தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுகதை-குலதெய்வம்!

‘‘ஏங்க... அடுத்த வாரம் ஞாயித்துக்கெழமை குலதெய்வம் கோயிலுக்குப் போலாமான்னு கேட்டு அக்கா போன் பண்ணியிருந்தாங்க...”

‘‘அடுத்த வாரமா... மாசக் கடைசியாச்சேம்மா... அதுக்கடுத்த வாரம் போகக் கூடாதா?”

‘‘இல்லங்க... இந்த வாரந்தான் பொண்ணுங்க எல்லாம் குளிக்கிற நாளெல்லாம் இல்லாம சுத்த பத்தமா இருக்காம். அடுத்த வாரம்னா ஒவ்வொண்ணா உட்காரும்ணு சொன்னாங்க.’’

‘‘ஆமா, பணம் போடறதும் நாம... அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறதும் நாமளேதான்...” பல்லைக் கடித்தார்.‘‘என்ன செய்யறதுங்க... ஐஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு. கூடப்பொறந்தது ஒண்ணுக்கு இல்லன்னா ஒண்ணு உதவ வேண்டியதுதான்...”‘‘ஆமா, என்ன செலவ நிறுத்தறாங்க.போன மாசங்கூட பெரியவன் பைக் கேட்டான்னு தவணைல வாங்கித்தான் குடுத்துருக்காரு... எப்பவும் நம்மகிட்டத்தான் பஞ்சப் பாட்டு...”

‘‘விடுங்க... சாமிக்குத்தான குடுக்கறோம்.யாரு குடுத்தா என்ன?”

‘‘அதேதான் நானுஞ் சொல்றேன்.சாமிக்குத்தான செய்யறோம்னு கொஞ்சமாவது குடுக்க வேணாமா... கையக்கட்டி உக்காந்துக்குவாங்க. சரி, வர்றோம்னு சொல்லிரு.எப்படியும் வேனுக்கு அதுக்கு இதுக்குன்னு சேத்தி ஐஞ்சாயிரமாவது ஆகும்.ஒரு ஆறாயிரமாவது கையில வச்சிகிட்டாத்தான் நல்லாருக்கும்...” பெருமூச்சு விட்டபடியே வெளியே நடந்தார்.எங்க மாமனாருக்கு என்னோட கணவரையும் சேர்த்து கூடப் பொறந்தவங்க ஆணும் பெண்ணுமா ரெண்டு பேர்.என்னேட கணவர்தான் கடைசி. அதுல என்னோட நாத்தனார சொந்தத்துலயே கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்க.அவங்க கணவருக்கு ‘புனா’வுல ஹோல்சேல் பிசினஸ்.இரண்டு மகன்களோட சௌகரியமா இருக்காங்க. எப்பவாச்சும் நல்லது கெட்டதுல கலந்துக்கறதோட சரி.மத்தபடி அவ்வளவா வர மாட்டாங்க. போன்ல பேசிக்கறதோட சரி.

நாங்க கல்யாணம் ஆன கையோட என்னோட கணவருக்கு காலேஜ்ல லெக்சரர் வேலை கிடைக்கவே கோவைக்கு தனிக்குடித்தனம் வந்துட்டோம். ஒரே பையன்தான் எங்களுக்கு.மூத்த மாமாவுக்குத்தான் ஒண்ணுமே ஒட்டல. ரொம்பக் கோவக்காரரு. எந்த இடத்துக்குப் போனாலும் எதாவது சண்டைய இழுத்துக்கிட்டு வேலைய விட்டுட்டு வந்துருவாரு. நிரந்தரமா ஆறு மாசங்கூட ஒரு வேலைல இருக்க மாட்டாரு. அவரோட மனைவி கனகா அக்கா பக்கத்து கிராமம். ஒரு ஆணும், இரண்டு பொண்ணும். எப்படியோ எல்லோருமா கூடித் தேர இழுக்கற மாதிரி பசங்களுக்கு நாங்க கொஞ்சம் குடுக்க மீதிக்கு லோனு போட்டு படிக்க வச்சுட்டாங்க. பையனும் வேலைக்கு வந்துட்டான். பொண்ணுங்க படிக்கிறாங்க.

ஓரளவுக்கு வசதியாய்தான் இருக்காங்க. இருந்தாலும் வாங்கிப் பழகிட்டதாலோ இல்லைன்னா குடுத்துப் பழகிட்டதாலோ என்னவோ எல்லாத்துக்கும் எங்கையத்தான் திர்பார்ப்பாங்க.என்னோட கணவரும் செய்வாருதான்.இருந்தாலும் சலிப்புத் தட்டி, அப்பப்ப கோவிச்சுக்குவாரு.எங்களுக்கு குலதெய்வம் கரூர் கிட்டத்துல ஒரு கிராமம்.

வருஷத்துக்கு ஒரு தரம் அங்க போய் ஆத்தாளுக்கு அபிஷேக ஆராதனை பண்ணி பொங்க வச்சு, கருப்புக்கு கோழி அடசல் (காவு) போட்டு கும்பிட்டு, அங்கேயே சாப்பிட்டு சாயந்திரம் வரைக்கும் இருந்துட்டு வருவோம்.ரெண்டு குடும்பமுமா சேர்ந்து போறதுக்கு வேன் பேசிக்குவோம். வீட்லேர்ந்தே அடுப்பு, மத்த சாமானெல்லாம் கொண்டு போயிருவோம்.

ஆனா, நாங்க போனதுலேர்ந்து வர்ற வரைக்கும் எல்லாமே எங்க செலவுதான்.

‘‘ஏய் கனகா... வந்துட்டாங்க பாரு... போய் பால் வாங்கிட்டு வா...”‘‘ஏங்க... சில்லறை இருந்தா தாங்க...”‘‘அட, இருந்த சில்லறை எல்லாத்தையும் காலைலேதான் சவரக் கடைல குடுத்துட்டு வந்துட்டேன். சரி மறுக்கா குடுக்கறேன்னு பால் கடைல சொல்லிட்டு வாங்கிட்டு வா...”‘‘ஐயோ... போன தடவையே பாக்கி இருக்குது. அவன் வேற சிலுத்துக்குவானே...”

இப்படி நீளும் வசனங்களை கேட்டுக் கொண்டே, ‘‘அண்ணி இந்தாங்க சில்லறை... போய் வாங்கிட்டு வாங்க...” என்னும் என் கணவரிடம்...‘‘அதையேன் தம்பி கேட்கறீங்க...

இந்தச் சில்லறைப் பிரச்னை பெரும் பிரச்னை போங்க” என்றபடி வாங்கி கையில் வைத்திருக்கும் பர்ஸில் போட்டுக் கொண்டே கனகாக்கா சொன்னால்...‘‘எங்கடா தம்பி... வர்ற காசு ஒண்ணுந் தங்க மாட்டேங்குது. ரெண்டும் படிக்கற செலவு வேற... எப்புடியோ உங் கையி எங் கையின்னு குடும்பத்த நடத்துறதுக்குள்ள நாக்குத் தள்ளிப் போறது...” இப்படி முடிப்பார் மூத்தவர். முன்னாடி நடந்ததையெல்லாம் நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, ‘‘இந்த வருடமாவது எதாவது கொஞ்சமாவது குடுப்பாங்களா.?!”ன்னு நினைச்சுட்டே போய் இறங்கினோம்.

எப்பவும் போல அதே வசன முன்மொழிவுகள்தான். என்ன இந்தத் தடவை இன்னொரு முகம் புதுசாய் சேர்ந்திருந்தது.‘‘பக்கத்துல குடி வந்திருக்காங்க. பேரு பரமேஸ்வரி. ஏழைப்பட்ட குடும்பம். அதான் ஒத்தாசைக்கு வச்சுக்கலாமுன்னு வரச் சொன்னேன். நமக்கும் கொஞ்சம் மூச்சு விடவாவது நேரங் கிடைக்கும்...” என்றார் கனகாக்கா.கறுப்பாக ஒல்லியாக இருந்தாலும் நல்ல சுறுசுறுப்பாக இருந்தது அந்தப் பெண்.

‌‘‘ஏக்கா... எவ்வளவு காசு குடுக்கணும்..?”‘‘அதெல்லாம் குடுத்தத வாங்கிக்கும்...”‘‘எப்படியும் ஒரு ஐநூறாவது தர வேண்டியிருக்குமே” என்று நினைத்துக் கொண்டேன்.‘‘இந்த வருஷமாவது உங்கிட்ட எதாவது எம் பங்குக்குன்னு காசு குடுக்கலாமுன்னு பாத்தேன்... எங்க போன வாரம் உங்கண்ணி, அதுக்கு மொத வாரம் மூத்தவன்னு வரிசையா படுத்து எந்திருச்சதுல ஏகப்பட்ட செலவு. ஆஸ்பத்திரிக்கே கட்டி மாளல... குளுக்கோஸு போடணும், எக்ஸ்ரே படம் புடிக்கணும்னு மாளாத காசப் புடுங்கிக்கறாங்க... காசு தங்குவானாங்குது. பாரு சட்டப்பைல பத்து ரூபாயும் இருபது ரூபாயுமா கெடக்கு...”‘‘ஏண்ணா‌... பையந்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டானே... எதுவும் குடுக்கறதில்லையா என்ன..?”

‘‘எங்க... அவன் வாங்கற சம்பளம் ரூமு வாடகை, பஸ்ஸு போக்குவரத்துன்னு அதுக்குத்தான் சரியாப் போகுது. நம்முகிட்ட மிச்சத்துக்கு கேக்காம இருந்தா சரி...இப்பக்கூட ‘நா வர்றப்ப கோவிலுக்கு போயிக்கறம்பா... எதுக்கு இடையில வெட்டிச் செலவு’ன்னு சொல்லிட்டுத்தான் வராம இருந்துட்டான்...”‘‘எப்புடி முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கிறார் பாரு... கிழக்கு வளவு பெரியப்பன காலைல ரோட்ல பாத்தேன். அதெல்லாம் பையன் நல்லாத்தான் சம்பாதிக்கறான். வட்டிக்குக் கூட காசு குடுத்து வாங்கறாராம்னு சொன்னாரு. ஆனாலும், ஒப்புக்குக்கூட ஒரு காசு கையில் வர மாட்டேங்குதே...” ‘‘விடுங்க... என்னமோ பண்ணிட்டுப் போறாங்க. ஆத்தாளுக்கு பண்றோம்... எதுக்கு விசாரப்படணும்” என்றேன் சமாதானமாக புலம்பிய கணவரிடம்...

அடுத்த நாள் வழக்கம் போல மனதுக்குள் என்ன வேற்றுமைகள் இருந்தாலும், சந்தோஷமாகவே கிளம்பினோம். ஊர் கதையும்,உறவுக்கதையும் ஒன்றாகப் புரள ஆங்காங்கே சினிமாக் கதையின் மிக்சர் தூவ, வழிநெடுக சிரிப்பும் பேச்சுமாகத் தூள் கிளப்பியது.‘‘வாங்க... வாங்க...” என்ற ‌பூசாரியிடம் சேலை முதலான பூஜை சாமான்களை கொடுத்தோம். ‘‘பொங்கல வைங்கம்மா...நா எல்லாம் ரெடி பண்ணிர்றேன்” என்றபடி வாய்கொள்ளாச் சிரிப்போடு வாங்கிக் கொண்டார்.

காட்டுக்குள் தனியாக கோயில் கொண்டிருக்கும் ஆத்தா என்பதால், அவ்வப்போது இப்படிப் போகும் யாராவது கொடுக்கும் சன்மானங்களும், டிரஸ்ட் கொடுக்கும் சம்பளமும்தான் வயத்துப்பாடு அவர்களுக்கு...‘‘லுலு... லூ... லூ...”குலவையிட பானைத் தண்ணீர் வடக்கே பாத்துப் பொங்கி விழ,‘‘ஆத்தா... சந்தோஷம் சந்தோஷம்” என்றபடியே பானையைச் சுற்றி கும்பிட்டு அரிசி போட்டு பொங்கல் வைத்துக் கொண்டு போகவும் ஆத்தா கன கம்பீரமாக புதுச்சேலை மாலையுடன் அழகுக் கன்னப் பொட்டுடன் அலங்காரமாக அமர்ந்திருக்க... உடுக்கை பம்பையுடன் ஊதுவர்த்தி சாம்பிராணி மணம் பரப்ப அற்புதமாக பூஜை நடந்தது.

‘‘நெத்திக்காசு எங்க...” என்ற மூத்த மாமாவிடம்... ‘‘இதோ இருக்குங்க...” என்று காண்பித்தார் பூசாரி.‘‘இல்லைங்க... இந்தத் தடவை மூணு காசு குடுத்திருந்தோம். பையன் வேலைக்குப் போறானில்ல” என்றார் பெருமிதத்தோடு...‘‘ஆமா... நெத்திக்காசுக்குக் கூட ஒரு ஐஞ்சு ரூபா குடுக்கல... ஆனா, பவுசுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல...”‘‘விடுங்க...” என்றேன் வழக்கம் போல. ரகசியமாகக் காதைக் கடித்த கணவரிடம்.கோவிலுக்கு வெளியே குடி கொண்டிருக்கும் கருப்புக்கு துளி ஒச்சமில்லாத கறுப்புக் கோழியை அடசப் போட்டுட்டு சமைச்சு சாப்பிட்டுக் கிளம்ப பொழுதாகிப் போச்சு.

வர்ற வழியில டீ குடிக்க ஒரு கடையில நிறுத்தினோம். ‘‘அட, சில்லறையை மாத்திட்டு வரணும்னு நெனச்சேன்” என்றபடியே பட்டி போட்ட டிரவுசர் பாக்கெட்டில் துழாவுவது போல துழாவினார் பெரியவர்.மௌனமாக கணக்கைக் கணவர் கொடுக்க வேனில் ஏறினோம். காலைல இருந்து அலைஞ்சதுல எல்லோருக்குமே கண்ண அசத்தவே அரைத் தூக்கத்துல சாமியாடிகிட்டே ஒருத்தர் மேல ஒருத்தரா சாய ஆரம்பிச்சோம்.

அப்பதான் எம் பக்கத்துல உட்கார்ந்திருந்த பரமேஸ்வரி, ‘‘அக்கா பணம் பறக்குது... நூறு ரூபா நோட்டாப் பறக்குது”ன்னு சத்தம் போட்டா. கண் அசந்தவங்க ‘டப்’ன்னு அடிச்சுப் புடிச்சு கண்ணத் திறந்தோம். தூக்கம் எங்க போச்சுன்னே தெரியல.‘‘பைத்தியமாட்டம் பேசாத... பணமாவது பறக்கறதாவது..? எதாச்சும் காகித மா இருக்கும்னு சொல்லிட்டே கண்ணாடி வழியாகப் பாத்தவ அதிர்ந்து போனேன்.நிஜமாவே நூறு ரூபா நோட்டு பறந்துகிட்டு இருந்துச்சு.எங்கூட சேந்து எல்லோரும் பாக்கவே வேன நிறுத்திட்டு ‘தடா...புடா’ன்னு இறங்கினோம்.

இறங்கினவங்க தேடித்தேடி,‘‘அட, இங்க பாரு... அங்க பாரு”ன்னு தேடித்தேடி பொறுக்க ஆரம்பிச்சோம். எண்ணிப் பார்த்தா சரியா மூவாயிரம் ரூபாய் இருந்துச்சு. கடைசியா,‘‘யாருதுன்னு தெரியலையே”ன்னு,‘‘யாராவது தேடிட்டு வர்றாங்களான்னு” கொஞ்ச நேரம் நின்று பாத்தோம். சுத்து வட்டாரத்துல ஒரு ஈ காக்கா இல்ல. வெறும் முள்ளுவேலிக் காடு.

‘‘சரி... யாருதா இருந்தா என்ன..? பொழுது வேற இறங்கிட்டுது. கொண்டு போயி நம்மூர் ‘அங்காத்தா’ கோவில் உண்டியலில் போட்டுர்றலாம்’’ என்றார் என் கணவர்.

‘‘என்ன தம்பி... பூஜைக்குப் போயிட்டு வாறோம்... ஆத்தாவே மனசு குளிரக் குடுத்ததா நெனச்சு செலவு செஞ்சுக்கலாம். கோயில்ல கொண்டு போயி போடச் சொல்றீங்களே”ன்னார் கனகா அக்கா.

‘‘இல்ல அண்ணி... எனக்கு மனசு ஒப்புல... யாரு பணமோ என்னமோ.... எத்தன கஷ்டப்பட்டு சம்பாதிச்சாங்களோ... என்ன அவசரத் தேவையோ..?”

அப்படி இப்படின்னு விவாதம் பண்ணிட்டே வர, கோவிலும் வந்திருச்சு.சொன்னபடி பணத்தையும் உண்டியல்ல போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.கனகா அக்காவோட அங்கலாய்ப்பு மட்டும் நிக்கவே இல்லை.

‘‘ஆறாயிரம் ஆகிருக்குது. இந்த வருஷமாவது எதோ கொஞ்சம் தருவாங்கன்னு நெனச்சேன். எங்க..!” என்றார், இரவில் கணக்குப் பார்த்த கணவர் சலித்த குரலில்.‘‘போறாங்க...”என்று வழக்கம் போல வாயெடுத்தவளைத் தடுத்து, ‘‘கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்... தீர்ந்து போச்சு” என்றார்.காலி சொம்பை கையில் எடுத்துட்டு வெளியே வந்தேன். அக்காவும், மூத்த மாமாவும் உள் ஹாலில் பேசிட்டு இருந்தாங்க.

‘‘ஆனாலும் மனசே ஆவலிங்க... அத்தனைப் பணத்தையும் கோவில்ல கொண்டு போயி போட்டது...”இன்னுமா இதையே யோசிச்சுட்டு பேசிட்டு கெடக்கறாங்கன்னு நெனச்சுகிட்டே சமாதானமா எதாவது சொல்லலாம்னு ஓரெட்டு எடுத்து வைக்கிறேன்.அப்பதான்... ‘‘அதையேண்டி கேக்கற... நானே திருடனுக்குத் தேள் கொட்டுனவனாட்டம் கெடக்குறேன். அந்தப் பணம் அத்தினியும் யாருதுன்னு நெனக்கிற... எல்லாமே நா வெச்சிருந்த பணந்தான்.

பொறப்படறப்ப கன்னிப்பன் கொண்டாந்து வட்டிப் பணத்த குடுத்தான். கீழ டிரவுசர் பாக்கெட்டில வச்சிருந்தேன். வழக்கம் போல துழாவுற மாதிரி துழாவிட்டு குடுக்கற மாதிரி நடிக்கறப்ப எனக்கே தெரியாம கீழ விழுந்துருக்கு. எப்படியோ பின்னாடியே பறந்தும் வந்துருக்கு. கொஞ்சதூரந்தானே வந்திருந்தோம்...”‘‘ஐயோ... என்னங்க சொல்றீங்க.அப்புறம் ஏங் கம்முனு உட்காந்துகிட்டு இருந்தீங்க... என்னோடதுன்னு சொல்றதுக்கென்ன.?!”

‘‘ஆமா... எப்புடி சொல்றது. நேத்துத்தான் தம்பிட்ட பணமே இல்லைன்னு பஞ்சப் பாட்டுப் பாடினேன். இப்ப என்னோடதுதான்னு எப்படிச் சொல்ல முடியும்..?!”

‘‘அடப்பாவிங்களா...”மனசுக்குள்ள நெனச்சுட்டே கணவர்கிட்ட சொல்ல வந்தேன். வேகமா வந்தவ எது மேலயோ வந்து மோதிகிட்டு திக்குச்சுப் பாக்குறேன்.பூஜைஅறைக்கதவு திறந்து கெடக்கு. மேல மாட்டியிருந்த மணி ஒலிக்க உள்ள மாட்டி இருக்கற ஆத்தாளோட படம் கண்ணுலபடுது. அந்த நிமிஷம் அவ மிகப்பெரிய சிரிப்போட என்னயப் பாக்குற மாதிரியே தோணுச்சு.

அந்த சிரிப்பு சொல்ற சேதி என்னன்னு புரிஞ்சவளா, கணவர்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாங்கற தீர்மானத்தோட நடக்க ஆரம்பிச்சேன் நான்.

தொகுப்பு: விஜி முருகநாதன்

 

Related News