நியூஸ் பைட்ஸ் - மரியா கொரினா மச்சாடோ
நன்றி குங்குமம் தோழி
இந்த வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், மரியா கொரினா மச்சாடோ. இவரை வெனிசுலாவின் ‘இரும்பு மனுஷி’ என்று அழைக்கின்றனர். வெனிசுலாவை ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இவர். வெனிசுலாவில் அதிக செல்வாக்கான பெண்ணும் இவரே. ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக இவர் நடத்திய போராட்டங்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. வெனிசுலாவை விட்டு எங்கேயும் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார் மரியா. அவருக்கு நாலாப்பக்கமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இங்கிலாந்தின் முதல் பெண் பேராயர்
இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கிய பதவிகளில் ஒன்று, கான்டர்பரி ஆர்ச்பிஷப் எனும் பேராயர். கிறிஸ்துவ மதத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவி இது. பொதுவாக பேராயர்தான் திருச்சபைக்கு உட்பட்ட மாகாணத்தின் தலைமைப் பதவியை வகிப்பார். இங்கிலாந்தில் கடந்த 1400 வருடங்களாக, 105 பேர் பேராயர் பதவியில் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 106-வது பேராயராகப் பதவியேற்கிறார் சாரா மலாலி. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு மரபை உடைத்து முதல் பெண் பேராயர் என்ற பெருமையை தன்வசமாக்கியிருக்கிறார் சாரா. இப்போது அவருக்கு வயது 63.
ஸ்மார்ட் டாய்லெட்
சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் ஸ்மார்ட் சிறுநீர் கழிப்பிடங்களை நிறுவியிருக்கிறது சீன அரசு. இந்தக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க, 20 சீன யுவான்களைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் 250 ரூபாய். வாடிக்கையாளர் தனது அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்களை கழிப்பிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் பதிவு செய்த பிறகே சிறுநீர் கழிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சிறுநீரைக் கழிக்கும் போதே, அதில் சிறு பகுதியைக் கழிப்பிடத்திலுள்ள ஏஐ ஸ்கேன் கருவிகள் எடுத்துக்கொண்டுவிடும். ஒரு சில நிமிடங்களில் சிறுநீரை ஸ்கேன் செய்து அதிலுள்ள ரத்த சர்க்கரையின் அளவு, சிறுநீரக ஆரோக்கியம், ரத்த வெள்ளை அணுக்களின் அளவு, சிறுநீர் தொற்று, புரத வெளியேற்றம், வைட்டமின் சி குறைபாடு உள்ளிட்ட பல மருத்துவ தகவல்களைக் கொடுத்துவிடும். இந்த ரிப்போர்ட் கழிப்பிடத்தின் டிஜிட்டல் திரையில் தோன்றும்; வாடிக்கையாளரின் போனுக்கும் அனுப்பி வைக்கப்படும். 90 நொடிகளிலேயே தங்களுக்கு ரிப்போர்ட் கிடைத்ததாக வாடிக்கையாளர்கள் சொல்கின்றனர்.
கின்னஸ் சாதனை
டோக்கியோவிலிருந்து தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஃபுஜி எரிமலை. 300 வருடங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அதற்குப் பிறகு வெடிக்கவே இல்லை. வருடத்துக்கு ஐந்து மாதங்கள் பனியால் சூழ்ந்திருக்கும். இப்படிப்பட்ட ஃபுஜி எரிமலையின் மீது மலையேற்றம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்நிலையில் கோகிச்சி அகுசவா என்பவர் ஃபுஜியின் மீது மலையேற்றம் செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
அவரது வயது 102. ஆம்; ஃபுஜியின் மீது மலையேற்றம் செய்த அதிக வயதானவர் கோகிச்சிதான். இதற்கு முன்பு 96 வயதிலேயே ஃபுஜியின் சிகரத்தைத் தொட்டு ஜப்பானையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கோகிச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படைத்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட்.
உலக சாம்பியன்
சமீபத்தில் தென்கொரியாவில் உள்ள குவாங்சூ நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த, 239 பாரா வில்வித்தை வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த பாரா வில்வித்தை வீராங்கனையான சீத்தல் தேவியும் போட்டியிட்டு, வரலாறு படைத்திருக்கிறார். ஆம்; தனி நபர் பிரிவில் தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்தியிருக்கிறார் சீத்தல்.
இது போக இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கலப்பு அணியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருக்கிறார். உலகின் முதல் கைகள் இல்லாத வில்வித்தை வீராங்கனையும் இவர்தான். உலக பாரா வில்வித்தை சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே.
தொகுப்பு: த.சக்திவேல்