எவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்தேனோ அவ்வளவு உறுதியாக மாறினேன்..!!
சிறந்த விளையாட்டு வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ். 18 வயதில் விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்தினால் இனி அவரால் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேஷனல் கேம்ப் நடந்து கொண்டிருந்த இடத்தில்தான் அவருக்கு இந்த சம்பவம் நடந்தது. அவரால் மேலும் விளையாட முடியாது என்பதால், தலைமை பயிற்சியாளர் அவரை திரும்பி வருமாறு கூறினார். ஆனால், அஞ்சு மனம் தளரவில்லை. தன்னால் முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தார். 2003ல் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை வென்றார். நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக தடகள இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார். பெண்களுக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் தேசிய அளவிலான சாதனையும் படைத்தார். விளையாட்டு வீராங்கனையான இவர், தற்போது அஞ்சு பாபி ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் (Anju Bobby Sports Foundation) எனும் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.
தன் அகாடமியில் பயிலும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்க்கையில் போராடும் மனப்பான்மையையும் சேர்த்து கற்பிக்கிறார். ஒரு விளையாட்டு வீரராக தான் கடந்துவந்த சிக்கலான பாதைகள் குறித்து பகிர்ந்தார் அஞ்சு.“நான் விளையாட்டுத் துறையில் அடி எடுத்து வைத்த காலத்தில் பழமைவாத சூழல் என்றுதான் சொல்ல வேண்டும். மதம் மற்றும் சமூகம் சார்ந்தும் பல தடைகளை சந்திக்க வேண்டும். ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் டீ-சர்ட் போன்ற ஸ்போர்ட்ஸ் வகை உடைகளை அணியும் போதெல்லாம் என்னை விமர்சித்தார்கள். ஐரோப்பிய விளையாட்டு வீரர்களை போல 2- பீஸ் ஆடைகளை அணியவே நான் பயந்தேன். நான் மட்டுமின்றி என் அம்மாவும் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. ‘ஏன் உன் மகளை விளையாட்டுகளில் ஈடுபட அனுப்புகிறாய்? என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், என் அம்மா என் கனவை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக இருந்தார். ஒரு தடகள வீரராக பாலியல் துன்புறுத்தலை நான் சந்தித்ததில்லை. ஆனால், வேறு வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்ற போது நான் அணிந்திருந்த சீருடை குறித்து பல கருத்துக்கள் எழுந்தாலும் நான் அவற்றை பொருட்படுத்தாமல் விளையாடினேன்.
எவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்தேனோ அவ்வளவு உறுதியாக மாறினேன். விளையாட்டில் ஈடுபட்டாலும், நான் சுங்கத்துறையில் அரசாங்க வேலையில் இருந்தேன். தேசிய அளவில் நான் பதக்கம் வென்ற போதும், எனக்கு உயர் பதவி வழங்கப்படவில்லை. வேலையை ராஜினாமா செய்தேன்” என்றவர், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டார். “இன்று விளையாட்டுத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு திறமைக்கு ஏற்ப தகுதி கிடைக்கிறது. உடைகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. பெண் நிர்வாகிகள் பலரும் விளையாட்டுத்துறையில் இருக்கின்றனர். நானும் இந்திய தடகள கூட்டமைப்பின் (Athletics Federation of India) மூத்த துணைத் தலைவராக இருக்கிறேன். ஆனால், நகரம் மற்றும் கிராமங்களில் இன்றும் வேறுபாட்டினை காண முடிகிறது. கிராமங்களில் திறமையானவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால், தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியால் அவர்களும் படிப்படியா வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். எதிர்ப்புகளை எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்க முன்வருகிறார்கள். மறுபக்கம் நகர்ப்புற குழந்தைகளுக்கு எல்லா நன்மைகளும் கிடைத்துவிடுவதால் அவர்கள் வசதி நிலையிலேயே இருந்துவிடுகின்றனர்” என்றவர், தன் எதிர்கால இலக்குகள் குறித்து பகிர்ந்தார்.
“என்னுடைய அமைப்பு மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க விரும்புகிறேன். என்னால் ஒரு பெண்ணிற்கு உதவ முடிகிறதென்றால், அவளுடைய குடும்பத்திற்கும் மட்டுமின்றி, அந்தக் கிராமத்திற்கே உதவ விரும்புகிறேன். காரணம், ஒரு பெண் நல்லநிலைக்கு வந்தால், அவளால் சமூகத்திற்கு ஏதேனும் உதவிகளை செய்ய முடியும். நான் பயிற்றுவிக்கும் மாணவிகள் உலகம் முழுதும் சென்று இது போன்ற செயலை தொடர வேண்டும். விளையாட்டு வீராங்கனைகள் நாட்டின் பிரதிநிதிகள். அவர்களிடம் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும். பெண்களுக்கு நியாயமான மற்றும் சுதந்திரமான இடமாக விளையாட்டுத்துறை மாறவேண்டும். உலகில் உள்ள எல்லா பெண் விளையாட்டு வீரர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்... உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள், கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள், திறமைகளை மெருகூட்ட முயற்சி செய்யுங்கள், உயர்ந்த கனவை காணுங்கள். ஒருநாள் நிச்சயம் அந்தக் கனவை அடைவீர்கள்” என்று விளையாட்டு வீராங்கனைகளை உத்வேகப்படுத்துகிறார் அஞ்சு பாபி ஜார்ஜ்.
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள், கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள், திறமைகளை மெருகூட்ட முயற்சி செய்யுங்கள், உயர்ந்த கனவை காணுங்கள். ஒருநாள் நிச்சயம் அந்தக் கனவை அடைவீர்கள்!