கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி
* பொட்டுக் கடலை மாவு ஒரு பங்கு, அரிசி மாவு இரு பங்கு, கொஞ்சம் வெண்ணெய், மிளகுப் பொடி, உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு இவற்றை நீர் விட்டுப் பிசைந்து தட்டி பொரித்தெடுத்தால் மொறு மொறு தட்டை தயார்.
* அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, பிறகு முறுக்கு, தட்டை செய்தால் மொறு மொறுப்புடன் இருக்கும்.
* மிக்ஸர் செய்யும் போது கறிவேப்பிலையுடன் நான்கைந்து பூண்டு பற்களையும் நசுக்கிப் போட்டு பொரித்து கலந்தால் மணமும், ருசியும் கூடும்.
* இன்ஸ்டன்ட் மாவில் குலோப்ஜாமூன் செய்யும் ேபாது வெண்ணெய் சிறிது சேர்த்தால் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.- எம்.ஏ.நிவேதா, திருச்சி.
* உளுந்து வடைக்கு மாவு ஆட்டும் போது சிறிது துவரம் பருப்பை சேர்த்து ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும்.
* அரிசி, பருப்பு பாத்திரத்தில் காய்ந்த கறிவேப்பிலைகளை அடியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
* எலுமிச்சம் பழ ரசம் செய்வது போல ஜாதி நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம்.
* ரவா உப்புமா மிஞ்சிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
* வெண்டைக்காயின் காம்புகளையும், தலைப் பகுதியையும் நறுக்கிவிட்டு வைத்தால் மறுநாள் சமைக்க பிஞ்சு போலவே இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்யும் போது கடலைப் பருப்புக்கு பதில் பொட்டுக்கடலை போடலாம்.
*மழைநீரில் பருப்பு வகைகளை வேகவைத்தால் விரைவில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
* எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் போடுவதற்கு முன் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் எடுத்து நறுக்கினால் உள்ளேயுள்ள அரும்புகள் சிதறாமல் சாறு வீணாகாமல் நறுக்கலாம்.
* தக்காளிப் பழம் அனைத்தும் நன்றாகப் பழுத்துவிட்டால் தக்காளிப் பழத்தின் மீது டேபிள் சால்ட் தூவி, பிசிறி வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் வரை தக்காளி கெடாமலிருக்கும்.
* மாங்காய் அதிகம் புளிப்பாக இருந்தால் துண்டுகளாக நறுக்கி, சுண்ணாம்பு தண்ணீரில் போட்டு கழுவி எடுக்க புளிப்பு குறைந்து விடும்.
* எந்த ஊறுகாயாக இருந்தாலும் கடுகு எண்ணெயை ஊற்றிவிட்டால் எளிதில் கெட்டுப் போகாது.- கே.எல்.புனிதவதி, கோவை.
* தயிருக்கு உறைக்கு ஊற்றும் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சினால் கெட்டியான தயிர் கிடைக்கும்.
* கிழங்கு, பருப்பு, பயிறு வகைகளை வேக வைக்கும் போது அவை வெந்த பின்பு தான் உப்பு சேர்க்க வேண்டும்.
* தண்ணீரில் பாத்திரத்தை முக்கி எடுத்து விட்டு அதில் முட்டையை அடித்து கலக்குங்கள். பாத்திரத்தில் தண்ணீர் தன்மை இருந்தால், அதில் முட்டை கூழ் ஒட்டிப் பிடிக்காது.- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* உருளைக்கிழங்கு சப்ஜி செய்யும் போது ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காய பவுடர், நறுக்கிய தக்காளி துண்டுகள் சேர்த்து கொதிக்க வைத்து பொடி வாசனை நீங்கியவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை உதிர்த்து ேசர்த்து நன்கு கொதித்தவுடன் சிறிதளவு கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கடுகு தாளித்தால் சுவையான சப்ஜி தயார். இந்த சப்ஜி எல்லா வகை டிபனுக்கும் ஏற்றது.
* அப்பளத்தை இரண்டாக ஒடித்து, தண்ணீரில் நன்கு நனைத்து, பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி, பிறகு பஜ்ஜி செய்தால் மெத்தென்று இருக்கும். பஜ்ஜி மாவில் சோடா சேர்த்து செய்ய நன்கு உப்பலாக வரும்.
* தயிர் பச்சடியினை இப்படியும் செய்யலாம். வெண்டைக்காயை வில்லைகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து சாப்பிடும் சமயம் தயிரில் கலந்து உபயோகிக்கலாம். புடலங்காயை சிறியதாக நறுக்கி குக்கரில் வேகவைத்து சேர்க்கலாம். வாழைப்பழத்தை சிறிது துண்டுகளாக நறுக்கி சாப்பிடும் சமயம் தயிரில் கலக்கலாம்.
- ராஜிகுருஸ்வாமி, சென்னை.