நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழி
வசூல் சாதனை
உலகளவில் வெளியாகி, வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘நே ஜா 2’ எனும் சீன நாட்டு அனிமேஷன் படம். ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியான, ‘நே ஜா’வின் இரண்டாம் பாகம் இது. 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘Investiture of the Gods’ என்ற சீன நாவலைத் தழுவி, ‘நே ஜா’ மற்றும் ‘நே ஜா 2’வை இயக்கியிருக்கிறார் யாங் யூ. 2டி, 3டி, டால்பி சினிமா, ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், சினிட்டி, சினிட்டி எல்இடி, சிஜிஎஸ் என அனைத்து நவீன திரையரங்குகளிலும் வெளியாகியிருக்கிறது. இதன் பட்ஜெட் வெறும் 700 கோடி ரூபாய்; ஆனால், பன்னிரெண்டு நாட்களிலேயே 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது இதன் வசூல். திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த ஆங்கிலம் அல்லாத வேற்று மொழிப்படம் உட்பட பல வசூல் சாதனைகளைத் தன்வசமாக்கியிருக்கிறது, ‘நே ஜா 2’.
வைரல் பாடகி
பிரேசிலின் முன்னணி பாடகி, பிசினஸ்வுமன், இசையமைப்பாளர், இன்ஸ்டா பிரபலம் என பன்முக ஆளுமையாக வலம் வருபவர், டாட்டி கேர்ள். பன்னிரெண்டு வயதில் தங்குவதற்கு வீடு
இல்லாமல், ஒரு நாடோடி போல வாழ்ந்தார் டாட்டி. சிறு வயதில் அனுபவித்த வறுமையும், கடினமும் அவரை இசையின் பக்கம் நகர்த்தியது. பிரேசிலில் இருந்த முன்னணி இசைக்குழுக்களில் சேர்ந்து பாட ஆரம்பித்தார். பாடுவது மட்டுமல்லாமல், இசையமைக்கவும் கற்றுக்கொண்டார். இதுபோக பிசினஸும் செய்து வருகிறார். இன்று இன்ஸ்டாகிராமில் டாட்டியை 23 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
கடந்த வாரம் பிரேசிலில் டாட்டியின் இசை நிகழ்ச்சி நடந்தது. பத்தாயிரத்துக்கு மேலான அவரது ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். டாட்டியின் மேடைக்கு அருகில் ஒரு நாய் இருந்தது. இசை நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களை உற்சாகப்படுத்த பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். டாட்டி அந்த நாயைப் பார்த்துவிட்டார். நாய் பயந்துவிடும் என்பதால் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் டாட்டி சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவம் டாட்டியை வைரலாக்கிவிட்டது.
பாயின்ட் நீமோவைக் கடந்த பெண்கள்
பசிபிக் பெருங்கடலில் வீற்றிருக்கிறது, பாயின்ட் நீமோ. பூமியிலேயே மிகவும் தனிமையான இடம் இதுதான். பாயின்ட் நீமோவிலிருந்து 2,575 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த நிலப்பகுதியும் இல்லை. மட்டுமல்ல, இந்த இடத்துக்குச் செல்வது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்று பயண ஜாம்பவான்கள சொல்கின்றனர்.
விண்வெளி வீரர்கள் மட்டுமே பாயின்ட் நீமோவிற்கு அருகில் இருக்கின்றனர். அதாவது, பாயின்ட் நீமோவிற்கும், விண்வெளி வீரர்களுக்கும் இடையில் உள்ள தூரம், 416 கிலோ மீட்டர். இந்தப் பகுதியை விண்கலங்களின் மயானம் என்கின்றனர். ஆம்; 250க்கும் மேலான பணி நீக்கம் செய்யப்பட்ட விண்கலங்களுக்கும், விண்வெளிக் குப்பைகளுக்கும் பாயின்ட் நீமோதான் பாதுகாப்பான குப்பைத் தொட்டி. இப்படியான ஓர் இடத்தைத்தான் தில்னாவும், ரூபாவும் கடந்து, சாதனை படைத்திருக்கின்றனர். இந்த இரு பெண்களும் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றி வருகின்றனர்.
அதிகரிக்கும் முதியவர்கள்
இன்றைய தேதியில் இந்தியாவில் 60 வயது மற்றும் 60 வயதுக்கும் மேலானவர்களின் எண்ணிக்கை, 14.9 கோடி. அதாவது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை, 10.5 சதவீதம். 2050ல் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 35 கோடியாக இருக்கும். அதாவது, மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 20.8 சதவீதமாக இருக்கும்.
ஃபிரான்ஸில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக 120 ஆண்டுகளானது; ஸ்வீடனில் 80 ஆண்டுகளானது. ஆனால், இந்தியாவில் 26 வருடங்களில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகப் போகிறது என்பதுதான் இதில் ஹைலைட். இந்தியாவில் மக்களின் ஆயுட்காலம் உயர்ந்திருப்பதும், மருத்துவ முன்னேற்றமும்தான் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முதன்மை காரணமாகச் சொல்லப்படுகிறது
கிராமி விருதை வென்ற இந்தியப் பெண்
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில், 67வது கிராமி விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ‘பெஸ்ட் நியூ ஏஜ், ஆம்பியன்ட் ஆர் சான்ட் ஆல்பம்’ என்ற கிராமி விருதைத் தட்டியிருக்கிறார் சந்திரிகா டாண்டன் என்கிற அமெரிக்கா வாழ் இந்தியர். சென்னையில் பிறந்து, வளர்ந்தவர் சந்திரிகா. ‘பெப்சி’ நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இந்திரா நூயியின் சகோதரி இவர். இந்துஸ்தானி, கர்நாடிக், மேற்கத்திய பாரம்பரிய இசை வல்லுநர்களிடமிருந்து முறையாக இசைப் பயிற்சி பெற்றவர், சந்திரிகா.
இவரது முதல் ஸ்டூடியோ ஆல்பம் ‘சோல் கால்’. ‘கிராமி’ விருதின் ‘சமகால உலக இசை’ என்ற பிரிவில் போட்டியிட்டு, இறுதி வரை சென்றது இந்த ஆல்பம். கடந்த வருடம் ‘திரிவேணி’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதற்குத்தான் ‘கிராமி’ விருது கிடைத்திருக்கிறது. இப்போது சந்திரிகாவின் வயது 70.
தொகுப்பு: த.சக்திவேல்