எங்களோடது Blind love
நன்றி குங்குமம் தோழி
‘‘போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவனைக் கையாள்வது அத்தனை சுலபமில்லை. நான் இன்று உன்னதமாக மாறிக்கொண்டு இருப்பதற்கும், நாளை உயர்வாகப் போவதற்கும் ஒரே காரணம் என் மனைவி கீதா. மனநல மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தோற்றுப்போன என் விஷயத்தில், எதுவுமே செய்யாத ஒன்றை என் மனைவி செய்தார். அதுதான் அன்கண்டிஷனல் லவ். ப்ளைன்ட் லவ். என் கத்தல்... என் புலம்பல்... எல்லாவற்றையும் பார்த்தவர் அவர்’’ எனக் கவிஞரும் பாடலாசிரியருமான கார்த்திக் நேத்தா தனது மனைவி கீதாவை நோக்கி விரல் நீட்ட... அவர்களின் காதல், கல்யாணம் குறித்தெல்லாம் கீதா கார்த்திக் நேத்தாவிடம் பேசியதில்...‘‘இதே மாதிரியான ஒரு ஜூலை மாதம் அது. வெயிலும் இல்லாத மழையும் இல்லாத பொழுதில், மேக மூட்டத்துடன் தூரல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுக, அந்த நாள் ஏதோ ஒன்றை சொல்ல வருகிற மாதிரியான உணர்வை எனக்குத் தந்துகொண்டே இருந்தது. அப்போது எனது முகநூல் பக்கத்தில் நட்பு அழைப்பு ஒன்று வர, அதில் பெயர் கார்த்திக் நேத்தா என்றிருந்தது. அந்தப் பெயர் எனக்கு பரிச்சயமானதாய் இருந்தது. அவ்வளவுதான். ஆனால், அவர் ஒரு கவிஞர், பாடலாசிரியர் என எதுவும் எனக்குத் தெரியாது.
நட்பை ஏற்று, அவரின் முகப்பில் நுழைந்து யாரென அறிய முற்பட்டேன். ஊர் சேலம் என்பது மட்டுமே கண்ணில் பட்டது. சேலத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களில் நானும் பங்கேற்பேன். பேசுவேன். சேலத்தில் இருந்த எழுத்தாளர்களை ஓரளவு தெரியும் என்பதால், “சேலமா?” எனக் கேட்டு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப, பதிலுக்கு “ஆமாம் கீதா” என்றார் அவர். தெரிஞ்சவுங்களைதானே பெயர் சொல்லிப் பேசுவோம். இவர் கீதான்னு சொன்னதும், ஏற்கனவே இலக்கியக் கூட்டங்களில் என்னைத் தெரியுமோ என நினைத்து, “என்னைத் தெரியுமா?” என மீண்டும் குறுஞ்செய்தி அனுப்ப, “இல்ல கீதா, இப்பதான் தெரியும்” என்றார். (…) சிறிது நேரத்திலேயே எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் அதிகரித்தது. “ஓ, நீங்கள் பாடலாசிரியரா?” என்றேன். அப்போது இந்து ஆங்கில நாளிதழில் வந்த அவரின் நேர்காணலை அனுப்பி, அவரின் கைபேசி எண்களையும் அனுப்பினார். அந்த நேர்காணலில், அவர் எழுதிய திரைப் பாடல்கள், அவர் எழுதிக்கொண்டிருக்கும் படத்தின் பாடல்கள் என எல்லாத் தகவல்களும் இருந்தது.
இவர்தான் இந்தப் பாடல்களை எழுதியவர் எனத் தெரியாமலே, பலமுறை அந்தப் பாடல்களை கேட்டது நினைவில் வர, மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் அவரை ஆன்லைனில் காணவில்லை. அவர் கொடுத்த எண்களில் “சார் உங்கள் நேர்காணலைப் படித்தேன். நல்லா இருந்துச்சு. வாழ்த்துகள்!! மகிழ்ச்சியா இருக்கு” என வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் நோட் அனுப்பினேன். நீண்ட நேரம் பதிலில்லை. என் ஊரான ஆத்தூரில் அடிக்கடி மின்சாரம் போகும். போனால் வர 4 மணி நேரம்கூட எடுக்கும். மதியம் 3க்கு வாய்ஸ் நோட் அனுப்பிய சிறிது நேரத்திலே மின்சாரம் துண்டிக்கப்பட, கைபேசியும் சுவிட்ச் ஆஃப் ஆனது. இரவு 8 மணிக்கே மின்சாரம் வந்தது.நமக்கு சம்பந்தமான ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும்போது, நம்மை அறியாமலே சந்தோஷமாக இருப்போம் இல்லையா? அப்படித்தான் என் மனசு அன்றைக்கு. மற்ற நாட்கள் மாதிரி அவசரமாய் நகராமல், ரிலாக்ஸ்டாக உணர, ஒரு சந்தோஷம் மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஊரே இருட்டில் மூழ்க, என் வீட்டில் அடுப்பு தகதகவென எரிந்த காட்சியும் அழகாய் தெரிந்தது. சந்தோஷப்படுகிற மாதிரி, ஏதோ ஒன்று நடக்கப் போகுதுன்னு மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.
மின்சாரம் வந்ததும் மொபைலை சுவிட்ச் ஆன் செய்கிறேன். “கீதா இருக்கியா?” எனக் கேட்டு ஒரு குறுஞ்செய்தி 6.30 மணிக்கே வந்திருந்தது. பிறகு “மிஸ் யூ” என்ற குறுஞ்செய்தியும். இன்றைக்கு மதியம் புதுசா பழகுன ஒருத்தர், “மிஸ் யூ” ன்னு சொல்ல, அன்றைய நாள் குழப்பமா... சந்தோஷமா... ஏதோ ஒன்றை சொல்லிக்கிட்டே இருந்தது. பிறகு “இங்கதான் இருக்கேன்னு” பதில் அனுப்பினேன். அடுத்த கணமே, “கீதா, கல்யாணம் பண்ணிக்கலாமா” என கார்த்திக் கேட்க, பக்கென்று இருந்தது. என்ன பதில் சொல்றதுனே தெரியல.“என்ன விளையாடுறீங்களான்னு” கேட்டேன். “இல்ல நிஜமாதான் கேக்குறேன்னாரு”. “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு” சொன்னேன். “சரி எடுத்துக்கோ, ஆனால் நான் உன்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு” அழுத்தமாக சொன்னவரைப், பிறகு இரண்டு நாளாய் ஆளையே காணோம். ஆன்லைனிலும் இல்லை. ஒருத்தர் என்கிட்ட இவ்வளவு தூரம் பேசிவிட்டு இரண்டு நாளாக் காணோம்னா? பதட்டத்தோடு சமூக வலைத்தளத்தில் இருந்த அவரது நேர்காணல்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.
எல்லாம் இருந்தும் தனிமையில் அவர் இருப்பது புரிந்தது.வழிஞ்சு குலஞ்சு பேசாமல், புடிச்சுருக்கு... கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நேர்மையா கேட்டதும் புடிச்சுருந்தது. நல்ல மனிதராக எனக்குப் பட்டாரு. ஒருவேளை வேணாம்னு சொல்லி இருந்தாலும், அதே ஹானஸ்டோட போயிருப்பார். அவர் ஆன்லைன் வந்ததுமே சம்மதம்னு சொல்லிட்டேன். ஆனால், அவரின் வீட்டில் இதை நம்பல. ‘‘கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா? இல்லை நாங்களே பண்ணிக்கவா’’ என இவர் கேட்க, “எந்தப் பொண்ணு? எங்க இருக்கா? நீ குடிச்சுக்கிட்டே இருக்க... உன்ன நம்பி எப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதுன்னு’’ மாமி கேட்டுருக்காங்க. பிறகு மாமி என்னிடம், “என் மகனை போதைப் பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டுவர என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டேன். 20 வருசமா முடியல. நீ மாத்தீருவேன்னு என்னால சொல்ல முடியல. அதனால உங்க அப்பா, அம்மா சம்மதித்தால்
கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன்” என்றார். “அவரின் அம்மாவே இப்படிச் சொல்லும்போது, எப்படிம்மா நாங்க சம்மதிக்க முடியும்னு” அப்பாவும் கேட்க, இந்த சம்பவங்கள் நிகழ்ந்த மறுநாள் காலை 8 மணிக்கு கார்த்திக் என்னை கைபேசியில் அழைத்தார்.
“நான் மறுவாழ்வு மையம் போறேன். என்னை சரி பண்ணிருவேன். கண்டிப்பா உன்னை நல்லாப் பார்த்துப்பேன். ஒரு நாளும் உனக்கு ஒரு கஷ்டமும் வராது. என்னை நம்புன்னு சொன்னாரு...” ஒரு குழந்தை பேசுற மாதிரி அந்தக் குரல் இருந்தது. “சரி நம்புறேன்னு” சொன்னதுமே, மறுவாழ்வு மையத்தில் இணைந்து அங்கேயே தங்கி அவரை சரிபண்ணிக் கொண்டு திரும்பினார். இப்பவரை அவர் அதைத் திரும்பியே பார்க்கல.நான் அவர் வாழ்க்கைக்குள் வந்ததுமே, அவர் குடிக்க மாட்டாருன்னு அழுத்தமா நம்பினேன். ஒருவேளை அவர் தொடர்ந்தால், வெளியில் வந்திரலாம்னு முடிவு செய்தேன். என் கையில் படிப்பு இருக்கு. மனசு நிறைய தைரியம் இருக்கு. பள்ளியில் ஆசிரியராகவும் இருந்தவள். வாழ்ந்திட முடியும். முயற்சிப்போமேன்னு யோசித்தேன். பெரிசா பிரச்னை வராதென என் பெற்றோரை சமாதானப்படுத்தினேன்.2019ல் எங்கள் திருமணம். மறுநாளே சென்னை வந்துட்டோம். இவையெல்லாம் நடந்தது ‘96’ படம் வெளியான பிறகு. அவர் திசைமாறிப்போன பல நிகழ்வுகளை, இரவு 2 மணி வரைகூட என்கிட்ட பகிர்ந்திருக்காரு.
நான் அவர் பேசுவதை அமைதியா உட்கார்ந்து கேட்டுருக்கேன். அவர் நண்பர்களும் சிலவற்றை சொல்லுவாங்க. அதெல்லாம் எனக்கு ஒரு கதை மட்டுமே. ஒரு நாளும் நான் அதை என் மனதில் ஏற்றிக்கொண்டதில்லை.என் இயல்புபடி நானும், அவர் இயல்புபடி அவரும் இருப்பதுதானே வீடு. அனுசரிச்சு வாழ முடியாத அளவுக்கு ஒன்றும் கார்த்திக் இல்லை. நிறைய புத்தகங்கள் படிப்பாரு. அதை என்னிடம் பகிர்ந்துக்கிட்டே இருப்பாரு. என் வாழ்க்கை முழுவதும் கார்த்திக் பேசிக்கிட்டே இருப்பதை கேட்டுக்கிட்டே இருக்க நான் தயாராகவே இருக்கிறேன்.’’
எதிர்பார்ப்பு இல்லாமலே என்னை ஏற்றுக்கொண்டவர்...- கார்த்திக் நேத்தா.
‘‘ஆழமான ஒரு தனிமைக்குள் நான் போய்விட்டேன். இன்னொரு பக்கம் அடிக் ஷன் என்பதால், துணை இருந்தால் நல்லா இருக்கும்னு தோண ஆரம்பித்தது. அதையும் மீறி என் வாசிப்பு என்னை எங்கெல்லாமே இழுத்துச் சென்றது. ஒரு பித்து மனநிலையில் இருந்த நேரம் அது. அப்போது என் வாழ்க்கைக்குள் நுழைந்தவர்தான் கீதா. முகநூலில் கீதாவைப் பார்த்த நிமிடம் பிடித்திருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே என்னை ஏற்றுக்கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகுதான் கீதாவுக்கு ஊர் ஆத்தூர், எம்.ஏ.எம்.எட் படித்தவர், ஆசிரியராக இருந்தவர், அவருக்கும் எழுத வரும், அவரும் கவிதைகள் எழுதுவார், திரைப்படம் ஒன்றில் பாடல் எழுதியிருக்கிறார், இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வார் என்பதெல்லாம் தெரியவந்தது.நான் ஒரு பக்கம் எழுதுறேன். வெளி உலகத்திற்கு தெரிய வருகிறேன். ஆனால், கீதா?! அவரின் திறமைகளை முடக்கி, நீ முதலில் மேல ஏறு... நம் மகன் வளர்ந்து விபரம் தெரியும் போது, நான் எழுத ஆரம்பிக்கிறேன் என்ற முடிவை, அவராகவே எடுத்து அமைதியாய் இருக்கிறார். அவரோட நேரத்தையும் இப்ப நான் எடுத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு இதுவொரு குற்ற உணர்ச்சியாகவே இருக்கு.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்