இது மூன்று தலைமுறையின் வெற்றி!
நன்றி குங்குமம் தோழி
‘‘1942ல் எங்கள் தாத்தா கணபதி பிள்ளை வெண்ணெய், நெய் விற்பனைக்கென, மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொடங்கிய கடை இது. தற்போது கற்பகம் ஹோட்டல் இருக்கிற இடம் இது’’ எனப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்த கணபதி தாத்தாவின் பேரன்களான சரவணன் மற்றும் பாலாஜி இருவரும், ‘‘எங்கள் கடைக்கு 83 வருட பாரம்பரியம் உள்ளது’’ என்றவாறே, தங்களது தாத்தா கணபதி பிள்ளையின் கடையின் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை காட்ட, மயிலை கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி இருந்த நான்கு மாட வீதிகளின் தோற்றம் நமக்கு ஆச்சரியத்தை தந்தது.
‘‘தெற்கு மாட வீதியில் அப்போது நான்கே நான்கு கடைகள்தான் இருந்ததாம். அதில் ஒன்றுதான் எங்கள் தாத்தா கணபதி அண்ட் கோ வெண்ணெய், நெய் கடை. தாத்தா காலத்திலே ஊத்துக்குளியில் இருந்து வெண்ணெய் கொண்டு வந்து, கடையில் நேரடியாகக் காய்ச்சி வியாபாரம் செய்து வந்தாராம்.தெற்கு மாட வீதியை கடக்கும்போது அடிக்கும் நெய்யின் மணம் மற்றும் தரத்திற்காகவே வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, தொழிலை மேலும் விரிவுப்படுத்தி இருக்கிறார் தாத்தா’’ என பழைய நினைவுகளில் மூழ்கிப் பேச ஆரம்பித்தனர், மூன்றாவது தலைமுறையாக, தாத்தாவின் பெயரிலேயே தொழிலை விரிவுப்படுத்தி முத்திரை பதித்து வரும் பேரன்கள் சரவணனும்... பாலாஜியும்.
‘‘ஆரம்பத்தில் மயிலாப்பூர் கிராமம் மாதிரியான தோற்றத்தில்தான் இருந்திருக்கு. இதனால் தாத்தாவின் கடையை ஒட்டி இருந்த ஆடம் தெருவில், தாத்தாவும் பாட்டியும் 50 மாடுகளைச் சொந்தமாக வைத்து பராமரித்து, பால், தயிர் விற்பனையையும் இணைத்ததுடன், உளுந்து அப்பளத்தையும் வீட்டிலேயே தயாரித்து, கடையில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார் தாத்தா.எங்கள் அப்பா சங்கரன் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டே தாத்தாவிற்கு துணையாக வியாபாரத்தையும் கவனித்து வந்திருக்கிறார்.
தாத்தாவின் இறப்பிற்குப் பிறகு, 1970களில் கடையின் பொறுப்பை கைகளில் எடுத்த அப்பா சங்கரன், கணபதி அண்ட் கோ என்ற கடையின் பெயரை கணபதி’ஸ் பட்டர் அண்ட் கீ என மாற்றி வியாபாரத்தை தொடர்ந்திருக்கிறார்’’ என, நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத, பரபரப்பும் கூட்டம் நெரிசலும் இல்லாத மயிலை வீதிகளை மீண்டும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் காட்டியவாறே, ‘‘தற்போது இருக்கின்ற Gen Z தலைமுறைக்கு புரிகிற மொழியில் சொல்லணும்னா, ஹோட்டல் சங்கீதாவுக்கு நான்கு கடை முன்னாடி இருந்த கடை இது’’வெனப் புன்னகைக்கிறார் மூன்றாவது தலைமுறையான கணபதி தாத்தாவின் பேரன் சரவணன்.
சரவணனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அவரின் தம்பி பாலாஜி, ‘‘வியாபாரத்தை விரிவுப்படுத்திய அப்பா அப்பளத்துடன் ஊறுகாய், பொடி வகைகள், வத்தல், வடாம், தின்பண்டங்களான கை முறுக்கு, தட்டை, ரிப்பன் பக்கோடா, சீடை போன்றவற்றையும், வீட்டிலேயே ஆள் வைத்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். நானும் அண்ணணும் அப்போது பள்ளி, கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, அப்பாவோடு கடையில் நின்று வியாபாரத்தை கவனிப்போம்.
2009ல் கடையை விரிவுப்படுத்த விரும்பி, மயிலை சித்திரைக்குளம் பகுதிக்கு எங்கள் கடையை மாற்றினோம். அப்பாவிற்குப் பிறகு நாங்கள் பொறுப்பேற்றதும், விடாமல் தாத்தாவின் பாணியினை
அப்படியே தொடர்ந்து, இப்போதும் ஊத்துக்குளியில் இருந்து வெண்ணெய் கொண்டு வந்து, மிகப்பெரிய மின் கலனில் அவற்றைக் காய்ச்சி நெய் தயாரிக்கின்றோம். நாங்கள் நெய் தயாரிக்கின்ற முறையை பார்க்க ஒரு திருவிழா மாதிரியே இருக்கும். காலத்திற்கு ஏற்ப நெய் தயாரிப்பின் டெக்னாலஜி மட்டும்தான் மாறி இருக்கிறதே தவிர, நெய்யின் தரமும் மணமும் அதேதான்’’
என்கின்றனர் இருவருமாக.
‘‘வெண்ணெய், நெய்யுடன், சேலத்தில் இருந்து வாகை மரச்செக்கில் ஆட்டித் தயாராகி வரும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம், தாராபுரம் ஓமப்பொடி வடாம், வில்லிபுத்தூர் பால்கோவா, திரட்டிப்பால், கோயில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி மனோகரம், பாலக்காடு வேப்பிலைக்கட்டி, மார்த்தாண்டம் தேன் என அந்தந்த ஊர்களின் மண் மணம் சார்ந்த உணவுப் பொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
திருமணத்திற்குத் தேவையான சீர் பட்சணங்கள், கிருஷ்ண ஜெயந்தி காம்போஸ், தீபாவளி காம்போஸ், ஸ்வீட்ஸ் மற்றும் சேவரிஸ் இவற்றுடன் வத்தல், வடாம், அரிசி அப்பளம், சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிப் பொடியில் தொடங்கி... 30 வகையான பொடி வகைகள், 30 விதமான ஊறுகாய் வகைகள், பல்வேறு தொக்கு வகைகள், கருப்பு கவுனி அரிசி தோசை மாவு, மாப்பிள்ளை சம்பா அரிசியில் தோசை மாவு, முடக்கத்தான் கீரை தோசை மாவு, ஆப்பம், அடை மாவு, நவதானிய அடை மிக்ஸ், மல்டி மில்லட் மிக்ஸ்டு தோசை மாவு எனவும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
இது வெறும் கடை மட்டுமல்ல... எங்களின் அடையாளம்’’ என கட்டை விரலை உயர்த்தி வெற்றிப் புன்னகை காட்டிய இருவரும், ‘‘நாங்கள் உணவுப் பொருட்களில் எந்தவிதமான செயற்கை சுவையூட்டிகளையோ, வண்ணங்களையோ இதுவரை இணைத்ததில்லை. ஆரோக்கியத்தை கெடுக்காத வகையில், வீட்டுப் பக்குவத்தில், எங்கள் மேற்பார்வையிலேயே தயாராகி விற்பனைக்கு
வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவை கருதி இன்று ஆன்லைன் விற்பனையிலும் நாங்கள் இருக்கிறோம்’’ என்றவர்கள், ‘‘தமிழ்நாட்டைக் கடந்து, இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கடைக்கு வந்து வாங்கினால் என்ன விலையோ, அதே விலைதான் ஆன்லைன் விற்பனையிலும்.
சென்னைக்குள் என்றால் மட்டுமே நாங்களே டோர் டெலிவரி செய்கிறோம். பிற இடங்களுக்கு கொரியரில் பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. கொரியர் செலவு மட்டுமே இதில் சேர்க்கப்படும். இதற்கென தனியாக பேக்கிங் துறையும் எங்களிடம் உள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் எங்களிடம் அதிகம் வேலை செய்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் ஒருசில மாணவிகளும் பகுதி நேரமாக வந்து வேலை பார்த்துச் செல்கிறார்கள். தயாரிப்பு, விற்பனை தாண்டி, பில்லிங், பேக்கிங், ஆன்லைன் விற்பனையிலும் பெண்கள் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு குடும்பமாகவே இணைந்து செயல்படுகிறோம்.
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் தொடர்ந்து பெற்று வருவதால்தான், கடந்த நூற்றாண்டில் 1942ல் கடை தொடங்கிய போது இருந்த அதே உற்சாகத்தையும், துள்ளலையும் இந்தநூற்றாண்டிலும் தலைமுறை கடந்து கொண்டு செல்கிறோம். 83 ஆண்டுகளைத் தொட்டுவிட்ட எங்கள் தொழிலின் இந்தப் பயணம், மூன்றாவது தலைமுறையிலும், கால மாற்றத்திற்கு ஏற்ற விஷயங்களை உள்ளடக்கி, அதே இளமை புதுமையுடன் தொடர்கிறது.
முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள எங்களின் மயிலாப்பூர் கணபதி’ஸ், உணவு கட்டுப்பாட்டுத் துறையின் தரச் சான்றிதழையும் பெற்றிருக்கிறது’’ என்கிற தகவலையும் நம்மிடத்தில் பதிவு செய்த சரவணன், பி.காம். எல்.எல்.பி படித்தவராம். அவரது தம்பி பாலாஜி பி.ஏ. கார்ப்பரேட் படித்தவராம். இருவருமே முழு நேரமாக தொழிலை கவனித்து வருகிற நிலையில், கடையின் கிளையினை மேற்கு மாம்பலத்திலும் விரிவுப்படுத்தி இருக்கிறார்கள்.‘‘எங்களின் அடுத்த தலைமுறையும் இந்தத் தொழிலை விடாமல் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் என்றாலும், அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்தானே’’ என்றவாறு இருவருமாக விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்