ஆசிரியர்கள் சுவடி வாசிப்பது அவசியம்!
நன்றி குங்குமம் தோழி
ஓலைச்சுவடி படியெடுப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிதாயினி, பத்திரம் எழுத்தர், கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் பட்டயக் கல்வி முடித்தவர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என்று பன்முகத் தன்மையுடன் விளங்குபவர்தான் தஞ்சாவூர் மானம்பு சாவடியில் வசிக்கும் முனைவர் ரம்யா. ‘‘நான், இதுவரை சுமார் 55-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை படியெடுத்துள்ளேன். அதில் மருத்துவம் சார்ந்த சுவடிகளே அதிகம். ஏனெனில் நமது முன்னோர்கள், நமக்கு பின்பு வரக்கூடிய சந்ததியினர்கள் ஆரோக்கியமாக வாழ மருத்துவக் குறிப்புகளையே அதிகம் பதிவு செய்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இன்று ஒருவரிடம் கிடைக்கக்கூடிய 100 சுவடிகளில் 60 விழுக்காடு மேல் மருத்துவச் சுவடிகளே இருக்கின்றன. இலக்கியம், இலக்கணம், ஜோதிடம், கணிதம் குறித்த சுவடிகள் மீதி விழுக்காடு எனலாம்.
சுவடிகளை வாசிப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். அதை வாசிக்க அனைவருக்கும் நேரமிருக்காது. ஆனால், விருப்பமுள்ளவர்கள் அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு துறையில் அதாவது, இலக்கணம், இலக்கியம், மருத்துவம், ஜோதிடம் போன்றவற்றை தேர்வு செய்து அதற்கு உரை எழுதி நூலாக வெளியிடலாம். பெரும்பாலும், சித்த மருத்துவர்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய பேராசிரியர்கள்தான் இம்முயற்சியில் ஈடுபடுவதுண்டு.
பொதுவாக உயர் கல்வி படிப்பு, தொழில் இப்படி எல்லோருமே பிற துறை அறிவை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. சுவடி பார்க்கும் ஆர்வமும், தமிழக மக்களிடையே பெருக வேண்டும். அதிலும் ஆசிரியர், இலக்கிய ஆர்வலர், உதவிப் பேராசிரியர் கண்டிப்பாக சுவடி வாசிக்கும் பழக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். பல லட்சக்கணக்கான சுவடிகள் இருக்கும் பொழுது, குறைந்த அளவு படியெடுக்க தெரிந்தவர்களை வைத்து தமிழ்ச் சுவடிகளை பிரதி செய்து நூலாக வெளியிட முடியாது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எளிமையான பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் மற்றும் தமிழ் அமைப்பு சார்பாகவும் ஒரு 100 நபர்களுக்காவது சுவடிகளை வாசிக்க கற்றுத்தர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதை நிறைவேற்றினால் பல அரிய விஷயங்களை கொண்டுள்ள சுவடிகளை நூலாக வெளியிட முடியும்’’ என்றவர், சுவடி படியெடுக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களையும் மற்றும் தீர்வினையும் விவரித்தார்.
‘‘படியெடுப்பாளரின் அனுபவ அறிவுக்கு ஏற்ப சுவடியில் உள்ள தலைப்பு, ஏடு, வரி, வாக்கியம், சொல், மொழி, நடை போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு வரியினை விட்டு எழுதினால், ஏட்டினை தவறவிட்டால், ஏட்டின் அமைப்பினை மாற்றி எழுதினால், புரியாத இடத்தினை தவறாக யூகிப்பதால், ஏடுகளை சுத்தம் செய்யும் போது தவறவிடுதல், ஏடுகளை மாற்றி மாற்றிக் கட்டுதல், படியெடுக்கப்பட்டுள்ளதா என்று பதிவேட்டில் பார்க்காமல் எழுதத் தொடங்குதல்... இது போன்ற சிக்கல்கள் படியெடுக்கும் போது நிகழும்.
இதற்கான தீர்வினை புரிந்துகொள்ளும்படி சுவடிகளை எழுத வேண்டும். குறிப்பாக இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும். உரைநடை மற்றும் செய்யுள் இரண்டின் வேறுபாட்டினை தனித்து காட்ட வேண்டும். ஒரே தலைப்பில் பல சுவடிகள் இருக்கும். அதனால் ஒரு சுவடியினை படியெடுக்கும் போது ஒழுங்குமுறையினை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் படியெடுக்கும் போது சிரமங்களை சந்திக்க நேரிடாது’’ என்றவர், எவ்வாறு படியெடுக்க வேண்டும் என்று கூறினார்.
‘‘சுவடி குறித்த முழுவிவரம் அறிந்த பிறகு, அகப்புற கட்டமைப்பினை சரி செய்ய வேண்டும். அதன் பிறகு ஏட்டின் மொழிநடையினை கவனிக்க வேண்டும். ஆசிரியரை அறிந்து, தலைப்பு கொடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து எந்த வருடம் சுவடி எழுதப்பட்டது என்று கவனிக்க வேண்டும். பிறகு மொழிநடையை அடையாளம் காண்டு, வட்டார வழக்கினை அறிந்து கொண்டால், படியெடுத்தலுக்கும், பதிப்புக்கும் துணை புரியும். மருத்துவச் சுவடி எனில் தனி ஏடு கூட பதிவு செய்ய முடியும்.
தனி நூலாக வெளியிடுவதற்கும், சுவடிப் படியெடுத்துப் பதிப்பு நூல் வெளியிடுவதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சுவடிப் படிக்கத் தெரியாதவர்கள் கூட, இந்த கையெழுத்துப் பிரதியினை நூலாக மாற்ற முடியும். மேலும், புதிய நல்ல ஆய்வு நூல்கள் இந்த படியெடுத்தல் வழியாக அறிமுகம் செய்ய முடியும். சுவடிகளை படியெடுப்பது மூலம் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற இலக்கிய புதையல்களை, இலக்கணச் செறிவுகளை, வைத்திய முறைகளை, கணித நிபுணத்தை, சோதிட சாஸ்திரங்களை, மந்திர முறை வைப்புகளை புதுப்பித்து உலக மக்கள் யாவரும் பயன்பட வேண்டும்’’ என்றார் ரம்யா.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்