தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

மசாலாப் பொடியின் பெயரைச் சொன்னாலே போதும்... ஒவ்வொரு பிராண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்தப் பொடிகளை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முன் வருகிறார்கள். என்னதான் தரமாக இவர்களின் பொடி வகைகள் இருந்தாலும், வீட்டில் அம்மா தன் கைப் பக்குவத்தில் அரைக்கும் மசாலாப் பொடியினால் செய்யப்படும் உணவின் சுவைக்கு ஈடாகாது. இன்று சாதாரண மிளகாய் தூள் அரைக்கவே யாருக்கும் நேரமில்லை. அதை புரிந்து கொண்டு தன் அம்மாவின் தயாரிப்பினை பிசினஸாக மாற்றியுள்ளார் சித்தார்த். இவர் தன் அம்மா காயத்ரியுடன் இணைந்து சமையலுக்குத் தேவையான அனைத்து மாசாலாப் பொடிகள், தொக்கு வகைகளை பக்குவமாக தயாரித்து ‘அம்மாஸ் சீக்ரெட்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள்.

‘‘எங்க வீட்டில் பல ஆண்டுகளாக அம்மாதான் வீட்டிற்குத் தேவையான சாம்பார் பொடி, இட்லி பொடி என அனைத்து மசாலாப் பொடிகளை தயாரிப்பார்’’ என்று பேசத் துவங்கினார் சித்தார்த். ‘‘வீட்டில் சமைலுக்கான பொடிகள் தீரத் தீர அம்மா அரைத்து வைத்துவிடுவார் என்பதால் நாங்க இதுவரை இந்தப் பொடிகளை எல்லாம் கடைகளில் வாங்கியது கிடையாது. ஒரு முறை அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மசாலாப் பொடிகளை கடைகளில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், என்னவோ அந்தப் பொடிகளில் மனமோ, சுவையோ இல்லை. குறிப்பாக அம்மாவின் கைப்பக்குவம் இல்லை. அப்போதுதான் இதுபோன்ற பொருட்கள் மார்க்கெட்டில் இல்லையே என்று தோன்றியது’’ என்றவர், முதல் கட்டமாக மசாலாப் பொடிகளை சிறிய சாம்பில் பேக்குகளில் நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்துள்ளார்.

‘‘சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய் பொடிதான் சாம்பில் பாக்கெட்டில் கொடுத்தோம். வாங்கியவர்கள் அனைவரும் ‘இதையே பெரிய அளவில் ஆர்டர் கொடுத்தா செய்து

தருவீங்களா’ன்னு கேட்டது மட்டுமில்லாமல் ஆர்டரும் கொடுத்தாங்க. அதன் பிறகு ஆர்டரின் பேரில் பேட்ச் பேட்சாக செய்ய ஆரம்பித்தோம். நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என வாய்வார்த்தையாக எங்களின் வாடிக்கையாளரின் எண்ணிக்கையும் அதிகரிச்சது. பொடிகளை எங்க வீட்டு கிச்சனில்தான் தயாரிக்கிறோம் என்பதால் ஆர்டரின் பேரில் சிறிய சிறிய பேட்ச் அளவில் தயாரித்து கொடுக்கிறோம்’’ என்றவரை தொடர்ந்தார் சித்தார்த்தின் அம்மா காயத்ரி.

‘‘அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டியின் ரெசிபிகள்தான் இவை. அவங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அப்பெல்லாம் சாம்பார் பொடி, ரசப்பொடி, பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி எல்லாம் வீட்டில்தான் அரைப்போம். காய்கறிக்கு என தனிப்பட்ட பொடி ஒன்று அம்மா செய்வாங்க. உருளைக்கிழங்கு, வாழைக்காய்க்கு அந்த ஸ்பெஷல் பொடியை சேர்ப்பாங்க. மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். என் மகன் சித்தார்த்துக்காக சத்து மாவு கஞ்சி மிக்ஸ் தயாரித்தேன்.

அவனுக்கு ஏழு மணிக்கு பள்ளி என்பதால், வீட்டில் இருந்து 6.30க்கு கிளம்பணும். அவ்வளவு காலை வேளையில் சிற்றுண்டி சாப்பிட முடியாது. அவனுக்காக பிரத்யேகமாக இந்த கஞ்சி மிக்சினை தயாரித்தேன். மதிய உணவு வேளை வரும் வரை பசியில்லாம இருக்கணும் என்பதால் 22 சத்துள்ள ெபாருட்களாக சேர்த்து அனைத்தையும் முளைக்கட்டி தயார் செய்தேன். உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமானது.

எனக்கு 63 வயதாகிறது. உடன் உதவிக்கு யாரும் வைத்துக் கொள்ளவில்லை. எல்லா வேலையும் நானேதான் பார்க்கிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே சமையல் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. வீட்டில் பத்து பேர் விருந்தாளி வந்தாலும் முழுக்க முழுக்க நானே சமையல் வேலையை முடிச்சிடுவேன். அம்மா சமைக்கும் போது கூடவே இருந்து பார்த்துதான் சமைக்கவே கத்துக்கிட்டேன். அதை என் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தேன்.

ஆரம்பத்தில் சாம்பார் பொடி, ரசப்பொடி, பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி மட்டும்தான் கொடுத்து வந்தோம். அதன் பிறகு வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப முருங்கை இலை பொடி, கறிவேப்பிலை பொடி, தேங்காய் பொடி என தயாரிக்க ஆரம்பித்தோம். இட்லி பொடி அதிக காரம், மிதமான காரம் என இரண்டு வகையாக தயாரிக்கிறோம். நான் இந்த பிசினஸ் ஆரம்பிக்க என் மகன் சித்தார்த்தான் முக்கிய காரணம்’’ என்றவரை தொடர்ந்தார் சித்தார்த்.

‘‘நான் அடிப்படையில் சார்டெட் அக்கவுன்டென்ட். 14 வருடம் அந்த துறையில்தான் இருந்து வருகிறேன். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சொந்தமா ஏதாவது செய்யணும்னு எண்ணம் இருந்தது. அம்மாவின் ெபாடிக்கு டிமாண்ட் இருப்பதை தெரிந்து கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்தோம். இப்ப ஓரளவுக்கு பிசினஸ் நல்ல முறையில் போகுது. நானும் அம்மாவிடம் இந்தப் பொடிகளை எப்படி செய்யணும்னு கற்றுக் கொண்டு வருகிறேன். என்ன அம்மாவின் கைப்பக்குவம் எனக்கு இன்னும் வரல. ஆனால், பொடிகளை எப்படி தயாரிக்கணும்... அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். இப்போது முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில்தான் விற்பனை செய்கிறோம். ஈ-காமர்ஸ் துறையிலும் எங்களின் பொடிகள் கிடைக்க அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்தப் பொடிகளில் எதிலும் நாங்க எந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டால் ஆறு மாசம் வரை கெடாமல் இருக்கும். இதைத் தொடர்ந்து நம்முடைய பாரம்பரிய காலத்தில் என்னெல்லாம் பொடிகளை பயன்படுத்தி வந்தோம் என்று பார்த்து அதெல்லாம் அறிமுகம் செய்து வருகிறோம். உதாரணத்திற்கு அங்காயப் ெபாடி, வேப்பிலைக் கட்டி போன்றவை. வேப்பிலைக் கட்டி நார்த்த இலை கொண்டு தயாரிப்போம். அது கொஞ்சம் கட்டியா இருக்கும். அங்காயப்பொடி பிரசவித்தவர்கள், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்தது.

வேப்பம்பூ, சுக்கு, மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா எல்லாம் சேர்க்கப்பட்டு இருக்கும். பிரண்டைப் பொடியில் பிரண்டையை நன்கு எண்ணெயில் வறுத்துப் பொடிக்க வேண்டும். முட்டி வலிக்கு நல்லது. இதைத் தொடர்ந்து கவுனி அரிசியில் கஞ்சி மிக்ஸும் தயாரித்து வருகிறேன். உடம்புக்கு ரொம்ப நல்லது. கவுனி அரிசி, பார்லி, கொள்ளு, மிளகு, சீரகம், ஓமம் எல்லாம் சேர்த்து தயாரிக்கிறேன். அங்காயப்பொடி, வேப்பிலைக் கட்டி, கருப்பு கவுனி அரிசி கஞ்சி எல்லோரும் விரும்ப மாட் டார்கள். அதனால் ஆர்டரின் பேரில் மட்டும்தான் இதனை தயாரிக்கிறோம்’’ என்றவர் ரெடி டூ ஈட் உணவுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக கூறினார்.

‘‘எங்களின் ஒரு பொடியினை பலதரப்பட்ட உணவில் சேர்த்து சாப்பிடலாம். உதாரணத்திற்கு தேங்காய்ப் பொடி அதை அப்படியே சாப்பாட்டில் நெய் சேர்த்து சாப்பிடலாம். காய்கறி பொரியலில் தேங்காய் துருவலுக்கு பதிலாக சேர்க்கலாம். சாண்ட்விச்சில் ஸ்பிரெடாகவும் பயன்படுத்தலாம். இட்லிப் பொடிக்கு சிறந்த மாற்று. அதே போல் எங்களின் கொத்தமல்லி தொக்கும் சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன்.

இன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் ஆரோக்கியமாக சமையல் செய்ய நேரம் இருப்பதில்லை. அவர்களுக்காக ஆரோக்கியமான அதே சமயம் எளிதில் சமைக்கக்கூடிய உணவுகளை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறோம். அதில் நிறைய ரசாயனங்கள் சேர்ப்பாங்க. இப்படி இல்லாமல் என்ன உணவுப் பொருட்களை கொடுக்க முடியும் என்று ஆய்வு செய்து வருகிறோம். இந்தியா மட்டுமில்லாமல் ெவளிநாட்டிற்கும் ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். இப்போது வீட்டில்தான் அனைத்தும் செய்கிறோம். பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் சித்தார்த்.

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Advertisement