இந்தியாவை லாரியில் சுற்றும் கேரளத்து தேவதைகள்!
நன்றி குங்குமம் தோழி
வெகு நீண்ட காலமாகவே ஆண்கள் அனைத்து துறையிலும் தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது பெண்கள் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தங்களின் கால்தடம் பதிய துவங்கி இருக்கிறார்கள். அதில் அவர்கள் தற்போது பிடித்திருப்பது சரக்கு லாரிகளை இயக்குவது. இந்த லாரிகளை அகில இந்திய அளவில் நான்கு பெண் லாரி ஓட்டுனர்கள் இயக்கி வருகிறார்கள். அதில் தமிழ்நாட்டை ேசர்ந்த அன்னபூரணி ராஜ்குமார், செல்வமணி என்ற இரு பெண்கள், மத்திய பிரதேசத்தில் யோகிதா ரகுவன்ஷி, காஷ்மீரில் ராபியா யாஸீன்.
இவர்களில் இந்தியாவின் முதல் பெண் லாரி ஓட்டுநர் என்ற பெருமைக்குரியவர் யோகிதா ரகுவன்ஷி. அவரிடம் சொந்தமாக லாரி உள்ளது. ஆனால், மற்றவர்கள் சம்பளத்திற்காக டிரைவர்களாக வேலை பார்க்கிறார்கள். தனிப்பட்ட முறையில் இந்த பெண்கள் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால், கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் குடும்பமாக லாரி இயக்குவதை தங்களின் தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
ஜலஜா, ஜலஜாவின் மைத்துனி சூர்யா, ஜலஜாவின் மகள் தேவிகா ரதீஷ்தான் அந்த மூன்று கேரளத்து தேவதைகள். கேரளாவை சேர்ந்த இந்தப் பெண்கள் தங்களின் வீட்டை நிர்வகிப்பது போல் லாரிகளையும் பராமரித்து வருகிறார்கள். கேரளத்திலிருந்து காஷ்மீர், அஸ்ஸாம் என சரக்கு லாரிகளை இயக்கி வருகிறார்கள். ‘புத்தேட்டு’, கொச்சி - கோட்டயம் வழியில் உள்ள ஏட்டுமானூர் என்ற ஊரில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்தக் குடும்பத்திற்கு 27 லாரிகள், ஒரு கேரவன் சொந்தமாக உள்ளன. தங்களின் லாரிப் பயணம் மற்றும் தொழில் குறித்து பேசத் துவங்கினார் ஜலஜா.
‘‘நான் திருமணமாகி வந்த போது என் கணவருக்கு ஒரு லாரி சொந்தமாக இருந்தது. 2014ல் கணவருடன் சேர்ந்து நானும் லாரியில் பயணிக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு லாரி ஓட்டத் தெரியாது. எனக்கு பல இந்திய நகரங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஒரு காரணத்திற்காகவே கணவருடன் பயணிக்க ஆரம்பித்தேன். லாரியில் இந்தியாவை சுற்றி வருவது எனக்குப் பிடித்தது. அதனால் லாரி ஓட்டுநராக ஆனால் என்ன என்று நினைத்தேன்.
அதற்காக பயிற்சி பெற்று கனரக வாகன உரிமம் பெற்றேன். ஆரம்பத்தில் கேரளாவுக்குள்தான் லாரியினை ஓட்டி வந்தேன். அதன் பிறகு முதல் முறையாக என் கணவருடன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு காஷ்மீருக்குப் புறப்பட்டேன். என் கணவரும் லாரி ஓட்டுனர் என்பதால், நானும் அவருமாக மாறி மாறி லாரியை ஓட்டிக் கொண்டு காஷ்மீரை சென்றடைந்தோம். இந்தப் பயணம் மேலும் பல இடங்களுக்கு தொடர்ந்தது. என்னைத் தொடர்ந்து கணவரின் தம்பி மனைவியும் இணைந்தார். அவர் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விடும் போது மட்டும் லாரி ஓட்ட வருவார்.
எப்போது நீண்ட தூரம் சரக்கு லாரியைக் கொண்டு போகவேண்டுமோ அந்த நேரத்தில் நான் என் கணவருக்கு உதவியாக உடன் பயணிப்பேன். இப்போது கல்லூரியில் படிக்கும் என் மகளும்
லாரி ஓட்டுகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் என் மகளும் என் மைத்துனியும் சேர்ந்து கொள்வார்கள். வேலை பார்த்துக் கொண்டே பல ஊர்களை சுற்றிப் பார்க்கிறோம். வீட்டில் நாங்க அனைவரும் லாரிகளை ஓட்டுவதால் எங்களின் தொழிலும் வளர ஆரம்பித்தது.
ஒன்றில் இருந்து 27 என லாரியின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனக்கு தூரப் பயணங்கள்தான் பிடிக்கும். கேரளத்திலிருந்து வட மாநிலங்களுக்கு பிளைவுட், ரப்பர், வெங்காயம், இஞ்சி, அன்னாசிப் பழம் போன்றவற்றை கொண்டு போவோம். இதுவரை 24 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் பயணம் செய்திருக்கிறேன். நேபாளத்திற்கு லாரியிலேயே சென்றேன். ஹரித்வார், ரிஷிகேஷ் மேற்கொண்டபோது, மாமியாரையும் உடன் அழைத்து சென்றேன். என்னுடைய நீண்ட லாரிப் பயணம் என்றால்12 சக்கர பாரத்பென்ஸ் டிரக்கில் 10,500 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததுதான்.
கோட்டயத்தில் ஆரம்பித்து குஜராத், பின்னர் அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து வரை சென்று சரக்குகளை இறக்கி, அங்கிருந்து கேரளாவிற்கு நானும் என் கணவரும் திரும்பினோம். இப்போது என்னுடைய இரண்டாவது மகளும் கனரக லாரிக்கான உரிமம் எடுக்க தயாராகி வருகிறார்’’ என்றவர், பெண்கள் லாரிப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதா என்பது பற்றி பகிர்ந்தார்.
‘‘கேரளத்தில் இருந்து வெளியே பெண்கள் லாரியில் பயணிப்பது பாதுகாப்பானது இல்லைன்னு பலரும் எங்களிடம் கூறினார்கள். அது தவறு என்பதற்கு எங்களின் லாரிப் பயணங்கள்தான் உதாரணம். நான் பல பயணம் செய்திருக்கிறேன். ஒருபோதும் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை. சமூகத்தில், திரைப்படங்கள், ஊடகங்களில் சித்தரிக்கப்படும் விதம், லாரி ஓட்டுதல் பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது.
ஆண் லாரி ஓட்டுநர்களை பெரும்பாலும் கொடூரமான கதாபாத்திரங்களாகக் காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. ஒவ்வொரு தொழிலிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில், லாரி ஓட்டுதல் என்பது மற்ற தொழில்களைப் போலவே ஒரு மரியாதைக்குரிய தொழிலாகும். இந்த மனநிலை இங்கும் வர வேண்டும்.
பயணங்கள் பாதுகாப்பாக இருந்தாலும் சில சமயம் பதட்டமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக சரக்கு லாரிகளை கொண்டு போகும் போது, சரக்குகள் திருடர்களால் திருடப்படும். ஒருமுறை, மேற்குவங்காளத்திற்கு பயணித்த போது லாரியில் ஏறி சரக்குகளைத் திருட முயன்றனர். சரக்குகளை மூடியிருக்கும் தார்ப்பாலின் போர்வையைக் கத்தியால் அறுத்தனர். நான் பயந்து போனேன். முதலில் தடுமாறினாலும், பிறகு சுதாரித்துக் கொண்டு, ஒதுக்குப்புற சாலையிலிருந்து லாரியின் திசையை மாற்றி நகரத்திற்குள் மக்கள் நிறைந்த சாலையில் லாரியை செலுத்தினேன். பொதுமக்கள் பார்ப்பதை அறிந்ததும் லாரியிலிருந்து குதித்து ஓடிவிட்டனர்’’ என்றவர், ‘புத்தேட்டு வ்லாக்ஸ்’ என்ற பெயரில் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘இப்போது சமூகவலைத்தளங்களில் பலர் வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். நாங்களும் யுடியூப் சேனலில் எங்களின் வழிப் பயணங்களை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளோம். எங்களுக்குச் சொந்தமாக காராவேன் ஒன்று உள்ளது. அதில் சென்ற மாதம் லடாக் வரை பயணித்தோம். அந்தப் பயணத்தை நாங்க பதிவிட்டிருந்தோம். அதைப் பார்த்து வெளிநாட்டில் இருந்தும் பலர் எங்களைப் பார்க்க வருகிறார்கள்.
சில சமயம் இரண்டு லாரிகளில் சரக்குகளை எடுத்துச் செல்வோம். பெண்கள் எல்லோரும் குழந்தைகளுடன் ஒரு லாரியிலும். என் கணவர் மட்டும் மற்றொரு லாரியில் வருவார். லாரிப் பயணம் பிடித்திருந்தாலும், மாதவிடாய் நேரத்தில் அசவுகரியமாக இருக்கும். நெடுஞ்சாலைகளில் தரமான கழிப்பறைகள் இருக்காது. பெட்ரோல் பங்குகளில் இருந்தாலும் அசுத்தமாக இருக்கும். ஓரளவுக்கு சுமாராக இருக்கும் கழிவறைகளில் டவல் பாத் எடுத்துக் கொண்டு உடைகளை மாற்றி பயணத்திற்கு தயாராகிவிடுவோம்.
சாலை ஓரத்தில் லாரியினை நிறத்திவிட்டு சமைத்து சாப்பிடுவோம். அதற்கு தேவையான ஸ்டவ், பாத்திரங்கள், காய்கறிகளை பயணத்தின் போது எடுத்துச்செல்வது வழக்கம். சமைக்க முடியாத போது சாலையோர தாபாக்களில் சாப்பிடுவோம். நீண்ட தூரம் பயணிப்பதால் டிரைவர் கேபினில் குளிர்சாதன வசதி செய்திருக்கிறோம். அப்போதுதான் சோர்வு தெரியாது. சின்னச் சின்ன நடைமுறை சவால்கள் இருந்தாலும் குடும்பமாக பயணிக்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கும்’’ என்றார் ஜலஜா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி