இசையே மருந்து-நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழி
ரஷ்யாவின் புகழ்பெற்ற அரசியல் தலைவரான லெனினுக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது, பீத்தோவனின் இசையை கேட்கச் சொல்லி மருத்துவர் பரிந்துரை செய்ததாக வரலாற்றுச்
சம்பவங்களும் இருக்கின்றன. இதுபோக மன ரீதியான பல பிரச்னைகளுக்கும் இசைதான் அருமருந்தாக இருப்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இந்நிலையில் பீத்தோவனின் 5ம் சிம்பொனியைத் தொடர்ந்து கேட்டு வந்தால், 20 சதவீத புற்றுநோய் செல்களை அந்த சிம்பொனி அழித்துவிடும் என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மட்டுமல்ல, ஆரோக்கியமான செல்களை அந்த இசை எதுவுமே செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் உலகமெங்கும் யூடியூப் உட்பட பல்வேறு இசைத் தளங்களில் பீத்தோவனின் 5வது சிம்பொனி மற்றும் அவரது இசைப் படைப்புகளைக் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆப் டெவலப்பில் சாதனை
‘‘உலகின் வயதான ஆப் டெவலப்பர் இவர்தான். மட்டுமல்ல, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்குமே தங்களின் விருப்பமான பாதையில் செல்வதற்கான நம்பிக்கையைத் தருகிறார்...’’ என்று மசாகோ வகாமியாவைப் பாராட்டியிருக்கிறார் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக். ஜப்பானில் பிறந்து, வளர்ந்த மசாகோவின் வயது 89. அறுபது வயதுக்கு மேல்தான் அவருக்கு கம்ப்யூட்டரே அறிமுகமாகியிருக்கிறது.
கம்ப்யூட்டரின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, இன்றைக்கு ஆப் டெவலப்பராகவே மாறிவிட்டார் மசாகோ. ‘‘வயதானவர்களுக்கான எந்த கேமிங் ஆப்-ஐயும் நான் காணவில்லை. அதனால் எங்களுக்கான ஒரு ஆப்-ஐ நானே உருவாக்கினேன்...’’ என்று ‘ஹினடன்’ என்ற என்டர்டெயின்மென்ட் ஆப்-ஐ உருவாக்கியிருக்கிறார் மசாகோ. ஐபோனுக்கான பிரத்யேகமான ஆப் இது.
கின்னஸ் சாதனை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்யன் சுக்லா என்ற சிறுவனை ‘மனித கால்குலேட்டர்’ என்று கணித உலகமே புகழ்ந்து வருகிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என எந்தவிதமான கணக்கைக் கொடுத்தாலும் மனதுக்குள்ளேயே கணக்குப் போட்டு, சரியான பதிலைச் சொல்லிவிடுகிறார். இந்த கணக்குச் செயல்பாட்டை கால்குலேட்டர் வேகத்தில் செய்கிறார் ஆர்யன். ‘‘ஒளியின் வேகத்தில் கணக்குப் போடுகிறார்...’’ என்று ஆர்யனைப் பாராட்டுகின்றனர்.
சமீபத்தில் மனதுக்குள்ளேயே வேகமாக கணக்குப் போடும் 6 கின்னஸ் சாதனைகளைத் தன்வசமாக்கியிருக்கிறார் ஆர்யன். பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்யனுக்கு அழைப்புகள் வருகின்றன. மட்டுமல்ல, கணக்கு சம்பந்தமான நிகழ்வுகளை நடத்துவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார் ஆர்யன். இப்போது அவரது வயது 14.
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரிப்பு
கடந்த வருடம் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், லக்னோ, போபால் உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களில் பல்வேறு வேலைகளுக்கு ஏழு கோடிப் பேருக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இதில் 2.8 கோடிப் பேர் பெண்கள் என்பதுதான் இதில் ஹைலைட். 2023-ம் வருடத்துடன் ஒப்பிடும்போது வேலைக்காக பெண்கள் விண்ணப்பிப்பது 20 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கின்றனர். குறிப்பாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே 60 லட்சம் பேர் வேலைக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.
தூய்மையான நகரங்கள்
இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களைப் பற்றிய ஒரு பட்டியல் வெளியாகியிருக்கிறது. நகரத்தின் தூய்மை, குப்பைகள் நிர்வாகம், சாக்கடை வசதி, அந்நகரங்களில் வசிக்கும் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாராகியிருக்கிறது. அந்த வகையில் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வசிக்கும் சிறு நகரங்களில் சட்டீஸ்கரில் உள்ள அம்பிகாபூரும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதசத்தில் உள்ள இந்தூரும், மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையும் இடம் பிடித்துள்ளன.
தொகுப்பு: த.சக்திவேல்