தொழில்முனைவோராக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு!
நன்றி குங்குமம் தோழி
பெண்கள் எதையும் எதிர்த்துப் போராட வேண்டும். சுய வேலை வாய்ப்பும், சுய பொருளாதாரமும் அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்கிறார் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு மழலையர் பள்ளியினை சுயமாக நடத்தி வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வந்து கொண்டிருக்கும் முப்பத்தி இரண்டே வயதான பத்மபிரியா தயாளன். கணவர் மரைன் ஆபீஸராக தனது பணியில் சிறப்பான நிலையில் இருக்க, இவரோ சுய தொழில் ஆர்வத்தில் முனைப்புடன் செயல்பட்டு அதில் சிறப்பான வெற்றியும் பெற்றுள்ளார். இதற்கென பல்வேறு படிப்புகளையும் முறையான பயிற்சிகளையும் பெற்றுள்ள பத்மபிரியா குழந்தை கல்வி குறித்தும் தனது தொழில் முனைவோர் பயணம் குறித்தும் பகிர்ந்தார்.
மழலையர் பள்ளி...
எனக்கு சிறு வயது முதலே கற்பிக்கும் ஆர்வமும் ஆசையும் அதிகமாக இருந்தது. அதுவே நான் பள்ளியினை துவங்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. நான் கல்லூரிப் படிப்பினை முடித்த பிறகு சில வருடங்கள் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தேன். அதேபோல் ப்ரீ ஸ்கூல் பணிகளையும் செய்து வந்தேன். ஒரு ஐந்தாறு வருட அனுபவங்களுக்கு பிறகு நாமே சொந்தமாக ப்ரீ ஸ்கூல் பள்ளியை துவங்கினால் என்ன என்ற எண்ணம் உதித்தது.
அதற்கென முறையான மாண்டிசோரி கல்வியினை நேரிடையான வகுப்புகள் மூலமாகவும், சில ஆன்லைன் அட்வான்ஸ் கோர்ஸ்கள் மூலமாகவும் கற்றேன். இந்த பல்வேறு பணி மற்றும் பயிற்சி அனுபவங்களை கொண்டு ‘யூரோ கிட்ஸ்’ என்ற மழலையர் பள்ளியை நடத்தி வருகிறேன். இந்தப் பள்ளியை 2017ம் ஆண்டில்தான் துவங்கினேன். தற்போது எங்களது மழலையர் பள்ளி ஒன்பதாவது ஆண்டாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தை செல்வங்களுக்கு ஆரம்ப கல்வியினை ஆர்வமுடன் கற்பித்து வருகிறேன் என்பதே எனக்கு மனமகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் முதல் கற்றல் என்பது எவ்வளவு முக்கியமான பணி என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
இதற்கான கல்வித் தகுதி மற்றும் பயிற்சி...
என்னைப் பெற்றவர்கள்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக மாற்றினார்கள். அதற்கான பெரும் நன்றிகளை நான் அவர்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். நான் பி.டெக் கல்வியினை முடித்துள்ளேன். இதனோடு டிப்ளமோ இன் சைல்ட் சைக்காலஜி படிப்பினை முடித்துள்ளேன். எம்.பி.ஏவும் படித்துள்ளேன். முறையான மாண்டிசோரி கல்வி பயிற்சியினை எடுத்திருக்கிறேன். சைக்காலஜி படிப்பினையும் முடித்திருக்கிறேன். மேலும் சிறு வயதிலிருந்தே பிள்ளைக்கு டியூஷன் எடுத்த அனுபவமும் ப்ரீ ஸ்கூலை திறம்பட நடத்த காரணமாக இருந்தது.
என் பெற்றோர் படிக்காதவர்கள். ஆனால், என்னை பட்டதாரியாக மாற்றி இருக்கிறார்கள். இன்று குழந்தைகளுக்கு முதன்முதலான ஆரம்பக் கல்வியினை கற்றுத் தரும் அளவிற்கு நான் வளர
அவர்களே காரணம். அவர்களுக்கு பிறகு என் கணவர் மற்றும் குடும்பத்தினர் தந்த முழு ஒத்துழைப்பு.
குழந்தைகளுக்கான ஆரம்பகால கற்றல்...
நாங்க குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை மிகவும் எளிதானது. ஒரு குழந்தையின் ஆரம்பக் கால கல்வி ஆர்வமே அவரது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் முக்கிய விஷயம். கற்றலுக்கான ஆசையும் ஆர்வமும் ஆரம்பக் கல்வி காலத்தில் தானே துவங்குகிறது. அதனை சிறப்பாக கொடுத்தாலே கல்வி கற்கும் ஆர்வம் குழந்தைகளுக்கு உண்டாகி விடும். நாங்கள் விளையாட்டு மற்றும் கதைகளின் மூலமாக குழந்தைகளின் கற்றல் திறனை பெரிதும் மேம்படுத்துகிறோம். தற்போது 100 குழந்தைகள் எங்கள் பள்ளியில் ஆரம்பக் கல்வியினை கற்று வருகிறார்கள். எங்க குழந்தைகள் 12 அடி கொடியினை தங்களது பிஞ்சுக் கரங்களால் உருவாக்கி உலக சாதனை செய்தனர். இது கலாம் புக் ஆஃப் அவார்ட்ஸில் இடம்பெற்றது எங்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் என்பேன்.
அடுத்தகட்ட செயல்பாடுகள்...
தற்போது சிறிய அளவிலான மழலையர் பள்ளியினை நடத்தி வருகிறேன். பிற்காலத்தில் பெரிய கட்டிடத்தில் இன்னும் பெரியதாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது எனது பெருங் கனவு. மேலும், அதிக அளவிலான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியினை கற்றுத் தர வேண்டும். கற்றல் குறித்த பயிற்சிகளை தினந்தோறும் அப்டேட் செய்து கொண்டு குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். கற்றலில் பல்வேறு நவீனங்களையும் புதுமைகளையும் புகுத்த வேண்டும் என்பதெல்லாம் எனது எதிர்கால ஆசைகள்.
பெண்களுக்கு ஆலோசனை...
மழலையர் பள்ளி துவங்கி நடத்துவது பெண்களுக்கு ஏற்ற நல்ல ஒரு சுயதொழில் வாய்ப்பு. கொஞ்சம் ஆர்வமும் உழைப்பும் இருந்தால் நல்லதொரு முன்னேற்றங்கள் அடையலாம். முறையான கல்வி மற்றும் மாண்டிசோரி பயிற்சிகள் மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்று. மழலைகளின் ஆரம்பப் பள்ளி காலம் பாதுகாப்பானதாகவும், தகுதியான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், நற்சூழலும் கொண்டதாக அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை மனதில் கொண்டு ஆர்வத்துடன் உழைத்தால் சிறந்த சுய தொழில்முனைவோராக, சிறந்த கல்வியாளராக உயரலாம். என்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கு என் கணவர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்களால்தான் என்னுடைய பணியில் என்னால் முன்னேறி செல்ல முடிகிறது’’ என அக்கறையுடன் கூறிய பத்மபிரியா தயாளன் சிறந்த கல்வியாளருக்கான ‘அன்பு தமிழச்சி’ விருது, தலைசிறந்த பள்ளிக்கான முதன்மை விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்