஸ் உற்பத்தி, கம்போஸ்ட், டி கம்போஸ்ட் போன்றவற்றை செய்யலாம். பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கழிவு மேலாண்மை செய்வதன் மூலம் நமக்குத் தேவையான அளவு உரம், பயோ கேஸ் போன்றவற்றை பெற முடியும்.
வீடுகளில் சுலபமாக கழிவு மேலாண்மை செய்யும் அமைப்புகளை விநியோகித்து கழிவு மேலாண்மையை பராமரிப்பதற்கான வழிகாட்டியாகவும் தொழில்முனைவோராகவும் இருந்து வருகிறார் ஹரிணி ரவிக்குமார். சேலத்தில் ‘க்ரீன் கனெக்ட்’ எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இவர், பெண் தொழில்முனைவோர்களுக்கான ஊக்கமாக திகழ்கிறார்.
“நான் படித்தது ஃபேஷன் டெக்னாலஜி. அந்த துறையில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு என் வேலை முற்றிலுமாக மாறியது. என் கணவர் பயோ கேஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் வீடு சேலம் என்பதால் திருமணத்திற்குப் பின் நானும் அவருடன் இணைந்து அவரின் நிறுவனத்தில் வேலை செய்ய துவங்கினேன். நிறுவனத்தில் உள்ள அனைத்து துறைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். 2020க்குப் பிறகு நிறுவனத்தின் முழு பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். என் கணவருக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் இருந்ததால் அவர் அதில் கவனம் செலுத்த தொடங்கினார்.
கழிவு மேலாண்மை தொடர்பாக அரசு, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சுகாதார பராமரிப்பு, கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச் சிகளை நடத்தி இருக்கிறோம். ‘போகி பக்கெட் சேலஞ்ச்’ நிகழ்ச்சியின் மூலம் துணி போன்ற பழைய பொருட்களை எரிக்காமல் அவற்றை மறுசுழற்சி செய்யலாம் என்று மக்களுக்கு உணர்த்தினோம். சிகரெட் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யப்படுவதற்காக ‘சிகரெட் உண்டியல்’ என்ற நிகழ்ச்சியும் நடத்தினோம். பொதுவாக கழிவுகளை சேகரிக்கும் போது அதில் உலர் மற்றும் ஈரக்கழிவுகள் இரண்டுமே ஒன்றாக கலந்திருக்கும். அதை பிரித்தெடுப்பது சவாலாக இருந்தது.
பெரும்பாலான குப்பைக் கழிவுகள் அப்படியே நிலப்பரப்பில் கொட்டப்படுகின்றன. கழிவுகளை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் எதுவும் இப்போது வரை இல்லை. உலர் அல்லது ஈரக்கழிவுகளாக தனித்தனியே இருந்தால்தான் அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தமுடியும். சேகரிக்கப்பட்டு கிடங்கிற்கு வருகின்ற உலர் மற்றும் ஈரக்கழிவுகளை பிரிப்பது கஷ்டம். எனவே, அவை உருவாகும் இடங்களிலேயே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்களிலும் குப்பைக் கழிவுகளை பிரித்து சேகரிக்க வேண்டும். இதுதான் கழிவு மேலாண்மைக்கு உதவக்கூடிய ஒரு தீர்வாக அமையும். இதன் அடிப்படையில் கழிவுகளை உருவாக்கும் இடங்களிலேயே கழிவு மேலாண்மையை மேற்கொள்ள திட்டமிட்டோம்’’ என்றவர் பயோகேஸ் அமைப்பது குறித்து விவரித்தார்.
‘‘ஒவ்வொரு வீட்டிலேயே பயோ கேஸ் உற்பத்தி செய்யும் அமைப்பு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். கழிவு மேலாண்மை செய்து அவற்றிலிருந்து பெறப்படும் பயோ கேஸினை சமையல் எரிவாயுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வீட்டில் உருவாகும் கழிவுகளிலிருந்தே பலன் அடையலாம். பயோ கேஸ் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தாலும், வீடுகளில் பரவலாக்கப்படவில்லை. கழிவு மேலாண்மைக்கான அமைப்பும் அதுகுறித்த விழிப்புணர்வும் இருந்தால் வீடுகளிலேயே பயோ கேஸ் உற்பத்தியினை செய்ய முடியும் என்பதால், பயோ கேஸ் பிளான்ட் பற்றி மக்களிடையே பரவச் செய்தோம். கடந்த பத்தாண்டுகளாக பயோ கேஸ் அமைப்பினை பயன்படுத்துபவர்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
அதில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதை சரியாக பராமரிக்க முடியாத சூழல் இருப்பதை ெதரிந்துகொண்டோம். எனவே, வீடுகளில் சிறிய இடத்தில் வைக்கும்படி வடிவமைத்து, அதனை எளிதாக பராமரிக்கும் முறையில் கழிவு மேலாண்மை தயாரிப்புகளை அமைக்க முற்பட்டோம். அடுத்த மூன்றரை வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயலில் ஈடுபட்டு வீட்டிலேயே கழிவு மேலாண்மை செய்யக்கூடிய ‘கேஸ்டுடே’ (GasToday) எனும் தயாரிப்பை உருவாக்கியுள்ளோம்” என்றவர், அதன் நன்மைகளை விளக்கினார்.
“இன்று பல வீடுகளில் கேஸ்டுடே நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மட்டுமின்றி வணிக ரீதியான இடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை போன்ற இடங்களிலும் கூட பயன்படுத்துகின்றனர். பயோ கேஸ் சமையல் எரிவாயுவாக பயன்படுத்தும் போது, எரிவாயுவின் செலவை கணிசமாக குறைக்கலாம். பயோ கேஸ் பிளான்ட் என்பது காற்றில்லாத செரிமானம் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது காற்றுப்புகாத வண்ணம் இருக்கும். இதன் உற்பத்தியை தொடங்க, முதலில் பாக்டீரியா உற்பத்திக்காக இதனுள் மாட்டுச்சாணம் நிரப்பப்படும். ஒரு வாரம் கழித்துதான் அதில் இருந்து வாயு உற்பத்தியாகும். பின்னர் தினமும் ஈரக்கழிவுகளை இதனுள் போடத் தொடங்கியதும் அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து பயோ கேஸ் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். இதை தினசரி செயல்முறையாக கடைபிடிக்கலாம். இது ஒரு மூடப்பட்ட அமைப்பு என்பதால் வெளியில் நாற்றம் பரவாது. கசிவு இருந்தாலும் தீ பற்றிக்கொள்ளும் அளவு தீவிரம் இருக்காது. LPGயை விடவும் பயோ கேஸ் பாதுகாப்பானது.
பயோ கேஸ் பிளான்டை பராமரிக்க செலவு ஆகாது. ஒருமுறை நிறுவினால் காலம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஈரக்கழிவுகளை சேகரித்து மேலாண்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதிலிருந்து உருவாகும் பயோ கேஸினை தினமும் பயன்படுத்த வேண்டும். இதில் செலுத்தப்படும் கழிவுகள் மக்கி திரவ உரமாக கிடைக்கும். அந்த உரத்தினை வீட்டுத் தோட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களது முக்கிய நோக்கம் கழிவுகள் உருவாகும் இடத்திற்கு அருகிலேயே பிரித்து மறுசுழற்சி செய்யப்படும் பொருளாக உருவாக்க வேண்டும். சமூகமாக ஆதரிப்பதால், பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை மூலம் பல நன்மைகளை பெறலாம்.
மக்களிடையே குப்பைக் கழிவுகளை பிரித்தல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லாதிருத்தலே இதற்கான சவாலாக இருக்கிறது. எல்லோர் வீடுகளிலும் கழிவு மேலாண்மை செய்யும் திட்டத்தை அரசு ஆதரித்தால், நகரங்களிலும் கிராமங்களிலும் அரசின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு நபருக்குமான கழிவு மேலாண்மை செலவு குறையும். மாநகராட்சி சார்பில் நம் வீடுகளுக்கே வந்து குப்பைக் கழிவுகளை சேகரித்து செல்கின்றனர்.
ஆனாலும், நாம் குப்பைகளை பிரித்து கொடுப்பதில்லை. சேகரிக்கப்படும் போது கழிவுகளை பிரித்துதான் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பான நடைமுறையை அரசு தீவிரமாக கடைபிடித்தால், குப்பைகளை பிரித்தல் செயல்முறையில் உள்ள சவாலினை குறைக்கலாம். பயோ கேஸ் பயன்பாட்டினை விரும்பாதவர்களுக்கு, வீட்டில் உருவாகும் காய்கறி, தோட்ட கழிவுகளை மேலாண்மை செய்ய ‘ஹோம் கம்போஸ்ட்’ எனும் உரத் தொட்டியினை வழங்கி வருகிறோம். மேலும், கழிவு நீர் மேலாண்மைக்கான தயாரிப்பு அமைப்புகளையும் வழங்குகிறோம்.
ஒரு பெண் தொழில்முனைவோராக செயல்படுவதற்கு முதலில் குடும்பத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. மற்றபடி அரசு மற்றும் அமைப்புகள் சார்பாகவும் பெண்களுக்கு தொழில்முனைவோர்களுக்கான பயிற்சிகளும், உதவிகளும் கிடைக்கின்றன. தொழில் செய்ய விரும்பும் பெண்கள் நிச்சயம் அவற்றை பயன்படுத்தி முன்னேறலாம்” என ஊக்கமளித்தார் ஹரிணி.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்