சுற்றுலா தூதுவராக சாரா டெண்டுல்கர்!
நன்றி குங்குமம் தோழி
பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் ஒரே மகளான சாரா டெண்டுல்கர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். ஃபேஷன் உலகில் ஒரு ‘ஸ்டைல்’ ஐகான். எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பவர். சாரா லண்டனில் மருத்துவம் பயின்றார். மருத்துவப் பயிற்சியைத் தொடர விருப்பமில்லை அவருக்கு. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன செய்கிறார், எங்கு போகிறார், என்ன உடுத்துகிறார் என தகவல்களை வெளியிடுவதுடன், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தந்தையின் அறக்கட்டளைக்கு பொறுப்பேற்றிருக்கும் இவரை ஆஸ்திரேலிய அரசு தன் நாட்டின் சுற்றுலா தூதுவராக நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியா தனது சுற்றுலா தலங் களை பிரபலப்படுத்துவதன் மூலம் லட்சத்துக்கும் மேற்பட்ட வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது. ‘Come and Say G’day’ என்ற பிரச்சாரத்தை இந்தியாவில் முன்னெடுக்கும் பொறுப்பு சாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயணிகள் தங்கள் விடுமுறையை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் உலகளாவிய சுற்றுலா பிரபலமாக்கல் முயற்சி முதன் முதலில் அக்டோபர் 2022ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025ல் Come and Say G’day பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும். இதன் அனிமேஷன் சின்னமான Ruby the Rooதான் பிரச்சாரத்தின் சின்னம்.
உலகின் ஒவ்வொரு நாட்டின் பிரபலங்களை தூதுவராக நியமித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. இந்தியாவில், சாரா டெண்டுல்கர் தலைமை தாங்கி, ஆஸ்திரேலியாவின் சுற்றுலா அனுபவங்களை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் வெளிப்படுத்துவார். மேலும், தன்னுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சுற்றுலா பரிந்துரைகளை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பார்.
‘‘எங்க நாட்டு பிரச்சாரத்தின் இந்தப் புதிய முன்னெடுப்பு, ஒவ்வொரு குடிமக்களுக்கும் இடையே எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். சாரா ஒரு சுற்றுலாப் பறவை மற்றும் சமூக ஊடகங்களிலும் பிரபலம். இவரை NATIONAL CRUSH என்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். பொறுப்பு தரப்பட்ட வேகத்தில் சாரா பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்து வருகிறார். ‘Come and Say G’day’ என பிரச்சாரத்தை துவங்கி, இந்திய மக்களை ‘ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புங்க’ என்று தூண்டி வருகிறார்..!
தொகுப்பு: பாரதி