பெண்ணின் வலிமையை பேசும் ஓவியங்கள்!
நன்றி குங்குமம் தோழி
“பெண்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதே என் ஓவியங்களின் சிறப்பு. புதுவிதமான நிறக்கலவைகளை முயற்சித்து வண்ணமயமான படைப்புகளை உருவாக்குவதே
என் ஓவியங்களின் தனித்துவம்” என்கிறார் ஓவியர் சுதா ராஜேந்திரன்.கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 - 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக்காட்சியில் மூத்த கலைஞர்கள் பிரிவில் இவர் வரைந்த ஓவியத்திற்கு, ‘நவீன பாணி ஓவியம்’ என்ற சிறப்புடன் மாநில அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஓவியத்தின் சிறப்பம்சம் குறித்து சுதா மேலும் பகிர்ந்து கொண்டதில்...
“சிட்டுக்குருவிகளை அழியவிடு வேனோ?’ எனும் தலைப்பில் நான் வரைந்த ஓவியத்தை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருந்தேன். இது உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தக்கூடிய ஒருவகை abstract painting. பெரும்பாலும் என் ஓவியங்கள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புவேன். தற்போது அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சிட்டுக்குருவிகளை முற்றிலும் அழியவிடாமல் பாதுகாத்து அவை பல்கி பெருக வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஓவியத்தின் மையக்கருத்து.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னெடுப்புகளில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடத்தில் பங்களித்து அவற்றிக்கு உணவளித்து கருணையை வெளிப்படுத்தும் மனிதர்களாலும் அந்தக் காட்சியினாலும் பூமித்தாய் மகிழ்ச்சியடைகிறாள் என்பது போன்ற விவரங்களை ஓவியத்தில் கொடுத்துள்ளேன். சிட்டுக்குருவிகள் மீதான அக்கறையையும் அதன் அழிவுக்கு எதிரான போராட்டத்தையும் குறிக்கும் ஒரு சைகை. பச்சாதாபம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பெண்மையின் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக காட்சியளிக்கும் இந்த ஓவியத்திற்கு விருது கிடைத்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி” என்றவர், ஓவியக்கலையில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து பகிர்ந்தார்.
“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அந்தமான். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்தது. என் விருப்பத்தை அறிந்து அம்மா என்னை ஊக்குவித்தார். திருமணத்திற்கு முன்பு வரை ஓவியம் வரைவது எனக்கு பொழுது போக்காக மட்டுமே இருந்தது. என் கணவர் ராஜேந்திரனை சந்தித்த பின்புதான் ஓவியக்கலையில் எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது. அவர் ஒரு ஓவியக்கலைஞர். கலைவளர்மணி பட்டம் பெற்றவர். டெஸின் ஆர்ட் அகாடமியின் நிறுவனர். திருமணத்திற்கு பின்னர் நாங்க சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டோம். என் கணவர் ஆர்ட் அகாடமியில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது நானும் ஓவியம் வரைந்து பழகுவேன். என் கணவரும் எனக்கு சில நுட்பங்களை கற்றுத்தருவார்.
அவர்தான் என் குரு. சமீபமாக மாஸ்டர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றேன். தற்போது எங்க அகாடமியின் இயக்குநராக இருக்கிறேன்” எனும் சுதா, தன் தனித்துவமான ஓவியங்களின் சிறப்புகளை விளக்கினார்.“நான் வரையும் பெரும்பாலான ஓவியங்கள் பெண்ணியம் பேசுவதாகவும், பெண்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் நற்குணங்களையும் பிரதிபலிப்பதாகவும் காட்சியளிக்கும். பெண்மையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படும் ஓவியங்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. வண்ண அமைப்புதான் என் ஓவியங்களின் சிறப்பம்சம். வித்தியாசமான நிறக்கலவைகளை முயற்சி செய்து ஓவியங்களில் பயன்படுத்தும் போது மேற்பரப்பின் தோற்றம் வண்ணமயமாக காட்சி தரும். என் படைப்புகளை கண்காட்சிகளிலும், அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தி வருகிறேன்.
கருத்துக்களை வெளிப்படுத்தும் பல ஓவியங்களை வரைந்திருக்கிறேன். ஒரு பெண் போர் வீரரை சித்தரிக்கும் ஓவியம் ஒன்றின் மூலம் வெறும் தற்காப்புக் கருவி மட்டுமே அவளின் ஆயுதமல்ல, பெண்ணின் வலிமையையும் அவளின் மீள் தன்மையும் சக்திவாய்ந்த சின்னமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருப்பேன். பச்சாதாபம், ஆழ்மன அமைதி, பயம் கலக்காத துணிச்சல், பெண்களின் உணர்வுகள், வருத்தம், தெளிந்த சிந்தனை, மன நிறைவு, வீரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஓவியங்களையும் என் படைப்புகளில் காணலாம்” என்றவர், ஓவியக்கலையின் முக்கியத்துவத்தை பகிர்ந்தார்.
“நம்மால் சொல்லமுடியாத விஷயங்களை கூட ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும். இதில் ஓவியக்கலையும் ஒன்று. அப்போதைய மனிதர்கள் விஷயங்களை பகிர்வதற்கு ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர். வேட்டையாடுதல், போர் செய்தல் போன்றவற்றை குகைகளில் வரைந்து வைத்தனர். நாயக்கர் காலம், சோழர் காலம், பாண்டியன் காலம் என ஓவியங்கள் மூலம் நம் வரலாற்றை அறிய முடியும். அதேபோல இன்றைய தலைமுறையிலும் மாடர்ன், ரியாலிஸ்டிக், டிஜிட்டல் ஆர்ட் என பல வகைகள் உள்ளன. ஓவியங்கள் மூலம் சமூக கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப எங்க மாணவர்களுக்கு புதிய கோர்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார் சுதா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்