ராமநாதபுரம் to தாய்லாந்து
நன்றி குங்குமம் தோழி
- மிஸ் ஹெரிடேஜ்
அழகு என்பது முகத்தில் இல்லை, மன உறுதியில்தான் இருக்கென நிரூபித்து, எதிர்ப்புகளை ஆயுதமாக்கும் எந்தப் பெண்ணும் வெற்றியாளர்தான் என நிரூபித்திருக்கிறார் மிஸ் ஹெரிடேஜ் ஜோதிமலர்.சமீபத்தில் புனேயில் நடைபெற்ற, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட ‘மிஸ் ஹெரிடேஜ் இந்தியா 2025’ தேசிய அழகிப்போட்டியில், அமைதி, கலாச்சாரம்,
சுற்றுச்சூழல், சுற்றுலா ஆகியவற்றை வலியுறுத்தி நடந்த போட்டியில், திறமை, பேச்சுத் திறன் மற்றும் சமூகப் பார்வையால் அனைவரையும் கவர்ந்தவர் ஜோதிமலர்.
இறுதியில், ‘மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025’ பட்டத்தை வென்று மகுடம் சூடினார். இதன் அடுத்தகட்டமாக, தாய்லாந்து நாட்டில் சர்வதேச மேடையில் நடைபெறவுள்ள ‘மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025’ போட்டியில், இந்தியாவின் பாரம்பரியம், வளமான கலாச்சாரம், இந்திய மரபினை உலகிற்கு வெளிப்படுத்தி, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் சென்றவர், ‘கலாச்சார தூதர்’ (Cultural Ambassador) என்ற பட்டத்தை வென்று மீண்டும் மகுடம் சூடியுள்ளார்.
பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்று, பெங்களூரு ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிற ஜோதிமலர், ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு காக்கூரைச் சேர்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இன்று தன் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பால் தேசிய அளவில் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருப்பதுடன், சர்வதேச
அளவிலும் முத்திரை பதிக்க தாய்லாந்து பறந்துள்ளார்.
தன் சிறுவயதுக் கனவான, “ஒருநாள் அழகிப்போட்டியில் வெல்வேன்” என்ற தன் விருப்பத்தை மனதில் விதைத்தபடி வலம் வந்தவரை, “நீ கருப்பா சுருட்டை முடியுடன் இருக்கிறாய். உன் திருமணத்திற்கு நகை நிறைய போட வேண்டும்” போன்ற கிண்டலான வார்த்தைகளை உபயோகித்து சமூகம் தாக்க... காதில் விழுந்த வார்த்தைகளால் மனம் தளர்ந்து சோர்ந்து போகாமல், “என் நிறமே என் அடையாளம்” என நம்பிக்கையுடன் நிமிர்ந்து நின்று நடைபோட்டவர், “அழகு என்பது பிறவியால் கிடைப்பதல்ல... மன உறுதியால் பெறப்படுவது” என புன்னகைக்கிறார்.
குறிப்பிட்ட நிறம், வடிவம், முக அமைப்பே அழகென உலகம் நம்ப, ஜோதிமலரின் கனவு கைகூடுவது அத்தனை எளிதானதாக இல்லை. இதனை மாற்றும் எண்ணத்துடன் மாடலிங் துறைக்குள் முதல் அடியை எடுத்து வைக்க நினைத்து, சென்னையில் உள்ள மாடலிங் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு சென்ற போது, வெளித் தோற்ற அடிப்படையில் அவர் மதிப்பீடு செய்யப்பட, கொஞ்சமும் சோர்ந்து போகாமல் ஆன்லைன் வழியாக மாடலிங் பயின்று, தான் படித்த கல்லூரி விடுதியில் யாருக்கும் தெரியாமலே பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்து பெங்களூரு சென்ற பிறகே மாடலிங் துறைக்குள் நுழைந்து, “மிஸ் கர்நாடகா 2024 மிஸ் ஃபேஷன் ஐகான்” என்ற தனது முதல் வெற்றியை பதிவு செய்து முத்திரை பதித்திருக்கிறார். “இதற்கென பல்வேறு தடைகளை தொடர்ந்து சந்தித்த போதும், ‘உன்னால் முடியாது என்ற வார்த்தையை மட்டும் நான் எப்போதும் நிராகரித்து வந்தேன்’ என்றவர், ‘எதிர்ப்பை ஆயுதமாக மாற்றினால் எந்தப் பெண்ணும் வெற்றியாளர்தான்” என்கிறார் மிக அழுத்தமாக.
“சுய மரியாதையுடன், கனவுகளைத் துரத்தும் எந்தப் பெண்ணும் தன் விதியை தானே எழுத முடியும்” என்கிற தனது கருத்தை, பெண்களுக்கு உயிரோட்டம் உள்ள முன்மாதிரியாய் நின்றபடி, அழுத்தமாக நிரூபித்த ஜோதிமலரின் அடுத்த இலக்கு, கல்வி மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் உள்ள பெண் குழந்தைகளை வலிமையான பெண்களாக உருவாக்கும் அறக்கட்டளை ஒன்றை தொடங்குவதுதான்.
தொகுப்பு: மணிமகள்