வாழத்தானே வாழ்க்கை!
நன்றி குங்குமம் தோழி
பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். கணவனே இருந்தாலும் அவனிடம் தன்னுடைய சொந்த செலவிற்கு எதிர்பார்க்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை, குடும்பம் என்றும் மேலும் பொறுப்புகள் கூடினாலும், வேலையினை கைவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக தங்களின் கல்வித் தகுதியை அதிகரிக்க மேலும் படிக்கிறார்கள். சில பெண்கள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயாராக்கிக் கொள்கிறார்கள்.
குடும்பப் பொறுப்புகளுக்கு இடையில் மேலும் படிப்பது, வேலைக்குச் செல்வது என்று பார்க்கும் போது பெண்கள் மல்டிடாஸ்கர்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார் 36 வயதான ஷர்மிளா பேகம்.
குமரி மாவட்டம், வடக்கு சூரங்குடியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் சென்னை தலைமைச் செயலகத்தின் சட்டப் பிரிவில் ‘மொழிப் பெயர்ப்பாளர்’ பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஷர்மிளா பேகம் தன் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே அரசு வேலைக்காக மிகவும் உழைத்துள்ளார். ‘‘திருமணத்தின் போதே நான் இளங்கலைப் பட்டம் மற்றும் ஆசிரியர் பணிக்கான பி.எட்டும் முடித்திருந்தேன். என்னுடைய கணவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். ஆனால், அவரின் வேலையில் அவ்வப்போது பணி மாற்றம் இருக்கும். திருமணத்தின் போது அவருக்கு வேலூரில் வேலை என்பதால், நான் அங்குதான் இருந்தேன்.
நான் நன்றாக படிப்பேன் என்பதால், என் கணவர் வீட்டில் சும்மா இருக்காமல், சட்டம் பட்டப்படிப்பு படிக்கச் சொல்லி ஊக்குவித்தார். வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் பி.எல் வகுப்பில் சேர்ந்தேன். நான் பட்டதாரி என்பதால் மூன்றாண்டுகள் சட்டம் படித்தால் போதும். இளங்கலை பட்டம் பெறாதவர்கள் தான் நான்காண்டுகள் படிக்க வேண்டும். சட்டப் படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வானேன்.
இதற்கிடையில் எனக்கு குழந்தைகளும் பிறந்தது. ஐந்து குழந்தைகள் என்பதால் நான் வேலைக்குச் செல்லாமல் அவர்களை பராமரிப்பதில் கவனம் செலுத்தினேன். என்னுடைய கடைசி மகனுக்கு ஒரு வயதான போது என் கணவருக்கு கடலூர் சிறைக்கு மாறுதல் கிடைத்தது. நான் கும்பகோணத்தில் தங்கி இருந்தேன். மேலும், நான் போட்டித் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்ததால், என் அம்மா எனக்கு உடன் துணையாக இருந்தார். குழந்தைகள் அனைவருக்கும் சிறு வயது என்பதால், என்னுடைய பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கு என தனிப்பட்ட நேரம் ஒதுக்க ரொம்பவே சிரமமாக இருந்தது. இருந்தாலும் குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு அவசியம் என்பதால், பயிற்சி முடித்து எந்நேரம் வந்தாலும், அவர்களுடன் சில மணி நேரங்களை செலவிட தவறமாட்ேடன்.
சட்டப் படிப்பு முடித்த சில மாதங்களில் கணவருக்கு பாளையங்கோட்டைக்கு மாறுதல் கிடைத்தது. அதனால் மீண்டும் நான் குழந்தையுடன் சொந்த ஊருக்கே வந்துவிட்டேன். வீட்டில் அம்மா குழந்தைகளை பார்த்துக்கொள்ள நான் சட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க விரும்பாமல், தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற ஆரம்பித்தேன்.
அதே சமயம் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கும் என்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை. குடும்பப் பொறுப்புகள், வழக்கறிஞராகப் பயிற்சி, குழந்தைகள் பராமரிப்பு என்று பல வேலைகள் இருந்ததால், போட்டித் தேர்வுகளுக்கு அதிகக் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு மதிப்பெண்ணில் வேலை கிடைக்காமல் போயிருக்கிறது. ஆனால், மனம் தளரவில்லை. அதற்கு என் கணவர்தான் காரணம். அவர்தான் நான் தளரும் போது எல்லாம் எனக்கு ஊக்கம் அளித்து வந்தார்.
சென்ற ஆண்டு அரசு சட்டத் துறையில் மூன்று மொழிப்பெயர்ப்பாளர்கள் வேலை இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஒரு பதவி பிற்படுத்தப்பட்டவருக்கு, இன்னொரு பதவி மிகவும் பிற்படுத்தப்
பட்டவருக்கும், மூன்றாவது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஒரு வேலைக்கு நான் விண்ணப்பித்தேன். ஒரு பதவி ஆனால், போட்டி அதிகம். நான் மற்றவர்களை விட நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால், அந்த வேலை எனக்கு கிடைத்தது. இம்மாதம் பணியிலும் சேர்ந்துவிட்டேன். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உடன் அம்மா இருக்கிறார். ஆனால், அவர் ஒருவரால் மட்டுமே ஐந்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் அவருக்கு உதவியாக ஒருவரை வைத்திருக்கிறேன்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். சென்னை எனக்கு புதுசு. புதிய இடம். பரந்து விரிந்த நகரம். பொறுப்புகளும் மேலும் கூடியிருக்கிறது. இதற்கிடையில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு முதல் சுற்று போட்டித் தேர்வில் தேர்வாகியுள்ளேன். இறுதிக்கட்ட போட்டித் தேர்வு இம்மாத கடைசியில் சென்னையில் நடக்க உள்ளது. அதற்கும் என்னைத் தயார் படுத்தி வருகிறேன். எனக்காக என் கணவர் விடுப்பு எடுத்து எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். வாழத்தானே வாழ்க்கை... வாழ்ந்து காட்டுவோம் என்ற உந்துதலில் தொடர்ந்து பயணிக்க தீர்மானித்துள்ளேன்’’ என்கிறார் ஷர்மிளா பேகம்.
தொகுப்பு:கண்ணம்மா பாரதி
படங்கள்: அருண்