எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான்!
இந்தியாவின், நம்பகமான விளையாட்டாக இறகுப் பந்தாட்டம் (badminton) இருக்கிறது. கிரிக்கெட் ஆதிக்கத்தைச் சமாளித்து, தனக்கென ஒரு இடத்தை இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. பிரகாஷ் படுகோன், புல்லெலா கோபிசந்த், ஜ்வாலா குட்டா, அஷ்வினி பொன்னப்பா, சாய்னா நேஹ்வால், பி.வி.சிந்து, லக்ஷ்யா சென், கிடம்பி காந்த் போன்ற முன்னணி ஆட்டக்காரர்களின் பங்களிப்பும் அதற்கு ஒரு முக்கிய காரணம். இதில் சிந்து இரண்டு முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியாவில் இறகுப் பந்தாட்டத்திற்கான திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தாலும், முன்னணி நட்சத்திரங்களான சாய்னா, சிந்து இவர்கள் தொட்ட உச்சத்தை அவர்களால் மீண்டும் தொட முடியுமா என்பது சந்தேகம்தான்! இவர்களை தொடர்ந்து ஒரு நம்பிக்கை விடிவெள்ளியாக முளைத்திருக்கிறார் தன்வி ஷர்மா.இறகுப் பந்தாட்டத்தில் பாதி சாய்னா, பாதி சிந்துவாக அவதாரம் எடுத்திருக்கும் புதுப் புயல் தன்வி ஷர்மா. இவர் ஏற்கனவே BWF (Badminton World Federation) போட்டிகளில் இறுதிப் போட்டியாளராக சென்றுள்ளார். சாய்னா, சிந்து, மாளவிகா என இந்திய வீராங்கனைகள் மட்டுமே இதுவரை BWF உலக சுற்றுப்பயணம் 300 போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஜூனியர் பிரிவில் உலக நம்பர் 1 ஆகவும் இருக்கும் தன்வி, 11ம் வகுப்பு மாணவி. படிப்பு, இறகுப் பந்தாட்ட விளையாட்டு என இரண்டுக்கும் இடையே எவ்வாறு பயணிக்கிறார் என்பதை தன்வியே சொல்கிறார்.
‘‘தற்போது குவஹாத்தி தேசிய பேட்மின்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறேன். நான் இந்த விளையாட்டை தேர்வு செய்ய காரணம் என் அம்மா தான். அம்மா தேசிய அளவில் கைப்பந்து (Volleyball) விளையாட்டு வீராங்கனை. முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் உடற்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர். அப்பா அரசு ஊழியர். என் அக்காவும் இறகுப் பந்தாட்ட வீராங்கனைதான். அவரும் குவஹாத்தி தேசிய பேட்மின்டன் அகாடமியில்தான் பயிற்சி பெற்று வருகிறார். நாங்க இருவரும், தேசிய அளவிலான வீராங்கனைகளாவோம் என்று அம்மா நம்பினார். நான் சர்வதேச வட்டத்திற்கு முன்னேறுவேன் என்று அம்மா ஒருபோதும் நினைத்ததில்லை. அம்மா விளையாட்டு வீராங்கனை என்பதால் நானும் அக்காவும் டென்னிஸ், கிரிக்கெட், பேட்மின்டன் இதில் ஏதாவது ஒன்றை விளையாட வேண்டும்னு விரும்பினாங்க. ஆனால், அம்மாவுக்கு பேட்மின்டன் மேல் தனி ஈடுபாடு உண்டு. அவர் சாய்னா, சிந்துவின் பரம ரசிகை. அதனால் முதலில் அக்காவை பேட்மின்டன் பயிற்சியில் சேர்த்துவிட்டார். எனது ஊர் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஹோஷியார்பூர். அது நகரம் என்றாலும் அங்கு இந்த விளையாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வேறு வழியில்லாமல், அங்கு கிடைக்கும் வசதிகள் கொண்டுதான் அக்கா பயிற்சியினை மேற்கொண்டார்.
அக்கா விளையாட்டில் முன்னேறிய போது அவருக்கு மேம்பட்டப் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் இல்லை என்பதால், அம்மா அக்காவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அம்மாவுடன் நானும் பேட்மின்டன் கோர்ட்டுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்கும் இந்த விளையாட்டு அறிமுகமானது. அக்காவைப் பார்த்து நானும் ஆறு வயசில் என்னுடைய பயிற்சியை துவங்கினேன். ஒரு கட்டத்திற்கு மேல், அம்மாவாலும் இந்த விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை அக்காவிற்கு சொல்லித்தர முடியவில்லை. இருந்தாலும் அம்மா அளித்த பயிற்சியைக் கொண்டு மாநில அளவு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றார். பிறகு 2016ல், 13 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய தரவரிசைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அக்காவின் திறமையை பார்த்து ஐதராபாத் புல்லேலா கோபிசந்த் அகாடமியிலிருந்து பயிற்சிக்காக அழைப்பு வந்தது. நல்ல வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று அம்மா, அக்காவையும் என்னையும் அழைத்துக் கொண்டு ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார்.
நானும் பயிற்சியில் சேர்ந்தேன். அம்மா அங்குள்ள பேட்மின்டன் கிளப்பில் வேலைக்குச் சேர்ந்தார். எங்களின் பயிற்சிக்கான செலவிற்கு அம்மாவும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’’ என்றவர், கொரோனா காலத்திற்குப் பிறகு மீண்டும் பேட்மின்டன் ராக்கெட்டை கையில் எடுப்பதில் சந்தேகமாக இருந்துள்ளது. ‘‘2020 வரை எங்களின் பயிற்சி தடையில்லாமல் இருந்தது. கொரோனா என்பதால் நாங்க சொந்த ஊருக்கே வந்துட்டோம். இங்கு வந்த போது நான் மீண்டும் பேட்மின்டன் விளையாடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் நிதிப் பிரச்னை பெரிதானது. பயிற்சி பெறவும், போட்டிகளில் பங்கெடுக்கவும் மிகவும் சிரமப்பட்டோம். அந்தச் செலவினை அம்மா எப்படி சமாளித்தார் என்பது இப்போதும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. 2021ல், என்னுடைய 12 வயதில் முதல் தேசிய பதக்கத்தை வென்றேன். தொடர்ந்து தேசிய தரவரிசை சாம்பியன்ஷிப்பில் 15 வயதுக்குக் கீழ் உள்ள பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 2024ல் தேசிய சாம்பியன்ஷிப்பில் U-15 மற்றும் U-17 பிரிவுகளில் தங்கம் வென்றேன்.
அதே ஆண்டில், ஆசிய அணி சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய பெண்கள் அணியில் என்னை சேர்த்துக் கொண்டார்கள். அப்போது சிந்து அக்காவின் அறிமுகமும் கிடைத்தது. இறகுப் பந்தாட்டத்தில் எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான். அதனைத் தொடர்ந்து நானும் அக்காவும் குவஹாத்தி தேசிய பேட்மின்டன் அகாடமியில் பயிற்சிக்காகச் சேர்ந்தோம். சிந்து அக்காவுக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் பார்க் அவர்கள்தான் எங்களுக்கும் பயிற்சி கொடுத்தார். படிப்படியாக அமெரிக்க ஓபனின் இறுதிப் போட்டி வரை முன்னேறினேன்.கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். 16 வயதில் உலகத் தர வரிசையில் 50வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறேன். என்னுடைய அடுத்த இலக்கு 2028 ஒலிம்பிக்ஸ். இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. லாஸ் ஏஞ்சலில் 2028ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது என் கனவு. இறகுப் பந்து தவிர எனக்கு கிரிக்கெட் மற்றும் நீச்சல் விளையாட்டும் பிடிக்கும்’’ என்கிறார் 16 வயதே நிரம்பிய தன்வி ஷர்மா.
கண்ணம்மா பாரதி