குவாலிட்டி… குவாலிட்டி… குவாலிட்டி…
நன்றி குங்குமம் தோழி
அதில் நோ காம்ப்ரமைஸ்!
‘‘என்னுடைய மூச்சு... உயிர்... எல்லாமே வசந்தபவன்தான்’’ என்று பேசத் துவங்கினார் ஸ்வர்ணலதா ரவி. வசந்தபவன் உணவகக் குழுமத்தின் நிர்வாக இயக்குனரான இவர், கடந்த 22 வருடமாக உணவகத்தின் நிர்வாகப் பொறுப்பினை முழுமையாக ஏற்று அதில் பல சக்சஸினை சந்தித்துள்ளார். இல்லத்தரசியாக இருந்தவர் இப்போது முழுக்க முழுக்க பிசினஸ் வுமனாக மாறி தன்னுடைய முழு பங்களிப்பை தந்து வருகிறார்.
‘‘என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் மாமனாரின் ஆசீர்வாதம்தான் காரணம்னு சொல்வேன். வசந்தபவனை அவர் 1969ல் துவங்கினார். என் கணவர் ரவி பொறுப்பினை ஏற்ற பிறகு ‘வசந்தபவன் நம்ம வீடு’ என்றானது. 2003ல்தான் நான் பிசினஸிற்கு வந்தேன். பள்ளி முடித்த கையோடு திருமணம், இரண்டு குழந்தைகள், குடும்பம் என்று என் நாட்கள் நகர்ந்தது. ஒருமுறை நானும் என் குழந்தைகளும் எங்க ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். உணவுக்காக காத்திருந்த போது, ஓட்டலில் சில விஷயங்களை பார்த்தேன். அதுகுறித்து அன்றிரவு என் கணவரிடம் பேசினேன். உடனே அவர், ‘அந்தக் கிளையின் நிர்வாகத்தினை நீயே பார்த்துக்கொள்’ என்றார்.
நான் பார்த்த விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினேன். விளைவு விற்பனை அதிகமானது. அடுத்து மற்ெறாரு கிளையின் நிர்வாகப் பொறுப்பினை கொடுத்தார். இப்போது வசந்தபவனின் உணவகக் குழுமம் அனைத்தையும் நிர்வகிக்கிறேன். இப்படித்தான் என் பயணம் ஆரம்பமானது’’ என்றவர், உணவகத்தில் வேலை செய்பவர்கள் முதல் நிர்வாகம் மற்றும் அதன் உள்ளலங்காரம் என சகலமும் பார்த்துக் கொள்கிறார்.
‘‘எனக்கு பொதுவாகவே இன்டீரியர் டிசைனிங் மேல் ஆர்வம் அதிகம். எங்க வீட்டின் உள்ளலங்காரம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கேன். பிரெஞ்ச் டிசைனர் ஒருவருடன் இரண்டு வருடம் பயணம் செய்த போது இது குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். எந்த நிறங்களை எங்கு பயன்படுத்தலாம், இரண்டு நிறங்களின் காம்பினேஷன், வால் பேப்பர், மேசை, நாற்காலி, டெகர் பொருட்களை எங்கு வைத்தால் நன்றாக இருக்கும் என அனைத்தும் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கிளைகள் திறக்கும் போது அதன் உள்ளலங்காரங்களை திட்டமிடுவேன்.
குறிப்பாக விபி வேர்ல்ட் செய்யும் போது என் முழு உழைப்பையும் அதில் செலுத்தினேன்’’ என்றவர், இந்த துறையில் பெரிய இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
‘‘எந்த துறையாக இருந்தாலும் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால், நாங்க எதிர்பார்க்காத இழப்பினை கோவிட் காலத்தில் சந்தித்தோம். பிசினஸ் இல்லை. வேலையாட்களும் போயிட்டாங்க. சம்பளம், வாடகை கொடுக்க முடியவில்லை. கடன் வாங்க முடியவில்லை. சொத்துகளையும் விற்க முடியவில்லை. எங்களின் அனைத்துமாக இருந்த என் மாமனாரை இழந்தேன். கணவரும் கோவிட்டால் பாதிக்கப்பட்டார்.
என் வாழ்க்கையை திருப்பிப் போட்ட தருணம். சொல்லப்போனா ஒரு லட்ச ரூபாய் கூட பிரட்ட முடியல. அப்ேபாது யோசிக்காமல் என் கணவர் எங்களின் 25வது திருமண நாளுக்கு பரிசாக கொடுத்த நகையை அடமானம் வைத்தேன். அந்தப் பணத்தைக் கொண்டு தான் சம்பளம் மற்றும் கடை வாடகை கொடுத்தேன். அப்படி இருந்தும் எங்களின் சென்ட்ரல் கிளை மற்றும் ஒரு சில கிளைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒரு புதிய கிளையை துவங்கும் போது எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பல மடங்கு துக்கம் அதனை மூடும் போது ஏற்படும். ஆனால், இதிலிருந்து மீள வேண்டும் என்று மட்டும் என் மனது சொல்லிக் கொண்ேட இருந்தது. அந்த சமயத்தில் தான் சென்னை அண்ணாநகரில் இடம் கிடைச்சது. வசந்தபவனின் மற்றொரு பரிணாமமாக விபி வேர்ல்ட் உருவானது.
வசந்தபவன் என்றால் முழுக்க முழுக்க தென்னிந்த உணவுகளான இட்லி, தோசை, பூரி, சப்பாத்திதான் நினைவுக்கு வரும். இதே உணவு மற்ற சைவ உணவகத்திலும் கிடைக்கும். அப்படி இல்லாமல் வேறு என்ன செய்யலாம்னு யோசித்தோம். நாங்க குடும்பமா ஓட்டலுக்கு சாப்பிட போகும் போது, நான் ஒரு உணவினை விரும்புவேன். என் மாமனார் ேவறு ஒன்றை விரும்புவார். என் பசங்க அவங்களுக்கு பிடித்ததை சொல்வாங்க. பேரப்பிள்ளைகள் ஒரு உணவினை ஆர்டர் செய்வாங்க.
ஒரு குடும்பத்திலேயே பலவித உணவுப் பிரியங்கள் இருக்கும் போது, அதையே ஏன் சைவ உணவில் ஒரு மாற்றத்தினை கொண்டு வரக்கூடாதுன்னு நினைத்தோம். அது கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனால், என் மகன் ஆனந்தும் என் கணவரும் சேர்ந்து ஒவ்வொரு மெனுவினை உருவாக்கினாங்க. அப்படித்தான் அண்ணாநகரில் விபி வேர்ல்ட் உருவானது. அதைத் ெதாடர்ந்து தற்போது வேளச்சேரியில் அதைவிட பிரமாண்டமாக மற்றொரு கிளையினை துவங்கி இருக்கிறோம்’’ என்றவர், ஒரு சைவ உணவகத்தினை நட்சத்திர உணவகம் போல் அமைப்பதற்கான காரணத்தையும் விவரித்தார்.
‘‘எங்க ஓட்டலுக்குள் நுழையும் போது வாடிக்கையாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் இருப்பது போன்ற உணர்வினை கொடுக்க விரும்பினேன். இங்கு இன்டீரியர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். சாதாரண வெஜிடேரியன் உணவகத்தில் இருந்து விபி வேர்ல்டா உருவெடுப்பதில் என்னுடைய பங்கும் இருக்க முக்கிய காரணம் என் கணவர்தான். அவருக்குதான் 100% நன்றியை சொல்லணும். ஈகோ இல்லாதவர், திறமைக்கு மதிப்பு கொடுப்பவர். மிகப்பெரிய செஃப்.
எனக்கு மிகப்பெரிய பொறுப்பினை நம்பி கொடுத்திருக்கிறார். அதை நான் கவனமாக செயல்படுத்தணும். அதனால் உணவின் தரத்தில் நான் எப்போதும் காம்ப்ரமைஸ் செய்வதில்ைல. ஒரு முறை நான் இங்கு காபி குடித்த போது அதன் சுவையில் மாற்றம் தெரிந்தது. கேட்டதற்கு பால் அதிக நேரம் கொதித்ததாக சொன்னாங்க. அப்போது உடனே அந்தப் பாலை தயிருக்கு பயன்படுத்த சொல்லி ஃப்ரெஷ் பாலில் காபி தயாரிக்க சொன்னேன். வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வராங்க. அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை. உணவினை தரமாக கொடுப்பது மட்டுமில்லாமல் சாப்பிடும் இடமும் அம்சமா இருக்கணும்.
அதற்கேற்ப உணவகத்தின் ஏம்பியன்ஸினை அமைத்திருக்கிறோம். வேர்ல்டில் 300க்கும் மேற்பட்ட ெமனுக்கள் இருக்கு. ஒரு கிளையில் மட்டும் 180 பேர் வேலை செய்றாங்க. ஒவ்வொரு ஸ்பெஷல் உணவுக்கு தனிப்பட்ட செஃப் என 8 பேர் இருக்காங்க. இத்தாலியன், தாய், மலேசியன், ெகாரியன் என உலகளாவிய உணவினை தருகிறோம். உணவகம் மட்டுமில்லாமல் ேகான்ஸ் அண்ட் ப்ரூஸ் என்ற பெயரில் கஃபே ஷாப்பும் உள்ளது. இங்கு டெசர்ட், பேஸ்டரி, ஐஸ்கிரீம், காபி என அனைத்தும் கிடைக்கும். அதில் எங்களின் ஸ்பெஷாலிட்டி குரோசான். முட்டையே சேர்க்காமல் வாயில் வைத்தால் கரையும் வகையில் தயாரித்து இருக்கிறோம்’’ என்றவருக்கும் தன் வேலையாட்களுக்கும் தனிப்பட்ட பிணைப்பு இருப்பதாக கூறினார்.
‘‘எங்க அனைத்து கிளைகளையும் சேர்த்தால் 500க்கும் மேற்பட்டவர்கள் இருப்பாங்க. அதில் பாதி பேர் பெண்கள். நம்முடைய குழந்தையின் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம். அதே போல் தான் என்னுடைய ஊழியர்களையும் சந்தோஷமா வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக உணவுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு தங்க இடமும் உணவும் நிர்வாகம் தரும். ஆனால், நான் அதனை வசதியுடன் கொடுக்க விரும்பினேன். அவர்களுக்கான தனிப்பட்ட கேன்டீனும் இங்குள்ளது. அவர்கள் தங்குமிடத்தை சுத்தம் செய்யவும் ஆட்களை நியமித்து இருக்கிறோம். எல்லாவற்றையும் விட எட்டு மணி வேலை என்றால் அவ்வளவு நேரம் வேலை பார்த்தால் போதும்.
சாதாரண செஃப்பாக வேலைக்கு சேர்ந்தவங்க இப்ப சீனியர் செஃப்பாக இருக்கிறார். அதேபோல் கடைநிலை ஊழியராக இருந்தவர் மேனேஜர் பொறுப்பில் உள்ளார். எங்களுடன் சேர்ந்து எங்க ஊழியரும் வளர வேண்டும், உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாங்க முழு ஒத்துழைப்பு தருகிறோம். அவங்க பிரச்னையை என்னிடம் நேரடியாக வந்து பேசலாம்.
ஒரு இல்லத்தரசியா இதில் நுழைந்த போது கஷ்டமாக இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த துறை இது. இங்கு அதிகம் ஆண்கள்தான் வேலைக்கு இருப்பாங்க. அவர்களின் நிலை புரிந்து செயல்பட கொஞ்சம் சிரமப்பட்டேன். அதன் பிறகு எப்படி பேசணும், என்ன பேசணும்னு தெரிந்து கொண்டேன். இந்த துறையில் பெண்களும் வரவேண்டும் என்பதால் செஃப்பாக மட்டுமில்லாமல் அனைத்து துறையிலும் பெண்கள் இங்கு வேலை பார்க்கிறார்கள்.
தற்போது விபி வேர்ல்டின் அடுத்த பிராஜக்ட் வடபழனி பிரசாத் ஸ்டுடியோ அருகே திட்டமிட்டிருக்கிறோம். அடுத்து சர்வதேச அளவில் ஜெர்மனி மற்றும் துபாயில் திறக்க இருக்கிறோம். நம்ம வீடு வசந்தபவனுக்குமான பிளானும் இருக்கு. கோன்ஸ் அண்ட் ப்ரூஸும் ஒரு தனி கஃபேயாக உருவாகலாம். சாதாரண உணவகமா இருந்தது இப்போது ஒரு ஃபுட் செயின் நிறுவனமாக மாறிடுச்சு. இது கடினமான துறை மட்டுமல்ல நல்ல துறையும் கூட. காரணம், இந்த துறையில் வேலையாட்கள் நிலைத்திருப்பது கடினம். அதே சமயம் சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லும் போது மனசுக்கு நிறைவா இருக்கும். அதுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை’’ என்றார் ஸ்வர்ணலதா.
தொகுப்பு: ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்