ஒரே மகள் என்றதும் அவர்களின் முகம் வாடியது!
நன்றி குங்குமம் தோழி
“நாங்கள் லட்சம் சிறுமிகள், இளம்பெண்களை படிக்க வைத்துள்ளோம்’’ என்கிறார் சஃபீனா ஹுஸைன். ‘பெண்களைப் படிக்க வையுங்கள்’ (Educate Girls) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினை நடத்திவரும் சஃபீனா ஹுஸைனை 2025ம் ஆண்டுக்கான ‘ரமோன் மகஸேஸே விருது’ வழங்குவதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆசியாவின் நோபல் பரிசு என்று சிறப்பிக்கப்படும் ‘மகஸேஸே விருது’ மூலம் சஃபீனாவின் அமைப்பிற்கு சுமார் 45 லட்சம் ரூபாய், இம்மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பரிசளிக்கப்படுகிறது.
2007ல் தொடங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனத்திற்கு வட இந்தியாவில் மட்டுமே நான்கு கிளைகள் உள்ளது. சுமார் 25,000 கிராமங்களில் இந்த அமைப்பின் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வியை பெண்களிடையே பரப்பியதற்காக உலகளாவிய அங்கீகாரமான 2023ம் ஆண்டுக்கான ‘WISE’ விருதை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் சஃபீனா பெற்றுள்ளார்.
‘‘என் அப்பா இஸ்லாமியர். அம்மா இந்து. கல்லூரியில் ஒன்றாகப் படித்தார்கள். இருவரும் லக்னோவைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் கலப்பு திருமணங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு எல்லாம் கிடையாது. என் பெற்ேறார் இருவரும் அவர்கள் வீட்டின் அனுமதி இல்லாமல்தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு டெல்லியில் குடியேறினார்கள். நான் டெல்லியில்தான் பிறந்தேன்.
எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் என் பெற்ேறார் நான் 2 படிக்கும் போது பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நான் படிப்பைத் தொடரவில்லை. மூன்று ஆண்டுகள் எதுவுமே செய்யாமல் வீட்டில் அப்பாவுடன் இருந்தேன். அப்பாவின் உறவினர்கள் எல்லோரும் இனிமேல் எதற்கு படிக்க வைக்க வேண்டும். திருமணம் செய்து வைக்க சொல்லி அப்பாவிடம் கூறினார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
என் நிலைமையை கேள்விப்பட்டு, லக்னோவில் வாழும் அத்தை ஒரு தேவதைப் போல என்னைக் காப்பாற்ற வந்தார். அவர் அப்பாவிடம், ‘உன்னாலும் உன் மனைவியாலும் இவள் பல துன்பங்களை கடந்திருக்கிறாள். நான் அவளை இனி பார்த்துக் கொள்கிறேன். அவளுக்கு என்ன செய்ய வேண்டுமோ நான் செய்து கொள்கிறேன்’ என்று அப்பாவிடம் சொன்னவர் அவருடன் என்னை லண்டனுக்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ கல்லூரியில் படிக்க அனுமதியும் கிடைத்தது. அது என் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியது. படிப்பு முடித்துவிட்டு அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவுக்கு வேலைக்காக சென்றேன். அங்கு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களில் பின்தங்கிய சமூகங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தியாவிற்கு திரும்பினேன்’’ என்றவர் அமைப்பு ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.
‘‘இந்தியா திரும்பிய பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தில் முசோரிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய அளவில் சுகாதார மருத்துவமனையை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, என் தந்தை என்னைப் பார்க்க வந்தார். அந்தக் கிராமத்தில் உள்ள பெண்கள் அவரிடம் எத்தனை குழந்தைகள் என்று கேட்டபோது, அவர் பெருமையாக ‘என் ஒரே மகள் இவர்தான்’ என்று என்னை சுட்டிக் காண்பித்தார். அதைக் கேட்டதும் அந்தப் பெண்களின் முகம் எல்லாம் வாடியது. அப்போதுதான் புரிந்தது இன்றும் நம் சமூகத்தில் ஆண்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படுவதை புரிந்து கொண்டேன்.
படிப்பைத் தொடர முடியாமல் நான் ஸ்தம்பித்து நின்ற நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன். அதன் அடிப்படையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க நினைத்தேன். பொதுவாக பெண்கள் விரும்பியது கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனாலேயே பெண்கள் தங்களின் லட்சியத்தை உதறிவிட்டு சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்கிறார்கள். லண்டன் வாசம், உலகம் என்னைப் பார்க்கும் விதத்தை மாற்றி இருந்தது. ஒவ்வொரு பெண்ணும் நான் பெற்ற வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்று விரும்பினேன். பெண்களுக்கான கல்வியின் மகத்துவத்தை உரக்கச் சொல்ல 2007ல் ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ என்ற பெயரில் பொதுநல அமைப்பை உருவாக்கினேன்.
பெண்கள் கல்விக்காக பணியாற்ற விரும்பினாலும், எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்குச் சென்றேன். அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே லட்சியத்தை நிறைவேற்ற முடியும் என்று உணர்ந்தேன். கல்வியில் பாலின இடைவெளி மிக முக்கியமானதாக இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை பெற்றேன். 26 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்கள் ராஜஸ்தானில் இருந்தன. அதனால் அந்த மாநிலத்தையே தேர்வு செய்தேன். வீட்டில் ஆடு, மாடு இருந்தால் அதைச் சொத்து என்றும், பெண் இருந்தால் சுமை என்றும் கருதுகிற காலம். படிப்பை யாராலும் திருடவோ, எரிக்கவோ, அடித்து விரட்டவோ முடியாது. இறக்கும் நாள் வரை படிப்புதான் கூட துணையாக நிற்கும் என்று புரிய வைக்க முயற்சித்தோம்.
தொடக்கத்தில் ராஜஸ்தானில் கிராமங்களுக்குச் சென்று பெண்களுடன் பேசினேன். அவர்களோ பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாரில்லை. பல முறை பேசிப் பார்த்தும், விளக்கிச் சொல்லியும் பலன் இல்லை. கிராமங்களில் எங்களது கண்ணோட்டத்துடன் இருக்கும் ஆண்களை கண்டுபிடித்து அவர்களை பேச வைத்தோம். காலம் மாற, பெண்களின் கண்ணோட்டமும் மாறியது. மக்கள் மனதில் பெண் கல்விக்கான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல தருணங்களில் எனது இரண்டு மகள்களையும் கிராமங்களுக்கு உடன் அழைத்துச் செல்வேன்’’ என்றவருக்கு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
மத்திய, மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படும் ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லாத பெண் பிள்ளைகளை தேடிப்பிடித்து தன்னார்வலர்கள் பள்ளியில் சேர்க்கிறார்கள். இதுவரை 24,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான பெண்களை பள்ளியில் சேர்த்துள்ளோம். ஒரு பெண் பிள்ளைக்கு கல்வி கிடைத்தால் அவள் தன் திறன்களை வளர்த்துக் கொள்வாள். மேலும், தன்னம்பிக்கையுடன் அவள் தனது சொந்த வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதை பார்க்க முடிந்தது. தனது பெயரை எழுத தெரியவும், என் மகள் படிக்கிறாள் என்று பெற்றோர்கள் பெருமையுடன் கூறவேண்டும். இந்த மாற்றம் சமூகத்தில் ஏற்படவேண்டும். அதற்காகத்தான் நாங்க செயல்பட்டு வருகிறோம்’’ என்றார் சஃபீனா ஹுஸைன்.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி