‘அன்பு’ தான் என் சீக்ரெட் ரெசிபி!
நன்றி குங்குமம் தோழி
89 வயது, முகம் மலரும் புன்னகை, தெளிவான பேச்சு, அதுமட்டுமா..? தனக்கே உரித்தான பாணியில் விதவிதமான உணவு வகைகளை நேர்த்தியாக சமைத்துக் காட்டுகிறார் சரஸ்வதி பாட்டி. இன்ஸ்டாகிராமை திறந்து theiyerpaati என்று தேடினால் சுவையான உணவுகளை சமைப்பதற்கான செய்முறை விளக்கங்களுடன் சரஸ்வதி பாட்டியின் காணொளி பதிவுகள் முன் வந்து நிற்கின்றன. பேச்சுலர்ஸ் முதல் இல்லத்தரசிகள் வரை சரஸ்வதி பாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். பாட்டியின் ருசியான உணவுகளை சாப்பிடவே அவரை சந்திக்க வந்து போவார்கள். இவ்வளவு நேர்த்தியாக சமைக்க அவ்வளவு கைப்பக்குவம் நிச்சயம் இருக்கும்தானே..? பெங்களூருவில் உள்ள சரஸ்வதி பாட்டியிடம் தொலைபேசியில் பேசியபோது...
“எனக்கு 12 வயது இருக்கும் போதிலிருந்து சமையல் கற்றுக்கொள்ள தொடங்கினேன். நான் சிறுவயதாக இருக்கும் போதே என் அம்மா இறந்துவிட்டார். அதன் பின்னர் யாரும் எனக்கு சமையல் கற்றுக்கொடுக்கவில்லை. ஆர்வம் இருந்ததால் என் சித்தி சமைப்பதை கூர்ந்து கவனிப்பேன். சமையலுக்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார். தேவையான பொருட்களை எப்படி, எவ்வளவு, எப்போது சேர்க்கிறார் போன்ற விஷயங்களை கவனமாக பார்ப்பேன். இப்படி யாராவது சமையல் செய்வதை பார்த்துதான் நானும் சமைக்க கற்றுக்கொண்டேன்.
பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை சமைப்பேன். ஆனால், புதுவிதமான உணவுகளை கற்றுக்கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. மறைந்த என் கணவர் வங்கிப் பணியில் இருந்த போது நிறைய இடமாற்றம் நடக்கும் என்பதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு குடிபெயர்வோம். எந்த ஊர் சென்றாலும் அங்குள்ள பிராந்திய உணவுகளை சமைப்பதில் ஆர்வம் இருந்ததால் அவற்றை கற்றுக்கொண்டேன். மேலும், வெவ்வேறு உணவு வகைகளில் சைவ உணவுகளை முயற்சி செய்ய தவறமாட்டேன்.
சமைப்பதும் அதை மற்றவர்களுக்கு பரிமாறுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் என்பது நிஜத்தில் ஒரு கலை. நீங்க செய்வதை ரசித்து செய்தால் எதுவும் உங்களுக்கு கடினமாக தெரியாது. சமையல் என்னுள் ஒரு பாதி. அதனால் அது எனக்கு கஷ்டமாகவோ சோர்வாகவோ தெரியவில்லை. நான் சமைக்கும் உணவை மக்கள் விரும்பி சாப்பிடுவதை பார்த்து ரசிப்பதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு வேறெதிலும் இல்லை. சமையல் என்னுடைய பேரார்வமாகவே மாறிவிட்டது. நல்ல ருசியான உணவை யார்தான் விரும்பமாட்டார்கள்? நான் சமைக்கும் உணவை ரசித்து சாப்பிடும் மக்கள் எப்போதும் என்னை சுற்றியுள்ளனர். அது ஒரு நல்ல உணர்வு.
பெரும்பாலும் என்னுடைய உணவுகளை விரும்புவார்கள். குறிப்பிட்டு சொன்னால் நான் தயார் செய்யும் மைசூர்பாக் நிறைய பேருக்கு பிடிக்கும். நான் வைக்கும் ரசம், என் வட இந்திய நண்பர்களுக்கு பிடிக்கும் என்பதால் அதை ரசித்து உண்ணுவார்கள். தர்பூசணியின் தோலைப் பயன்படுத்தி தயாரிக்கும் கூட்டு நான் செய்யும் தனித்துவமான உணவு எனலாம். நான் கேரளாவில் வளர்ந்ததால் எதையும் வீணாக்கக்கூடாது என்ற பழக்கம் இருந்தது. ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தி விடுவோம்” என்றவர் ‘அன்பு’தான் தன் சீக்ரெட் ரெசிபி என்கிறார்.
“ஜனவரி 2024ல் இருந்துதான் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவுகளை இட தொடங்கினேன். இது யதார்த்தமாக நடந்த கதை. ஒருநாள் என் பேத்தி மீனாட்சி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் என்னவென்று கேட்டேன். அவளும் சொல்லிக் கொடுத்தாள். அது என்னை வெகுவாக கவர்ந்தது. பிறகு என் பேத்தியிடம், “யார் வேண்டுமானாலும் இணையத்தில் வீடியோ பதிவுகளை செய்யலாமா?” என்ற ஒரே கேள்விதான் கேட்டேன். அதற்கான பதில்தான் நீங்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என் வீடியோக்கள்.
என் பேரக்குழந்தைகள் கற்றுக்கொள்வதற்காக சமையல் குறிப்புகள், வீட்டு வைத்தியம் போன்றவற்றை பதிவு செய்தேன். இப்போது உலகம் முழுதும் உள்ள என் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அது உதவுகிறது. ஆரம்பத்தில் கேமராவை பார்த்து பேசவே எனக்கு பதட்டமாக இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டேன். என் ஃபாலோவர்ஸ் கொடுக்கும் ஊக்கம் என்னை மேலும் இயங்க செய்கிறது. நான் உண்மையில் ஆசீர்வாதமாக உணர்கிறேன்” எனும் சரஸ்வதி பாட்டி ஆன்லைன் மூலம் தன் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்கிறார்.
“மசாலா, ஊறுகாய், வற்றல், வடாம், ஹெல்த் மிக்ஸ் போன்ற நிறைய வகை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். முக்கியமாக என் ஃபாலோவர்ஸ்களுக்காக இதை தொடங்கினேன். என் சமையல் குறிப்புகளை முயற்சி செய்யும்போது ரெசிபிக்கான மசாலாக்கள் இருப்பதில்லை, அதை தயார் செய்ய நேரமும் இல்லை என்றனர். முதலில் ஒரு கிவ் அவே சேலஞ்சு நடத்தி, அதன் மூலம் நான் தயார் செய்த பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள், நல்ல கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் எல்லோரும் அதனை விரும்பி கேட்டனர். அதன் பிறகுதான் இந்தத் தொழிலை ெதாடங்கினேன். என் பொருட்களுக்கு கிடைக்கும் கருத்துகள் நல்லதோ கெட்டதோ ஒவ்வொன்றும் எனக்கு ஸ்பெஷல்தான். சில மதிப்புரைகள் மேலும் தொடர ஊக்குவிக்கின்றன, மேலும், சில மதிப்புரைகள் குறைபாடுள்ள பகுதிகளை சரி செய்ய உதவுகின்றன.
எனக்கு ஆதரவளித்து அன்பு காட்டிய அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த 89 வயதில் எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு நிறைய ஆசீர்வாதங்களும் கிடைத்துள்ளன. என் குடும்பத்தினருக்கும் என் பேத்தி மீனாட்சிக்கும் சிறப்பாக நன்றி சொல்ல விரும்புகிறேன். அவரின் உதவியால்தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. என் பேத்தி எப்போதும் என் பலமாகவும் ஊக்கமாகவும் இருந்து வருகிறார்’’ என்றார் சரஸ்வதி பாட்டி.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்