நடனமும் எழுத்தும் தேடித்தந்த வெற்றி!
நன்றி குங்குமம் தோழி
‘‘மனிதனின் உள்ளத்தோடும், உணர்வோடும் இணைந்தது கலை. பல வகைப்பட்ட கலையில் நாட்டியக்கலையும் ஒன்று. தமிழர்கள் வளர்த்த தொன்மைக் கலைகளில் இது ஒன்றாகும். மனதில் உண்டாகும் உணர்ச்சிகளையும், கருத்துகளையும் அழகான பாவங்கள் மற்றும் நடனம் மூலம் வெளிப்படுத்துவதே நாட்டியக் கலை. அந்த நாட்டியக் கலை மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பிரமிக்க வைக்கும் வடிவத்தில் பார்வையாளர்களுக்கு நாட்டியம் மூலம் வழங்கி வருகிறோம்’’ என்கிறார் தஞ்சாவூரில் உள்ள நடராஜ் நாட்டியாலயா நடனப் பள்ளியின் நிறுவனர், நடன ஆசிரியர், கவிதாயினி, எழுத்தாளர் விஜயலட்சுமி.
‘‘நான் இலங்கையில் பிறந்தவள். நான்கு வயதில் இந்தியா வந்து விட்டேன். எனது தொடக்கக் கல்வியை இந்தியாவில்தான் கற்றேன். 5 வயதில் முதல் முறையாக மேடையேறும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் ஒன்றில் தாயை இழந்து தவிக்கும் புறா வேடத்தில் நடித்தேன். நான்கு வயது குழந்தை என்றாலும் என்னுடைய நடிப்பைப் பார்த்து என் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
அதன் பின் மீண்டும் இலங்கைக்குச் சென்றேன். அங்கே கல்வியோடு ஏதாவது ஒரு கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். அப்படித்தான் பரதம் என் வாழ்வில் வந்தது. இதுவரைக்கும் இரண்டு நாடுகளிலும் கிட்டத்தட்ட 5-க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்களிடம் பரத நாட்டியத்தை முறைப்படியாகக் கற்றிருக்கிறேன். அதன் பிறகு தாத்தா, பாட்டியுடன் புலம் பெயர்ந்து இந்தியாவிற்கே வந்து விட்டேன்’’ என்றவருக்கு 13 வயதில் தேவாலயத்தில் பரதம் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘‘என்னுடைய நடனத்தைப் பார்த்த அந்த தேவாலயத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, நடனம் கற்றுத்தரச் சொல்லி கேட்டார்கள். நானும் சம்மதிக்க, அந்த வயதில், 60 மாணவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து 16வது வயதில் அரங்கேற்றமும் முடித்தேன். பிறகு திருச்சி கலைக் காவிரியில் இரண்டு வருடமும், சென்னையில் கலாஷேத்திராவில் ஒன்றரை வருடம் பரதம் கற்றுக் கொண்டேன். வீணை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சின்ன வயதிலிருந்தே வீணையை கற்றுக் கொள்ள விரும்பினேன். ஆனால், கல்யாணம், குழந்தைகள் அவர்களின் படிப்பு, பரதநாட்டியப் பயிற்சி போன்ற எண்ணற்ற பணிகளுக்கு நேரம் ஒதுக்கியதால், என்னுடைய கடமைகளை முடித்த பிறகு தான் வீணைக்கான பயிற்சியினை மேற்கொண்டேன். தற்போது நடனம் மட்டுமில்லாமல் வீணைக் கற்றுக் கொடுக்கிறேன்’’ என்றவர், நடனம் மட்டுமில்லாமல் ஓவியம், கவிதை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
‘‘ஓவியங்கள் வரைய பிடிக்கும். மாத இதழ்களில் வெளியாகும் ஓவியங்களைப் பார்த்து வரைவேன். எனக்கான ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் உள்ள வண்ணப் படங்களை வரைந்து பார்த்தேன். அதனைத் தொடர்ந்து ‘வயல் உழும் கலப்பை’ என்ற தலைப்பில் நான் வரைந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.
அதன் பிறகு கவிதை மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் எழுதிய ‘ஈசல்’ கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள முக்கியமான வார இதழ்களில் ‘வண்ணத்துப்பூச்சி’, ‘நெருப்பில் பூத்த மலர்’, ‘சிறை’, ‘அம்மாவை காணோம்’, ‘தோழியா-துரோகியா’ போன்ற சிறுகதைகள் வெளியானது. இலங்கை, இந்தியா என்று நான் இருநாடுகளில் வாழ்ந்து வந்ததால், என்னால் நாட்டியப் பள்ளியை துவங்க முடியவில்லை. 31 வயதில் இந்தியாவில் செட்டிலானதும் நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தேன்.
கோயில்கள், உலக நடன தினம், நவராத்திரி விழா போன்ற எண்ணற்ற முக்கிய தினங்களுக்கு என் நாட்டியப் பள்ளி மாணவர்கள் நடனமாடியிருக்கிறார்கள். மேலும், என்னிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் நடன வகுப்புகளை எடுத்து வருகிறார்கள். இதுவரை என்னுடைய நாட்டியப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் செய்திருக்கிறேன்’’ என்றவர், பரவை நங்கையர் விருது, நல்லாசிரியர் விருது, பஞ்ச சபை திலகம் என 80-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்