பேசவோ... மற்றவர்களை நம்பவோ தயங்குவார்கள்!
நன்றி குங்குமம் தோழி
மனசு சோர்வாக இருக்கும் போது... ஒரு நல்ல ரம்மியமான பாடலை கேட்டால் அந்த சோர்வு பாட்டோடு பாட்டாக கலந்து மறைந்து போகும். இது பெரியவர்களுக்கு மட்டுமில்லை குழந்தைகளுக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட குழந்தைகளின் மனநிலையை மாற்ற கலையை கருவியாக அமைத்து மாணவர்களை வழிநடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த ராம். இவர் ‘நலந்தா’ என்ற பெயரில் அமைப்பு துவங்கி, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தை களின் மனநிலையை கலை மூலம் மாற்றி அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறார்.‘‘நலந்தா அமைப்பினை 2005ல் ஆரம்பித்தோம். 20 வருஷமா அரசுப் பள்ளி மற்றும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களுக்காக வேலை பார்த்து வருகிறோம். இதில் பெற்றோர்களால் கைவிடப்பட்டு இல்லத்தில் மற்றும் கம்யூனிட்டியில் உள்ள குழந்தைகளுக்கும் எங்களின் சேவையினை வழங்கி வருகிறோம். அதாவது, பிறந்த குழந்தைகள் முதல் 21 வயதுள்ளவர்களின் மன ஆரோக்கியம், நல்வாழ்வினை கலை மூலம் மேம்படுத்துவதுதான் எங்களின் முக்கிய வேலை. குழந்தைகள் அப்படி என்ன பிரச்னையை சந்தித்திருப்பார்கள் என்ற எண்ணம் ஏற்படும். அம்மா, அப்பா அரவணைப்பில் அனைத்து வசதிகளுடன் வாழும் குழந்தைகள் இது போன்ற பிரச்னைகளை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால், பின்தங்கிய நிலையில் வறுமையில் வாழும் குழந்தைகள், பெற்றோர்கள் இல்லாமல் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு சமூகத்தில் தங்களைச் சுற்றி நடக்கும் வன்முறைகளால் அவர்களின் மனதில் ஒருவித அச்சம் மற்றும் பதற்றத்தினை ஏற்படுத்தும். அந்த பயம் அவர்களின் திறமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது.
பள்ளிக்கூடம் செல்வதையே மன உளைச்சலாய் கருதுவார்கள். இதற்கு சரியான தீர்வு கலை என்று புரிந்தது. கதை, கவிதை, பாட்டு, நடனம், கைவினை மூலமாக அவர்களின் மனதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான ஒரு தீர்வினை கொடுக்கும் போது பயம் விலகி அவர்கள் அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்’’ என்றவர், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி, பஞ்சாப், ஜார்கண்ட், ஜம்மு அண்ட் காஷ்மீர் என பல மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறார். ‘‘நான் அடிப்படையில் ஐ.டி ஊழியராக வேலை பார்த்து வந்தேன். எனக்கு கலை மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. சின்ன வயசில் சரியாக தேர்வு எழுதவில்லை என்றால் வீட்டில் திட்டுவார்கள், அடிப்பார்கள் என்ற பயம் எனக்கு இருக்கும். 10ம் வகுப்பு படிக்கும் போது கலைத்துறை சேர்ந்த ஆசிரியர் மூலமாக நாடகத் துறையில் ஈடுபட்டேன். மேடையில் ஏறி நடித்த போது தன்னம்பிக்கை கொடுத்தது. பயம் விலகி தைரியம் வந்தது. அதன் பிறகு 2002ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் என்னை பெரியளவில் பாதித்தது. மனிதருக்குள் இப்படி ஒரு வன்முறை இருக்குமான்னு தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அறியாமை என்று புரிந்தது. அதன் பிறகு நாகப்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் கேம்பில் வாலன்டியர் செய்தேன். அங்குள்ள குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றையும் இழந்து அவர்களின் மனதில் ஒருவித பயம் தென்பட்டது. அதை நீக்க நாடகங்களை அவர்கள் மூலமாக அரங்கேற்றினேன்.
குழந்தை தொழிலாளியாக வேலை பார்க்கும் குழந்தைகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டேன். சிதம்பரம் அருகே குழந்தைகளை கைகள் சிறியதாக இருக்கும் என்பதால் கொலுசு செய்ய கூலி வேலைக்கு நியமிப்பாங்க. அந்தக் குழந்தைகளை மீட்டெடுத்தோம். தருமபுரியில் செங்கல் சூளையில் உள்ள குழந்தைகளையும் மீட்டு அரசிடம் ஒப்படைத்தோம். இந்த காலக்கட்டத்தில் வர்க்ஷாப் மூலமாகத்தான் நாங்க செயல்பட்டு வந்தோம். ஆனால், இந்த சேவை தொடர்ந்து நீடித்தால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதால், முதலில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டோம்’’ என்றவர், அமைப்பின் செயல்பாடு குறித்து விவரித்தார். ‘‘நாங்க மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல கட்ட வேலைகளில் ஈடுபடுகிறோம். ஒன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் நாங்க பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது மாணவர்களின் மனநிலையினை தொடர்ந்து மேம்படுத்த உதவும். இரண்டாவது ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தில் நாங்க நேரடியாக பயிற்சி அளிக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் கலை சார்ந்த படிப்பினை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து கல்வி துறையினருடன் கலந்து ஆலோசித்து அவர்களின் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக பருவ வயதில் உள்ள மாணவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
அதற்காக டிஜிட்டல் முறையில் மனநிலையை மேம்படுத்தும் காணொலியை தயாரித்துள்ளோம். 6000 பள்ளிகளில் இதனை பின்பற்றுகிறார்கள். குழந்தைகள் எந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் மனதில் தான் தப்பானவர்கள், எதற்கும் தகுதியானவர்கள் இல்லை என்ற எண்ணம் தோன்றும். காரணம், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அவர்களே அதனை சந்தித்திருப்பார்கள். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு தங்களையே காயப்படுத்திக் கொள்வார்கள். அதைப்போக்க நாடகம், பாட்டு, கைவினை மூலமாக மனநல ஆலோசகரின் உதவியுடன் குழந்தைகளின் எண்ணத்தை மாற்ற வேலை செய்வோம். அவர்கள் மனதில் புதைந்திருந்த பயத்தை வெளியே கொண்டு வர இசை, நடனம் மிகவும் உதவியது. உதாரணத்திற்கு குழந்தை தொழிலாளிகளை மீட்டு, அவர்களிடம் தங்களை சுற்றியுள்ள பகுதி எது பாதுகாப்பானது, பாதுகாப்பு இல்லாதது எது என்று வரைய சொன்னபோது, அதனை வரைந்து சிவப்பு வண்ணம் தீட்டினார்கள். சிலர் தங்களின் வீடே பாதுகாப்பு இல்லை என்றார்கள். வெளிப்படையா பேச தயங்குவார்கள், யாரையும் நம்பமாட்டார்கள். அவர்களை அந்த கூட்டிற்குள் இருந்து வெளியே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வரணும். நம் மேல் நம்பிக்கை ஏற்பட்டால்தான் மனம் திறப்பாங்க. அதன் பிறகுதான் கலை மூலம் அவர்களின் மனநிலையை மாற்ற டெக்னிக்குகளை பயன்படுத்துவோம்’’ என்றவர், தன் அமைப்பு குழந்தைகளுக்காக இசைக்குழு ஒன்றை அமைத்துள்ளார். விருப்பம் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர் மூலம் பாட்டு சொல்லிக் கொடுத்தோம். அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஒரு இசைக் குழுவினை அமைத்துள்ளனர். அமைப்பு மூலமாக தனிப்பட்ட நிகழ்ச்சியும் செய்வோம் அல்லது இசைக்குழுவுடன் இணைந்தும் செயல்படுவோம். அதன் வரிசையில் கடந்த மாதம் ‘விருந்து’ என்ற நிகழ்வினை நடத்தினோம். அமைப்பு துவங்கி 20 வருடமாகிறது. அதை கொண்டாடும் வகையிலும், இதன் மூலம் திரட்டப்படும் நிதியினை மாணவர்களின் மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்தவும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். பிரபல நட்சத்திர ஓட்டலில் செஃப் ராகேஷ் அவர்கள் பாரம்பரிய உணவினை புது ஸ்டைலில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அதன் மூலம் இந்தியா முழுதும் உள்ள மாணவர்களின் நலனை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.
தொகுப்பு: ஷன்மதி