தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுகதை-ஆதாயம்

நன்றி குங்குமம் தோழி

அது ஒரு கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர். அவ்வூரில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு பெரிய மளிகைக் கடை வைத்திருந்தார் நல்லகண்ணு. எல்லா பொருட்களும் கிடைக்கக்கூடிய ஒரே கடை என்பதால் சுத்துப்பட்டி கிராமங்களிலிருந்து ஏகப்பட்ட கிராக்கி. தனக்குப் போட்டியாக யாரும் இல்லை என்பதால் பொருட்கள் மீது அநாவசியமாகக் கொள்ளை லாபம் வைத்திருந்தார். வழக்கம் போல் இரவு பத்து மணிக்குக் கடையை பூட்டிக்கொண்டு சைக்கிளில் வீட்டை நோக்கிப் புறப்பட்டார் நல்லகண்ணு.

‘பிசுபிசு’வென தூறிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே வானம் மப்பும், மந்தாரமுமாகத்தான் இருந்தது. பெருமழை வருவதற்கான அறிகுறி தென்படவே சைக்கிளை வேகமாக மிதித்தார் நல்லகண்ணு. அவருக்குக் குழந்தைப் பாக்கியமில்லை. வீட்டில் அவருக்காக மனைவி மல்லிகா மட்டும் காத்திருப்பாள். அவளும் வேண்டாத தெய்வமில்லை, சுற்றாத கோயிலில்லை. கடவுள் எப்போது கண்ணைத் திறப்பார் என்று தெரியாது.

தெருக் கோடியில் திரும்பும் போது சைக்கிள் மணி அடிப்பார் நல்லகண்ணு. அவர் வருவதற்கான அறிவிப்பு அது. உடனே வாசல் விளக்கைப் போடுவாள் மல்லிகா. அந்த ஒரு விளக்கே தெரு முழுக்க ஒளிவீசும்.“ஙண...ஙண…ஙண...” - வழக்கம் போல் மணி அடித்தார் நல்லகண்ணு.‘பளிச்’சென எரிந்தது அவர் வீட்டு வாசப்படி விளக்கு. கதவைத் திறந்துவிட்டாள் மல்லிகா. அவர் வராண்டாவில் சைக்கிளை நிறுத்தவும் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யவும் சரியாக இருந்தது.“அப்பாடா நல்ல வேளை வழியில பிடிச்சிருந்தா எப்படி வந்திருப்பீங்க?” என்றவள், இரவுச் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். சிறிது நேரம் டி.வியைப் பார்த்தவர், உறங்கச் செல்லும் நேரத்தில் அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.‘‘யாரது இந்த நேரத்தில்?’’ என்ற கேள்வியுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.

மல்லிகாவும் குழப்பத்துடன் அவர் பின்னால் வந்து நின்றாள்.வாசலில் - முன்பின் அறியாத யாரோ இருவர். ஓர் ஆண், ஒரு பெண். தம்பதியர் போலும். “நாங்க வெளியூர். கடைசி பஸ்ஸை தவறவிட்டுட்டோம். நாங்க பார்க்க வந்த உறவினர் வீடு பூட்டி இருக்கு. இன்னைக்கு ராத்திரி மட்டும் தங்க இடம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்...” கெஞ்சும் குரலில் கேட்டார் வந்தவர். வெளியே மழை அதிகரித்திருந்தது.

“என்னங்க... இப்படி கொஞ்சம் வாங்க...” என்றாள் மல்லிகா.“ஒரு நிமிஷம்” என்றவர், உள்ளறைக்குப் போனார்.“பாவமா இருக்குங்க. இந்த மழையில் அவங்க எங்கே போவாங்க? ஒரு ரூமை அவங்களுக்காக ஒதுக்கிரலாமே...” என்றாள் மல்லிகா.“ஸ்... சும்மா கிட. இதென்ன வீடா, இல்லை சத்திரமா? கண்டவங்களைத் தங்க வைக்க? வந்திருப்பவங்க யார், எப்படிப்பட்டவங்கன்னு வேறு நமக்குத் தெரியாது. ஏடாகூடமா ஏதாவது நடந்துருச்சுன்னா என்ன பண்றது? அதுமட்டுமில்ல, இவங்க இங்கே தங்கறதனால எனக்கென்ன லாபம்? ஒரு பைசா பிரயோஜனமுண்டா?” என்றவர் மீண்டும் வாசலுக்கு வந்தார்.

‘என்ன மனுஷர் இவர்... எல்லா விஷயங்களிலும் இப்படி ஆதாயம் பார்க்கிறாரே’ என கவலைப்பட்டாள் மல்லிகா.‘‘இதோ பாருங்க. வீட்டுக்குள்ளாற இடமில்லை. நீங்க வேறு ரெண்டு பேரா இருக்கீங்க. போதாத குறைக்கு மழை வேற பெய்யுது. வேணும்னா, அதோ அந்த மாட்டுக் கொட்டகையில் தங்கிக்கலாம்” என்று வீட்டுக்கு வெளியே இருந்த ஓலைக் கொட்டாயைச் சுட்டிக் காட்டினார் நல்லகண்ணு.“ரொம்ப நன்றிங்க” என்றவாறு அவர்கள் அந்தக் கொட்டகையை நோக்கி நகர, ‘சட்’டென கதவைத் தாழிட்டார்.

கொட்டகை மிகவும் துப்புரவாகத்தான் இருந்தது. முன்னால் கட்டியிருந்த கோமாதா சாவகாசமாய் அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும், திரும்பிப் பார்த்து மீண்டும் தன் வேலையில் ஈடுபட்டது. பசு கட்டப்பட்டிருந்த இடத்தையொட்டி ஒரு தடுப்பு இருந்தது. மறுபக்கம் வைக்கோல் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.“இதுவே ஒரு ரூம் போலத்தான் இருக்கு. பரவாயில்லை” என்றவாறு வைக்கோலை சமமாக்கி அதன் மேல் துண்டை விரித்து படுக்கையை தயார் செய்தனர்.“எப்படியாவது இன்னைக்கு ராத்திரி மட்டும் ஓட்டிட்டா போதும். காலைல முதல் பஸ்ஸைப் பிடிச்சுப் போயிரலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வாசல் விளக்கு அணைக்கப்பட்டது.

“ரொம்பவும் கறார் கந்தசாமியாகத்தான் இருக்கார் இந்த வீட்டுக்காரர்...” “இந்த இடத்தையாவது ஒதுக்கினாரே சந்தோஷப்படுங்க. இதுவும் இல்லேன்னா என்ன பண்ணியிருப்பீங்க?”

“அதுவும் சரிதான்...” படுத்துக்கொண்டார்கள்.கபாலி தலைமையில் கூடியது கூட்டம். இன்றிரவு யார் வீட்டில் கன்னம் வைப்பது என்கிற ஆலோசனைக் கூட்டம். பக்கத்து ஊரு மளிகைக் கடை நல்லகண்ணு வீட்டில் திருடுவது என்று முடிவாகியது.“ஏன் தலீவா அந்த ஆளைத் தேர்ந்தெடுத்த?” என்று கேட்டான் ஒருவன்.

“அவன் நிறைய பொன்னும், பொருளும் சேர்த்து வெச்சிருக்கான். அவனுக்கு வாரிசு யாருமில்லை. பேராசை பிடிச்சவன். அதுமட்டுமில்லை… கடையில் சாமான் மேல நிறைய லாபம் வேறு வெச்சு விக்கிறான். அவனுக்கு பாடம் புகட்ட வேணாமா?” என்று சொல்லி சிரித்தான் கபாலி. அவனுடைய சிரிப்பில் கூட்டாளிகள் கலந்து கொண்டனர். “இதோ… நான் சொல்றதை கவனமா கேட்டுக்குங்க…” அனைவரும் காதுகளைத் தீட்டிக் கொண்டனர்.

“ராத்திரி அவன் கடையை சாத்திட்டு வீட்டுக்கு வந்தா, சாப்பிட்டுப் படுக்க மணி 11.00 ஆகிவிடும். நான் மட்டும் கொல்லைப்புறமா சுவர் ஏறிக் குதிச்சு உள்ளே போறேன். நீங்க எல்லோரும் வெளியே நில்லுங்க. ஏதாவது ஆபத்துன்னா உடனே ஓடி சுவர் ஏறி வெளியே நான் குதிச்சுருவேன். சந்து வழியா நாம எல்லோரும் ஓடி தப்பிச்சுரலாம்…” கபாலி சொன்னதைக் கேட்டு தலையசைத்தது கூட்டம்.

இரவு மணி 11.30. மழை நின்றுவிட்டிருந்தது. ஆனால், லேசாகத் தூறல் மட்டும் இருந்தது. புது இடம் என்பதால் உறக்கமின்றி புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டிருந்த அந்த வெளியூர் தம்பதியினர் எழுந்து உட்கார்ந்தனர். யாரோ ஒருவன் பதுங்கி பதுங்கி சுவரேறி குதிப்பது மின்னல் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. மாட்டுக் கொட்டகையில் இரண்டு பேர் தங்கியிருப்பது கபாலிக்குத் தெரியாது.

“உஷ்... சத்தம் போடாதே. திருடன்னு நினைக்கிறேன். சுவர் ஏறி குதிச்சிருக்கான்” என்றார் அவர்.“ஆமாங்க, நானும் கவனிச்சேன்” என்றாள் அவர் மனைவி.“என்ன பண்ணலாம்?”“வாங்க, வீட்டு ஓனர்கிட்ட சொல்லலாம்…” இருவரும் எழுந்து, வீட்டு வாசக் கதவைப் பலமாகத் தட்டினர்.வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் நல்லகண்ணு. கூடவே மல்லிகாவும். “லைட்டைப் போடு மல்லிகா” என்றவர் கதவைத் திறந்தார்.

“ஐயா, உங்க வீட்டுக்குள்ளாற திருடன் நுழைஞ்சிருக்கான்” என்றார் அந்த வெளியூர்காரர். கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்தார் நல்லகண்ணு. உடனே, எல்லா விளக்குகளையும் எரியவிட்டு வெளியே ஓடி வந்தார். அதற்குள் உஷாராகி கபாலி சுவர் ஏறி வெளியே குதித்தான்.அவனை கவனித்த நல்லகண்ணு, “திருடன்... திருடன்” என்று கூவிக்கொண்டே ஓடினார். அவ்வளவுதான் ‘தப தப’வென பாய்ந்து ஓடி மின்னலாய் மறைந்தனர் கபாலி குழுவினர். அரவம் கேட்டு தெருவே விழித்துக்கொண்டது.“இதுவரை நம்ம தெருவில இப்படி நடந்ததே இல்லை. இப்ப இங்கேயும் கைவரிசை காட்ட ஆரம்பிச்சுட்டானுங்க.”

“விடிஞ்சதும் மொதல் வேலையா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ன்ட் எழுதிக் கொடுங்க...”“எதுக்கும் நாம எல்லோரும் இனி ஜாக்கிரதையா இருக்கணும்...” ஆளாளுக்கு விதவிதமாய் ஆலோசனைகள் வழங்கிவிட்டுக் கலைந்து சென்றனர்.

விடிந்தது.“அப்ப நாங்க கெளம்பறோம். தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க” என்றனர் அந்த வெளியூர் தம்பதியினர்.“நியாயமா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். எவ்வளவுப் பெரிய உதவியை நீங்க செஞ்சிருக்கீங்க? நீங்க மட்டும் இல்லேன்னா எவ்வளவுப் பெரிய இழப்பு எனக்கு ஏற்பட்டிருக்கும்” என்றார் நல்லகண்ணு, நெகிழ்ச்சியுடன்.“நாங்க எங்க கடமையைத்தான் செஞ்சிருக்கோம்….”“நீங்க என்ன சொல்றீங்க?”

“இதோ பாருங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுவதுதான் மனிதத்தன்மை. திருடன் உங்க வீட்டுக்குத்தானே திருட வந்தான்? அவனைப் பத்தி உங்களுக்கு தகவல் சொல்றதுல எங்களுக்கு என்ன லாபம்? என்று எண்ணி எங்களால் சும்மா இருக்க முடியாது. ஏன்னா, நாங்க மனிதருங்க...” சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, வாழ்க்கையில் யாரோ தன்னை ஓங்கி அறைந்துவிட்டுப்போன உணர்வுடன், அவர்கள் மறையும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் நல்லகண்ணு.

தொகுப்பு: மலர்மதி

Related News