தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதல் மாதச் சம்பளம் முழுதும் சேவைக்காக செலவு செய்தேன்!

நன்றி குங்குமம் தோழி

“பரிவு, பச்சாதாபம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று என் பேராசிரியர் எனக்கு விளக்கிய போதுதான், என்னால் பிறரின் துன்பங்களை புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது தோன்றிய ஒரு சிறு பொறி போன்ற எண்ணம்தான் ‘ஜீவிதம் ஃபவுண்டேஷன்’ தொடங்க காரணமாக அமைந்தது” என்கிறார் மனிஷா. தெருவோரங்களிலும் சாலையோரங்களிலும் தங்களின் நிலையறியாது அன்றாட நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டெடுத்து பராமரித்து ஆதரவு இல்லங்களில் சேர்த்து அவர்களுக்கு உறைவிடத்தை உறுதி செய்து தருகிறார். பிழைக்க வழியின்றி தவிப்பவர்களுக்கு சிறு தொழிற் பயிற்சிகளை அளித்து தங்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள உதவி வருகிறார் ஈரோடு பகுதியை சேர்ந்த மனிஷா.

“சிறு வயதிலிருந்தே உதவும் மனப்பான்மை எனக்கு இருந்தது. வறியவர்களுக்கு உணவு வழங்குவது, இல்லாதவர்களுக்கு ஆடைகளை வழங்குவது போன்றவற்றை செய்தாலும், அதெல்லாம் பரிவு மட்டும்தான். ஆனால், அவர்களின் துன்பத்தை உணர்ந்து பரிதாப நிலையை மாற்றிக்கொள்ள நாம் செய்யும் உதவிதான் பச்சாதாபம் என்பது பின்னர் புரிந்தது. நர்சிங் பயிற்சியில் இருக்கும் போது அரசு மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் பணிக்காக சென்றிருந்தோம். அங்கிருப்பவர்களின் நிலையை உணர்ந்து என் வேலை என்பதையும் தாண்டி அவர்களை நெருங்கிய உறவுகளாக நினைத்து பராமரித்து வந்தேன். சிறு உதவி செய்தாலும் கையெடுத்து நன்றி சொல்வார்கள்.

அப்போது அவர்களுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறதை என்னால் உணர முடிந்தது. நர்சிங் படிப்பு முடிந்ததும் என் நண்பர்கள் மற்றும் பேராசிரியரின் உதவியால் திருச்சியில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு மலைக்கோட்டை அடிவாரத்தில் ஆதரவில்லாத உணவின்றி தவிக்கும் நிறைய மக்கள் இருப்பதை கவனித்தேன். என் முதல் மாதச் சம்பளத்தில் அவர்களுக்கு உதவ வேண்டுமென நினைத்து, சம்பளம் வந்ததும் முழுவதையும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்கி வேண்டியவற்றை செய்து கொடுத்து உதவினேன். பின்னர் ஒரு கல்லூரியில் கிளினிக்கல் இன்ஸ்ட்ரக்டராக வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்குச் செல்லும் வழியில் தினமும் இரண்டு நபர்கள் சாலையோரப் பகுதியில் இருப்பார்கள்.

அவர்கள் இருவரும் மனநலம் சரியில்லாத ஆதரவற்றவர்கள். நான் அவர்களிடம் பேச முற்பட்டபோது, அப்பகுதியிலிருந்த மக்கள் ‘அவர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள், அடிப்பார்கள்’ என்றெல்லாம் சொன்னார்கள். இருப்பினும் அந்த நபர்களிடம் பேசினேன். சிறிது நாட்களிலேயே என்னுடன் நட்புடன் பழகினார்கள். தினமும் காலையில் டீ, பிஸ்கெட் வாங்கிக்கொண்டு அவர்களை பார்க்க செல்வேன்.

நாங்க மூன்று பேரும் பகிர்ந்து சாப்பிடுவோம். அதேபோல நான் வேலை முடித்து வரும்போது வாங்கிவரும் இரவுநேர உணவை மூவரும் பகிர்ந்து உண்ணுவோம். இவ்வாறு தொடர்ந்து அவர்களுடன் நட்புடன் பழகிய பின் அவர்களை இந்நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறையின் உதவியை நாடினேன். ஒரு DSP அதிகாரி எனக்கு விழிப்புணர்வு அளித்து அதன் பின்னர் அவர்களை மீட்டு முதியவர்களுக்கான ஆதரவு இல்லத்தில் சேர்ப்பதற்காக உதவினார். அவர்கள் இருவரையும் ஆதரவு இல்லத்தில் சேர்த்துவிட்ட போது, என்னைவிட்டு பிரிய மனமில்லாமல் கடைசிவரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சாலையோரங்களிலும் தெருவோரங்களிலும் இருப்பவர்களை மீட்டெடுக்கும் என் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. அதன்பின்னர் என் சொந்த ஊரான ஈரோடு பகுதியிலேயே ஒரு கல்லூரியில் வேலை கிடைத்தது. ஊருக்கு வந்தபின்னும் அதே சேவையை தொடர்ந்தேன். நண்பர்களும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டோம். இது போன்று தனியாக இருக்கும் நபர்களிடம் முதலில் நட்பாக பேச்சு கொடுப்போம்.

சிலர் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள், அன்பாக பேசினால் ஒத்துழைப்பார்கள். குளிக்க வைத்து, புதிய ஆடைகளை உடுத்தி, அவர்கள் புத்துணர்வாக உணர்ந்தபின்னர், அவர்களை பற்றிய விவரங்களை கேட்போம். சிலர் உண்மையான தகவல்களை சொல்ல தயங்குவார்கள். சிலருக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப காவல்துறையின் உதவியுடன் முதியோர் இல்லங்களிலும் ஆதரவு இல்லங்களிலும் பாதுகாப்பாக சேர்த்து விடுவோம்” என்றவர் ஜீவிதம் ஃபவுண்டேஷன் பற்றி மேலும் பகிர்ந்தார்.

“என்னுடைய சேவையை துவங்கிய ஒரு வருடத்தில் ஜீவிதம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்தோம். தற்போது 25 தன்னார்வலர்கள் அதில் சேவையாற்றுகின்றனர். இதுவரையில் 570க்கும் மேற்பட்ட ஆதரவில்லாத நபர்களை மீட்டுள்ளோம். ஒரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததும், அவரை நேரடியாக சந்திக்க மாட்டோம். இரண்டு வாரங்கள் அவர் எங்கு செல்கிறார் என்று அவரின் நடவடிக்கைகளை கண்காணிப்போம். அதன் பிறகு அவரை எவ்வாறு பக்குவமாக கையாள வேண்டும் என்று பார்த்து செயல்படுவோம். சிலருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும்.

அவர்களை நேராக மருத்துவமனையில் சேர்த்து உடல்நிலை சரியாகி வந்ததும் காவலர்கள் உதவியுடன் ஆதரவு இல்லத்தில் சேர்ப்போம். அவ்வப்போது அவர்கள் இருக்கும் ஆதரவு இல்லங்களுக்கு உணவு, ஆடைகள் வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தி அன்பையும் ஆதரவையும் பரிமாறிக்கொள்வோம். ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தின் போது மீட்டெடுத்தவர்களின் இல்லங்களுக்கு ஒவ்வொரு நாளாக திட்டமிட்டு சென்று அவர்களை மகிழ்விக்க சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். நாங்க அவர்களை பார்க்க செல்லவில்லையென்றால் ‘ஏன் பிள்ளைங்க வரல’ என்று எங்களை தேடுவார்கள். அவர்களின் அந்த அன்பே எங்களை இன்னும் சேவையாற்ற ஊக்குவிக்கிறது” என்றவர் பலருக்கும் சிறுதொழில் அமைத்துக்கொள்ள உதவியிருக்கிறார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தின்போது காவல்துறையின் அனுமதியுடன் உணவு வழங்கும் சேவையில் நாங்க ஈடுபட்டபோது, ஒவ்வொரு நாளும் உணவை வாங்க நிறைய மக்கள் கூடினார்கள். உண்மையில் அவர்களெல்லாம் வீடின்றி சாலையோரங்களில் இருப்பவர்கள்தானா? இவ்வளவு பேரும் ஆதரவற்றவர்களா என்ற கேள்வியுடன் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களெல்லாம் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது.

ஹோட்டல்களில் வேலை செய்ய வந்தவர்கள் ஊரடங்கு காரணமாக வேலையும் இல்லாமல் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் சாலைகளில் இருந்தனர். இவ்வளவு பேரும் கூட்டமாக இருந்தால் கொரோனாத் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால், காவல்துறை மற்றும் நகராட்சி உதவி யுடன் பள்ளிகளில் இடைவெளிகளுடன் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்தேன். அவர்களுக்கான உணவினை சமைத்து கொடுத்த போது அது தெரிந்து பலரும் உணவுக்குத் தேவையான பொருட்களை கொடுத்து உதவினார்கள்.

பள்ளியில் தங்கவைக்கப்பட்டவர்களுடன் பேசிய போது அவர்களுக்கென்று வாழ்வாதாரம் எதுவும் இல்லை, எந்தவொரு தொழிலும் முறையாக தெரியாது என்று புரிந்தது. ஊரடங்கிற்குப் பிறகு என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லையென புலம்பிக்கொண்டிருந்தனர்.

ஏதேனும் தொழிற் பயிற்சிகளை பயிற்றுவித்தால் சிறு தொழில் செய்தாவது அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்ற நோக்கில் கீ செயின் போன்ற கைவினைப்பொருட்களை தயாரிப்பது, சமையல் கலை, கூடைப்பின்னல் போன்ற பயிற்சிகளை அளித்தோம். பலரும் இதனை பயன்படுத்திக் கொண்டு சிறு தொழில்களை செய்து வருகின்றனர். அதில் சிலர் இப்போதும் என்னை தொடர்பு கொண்டு அப்போது கிடைத்த பயிற்சியால், இப்போது பணம் ஈட்ட முடிகிறது என்று சந்தோஷப்படுவார்கள்.

அதெல்லாம் கேட்கும் போது நிறைவாக இருக்கும். நான் செய்யும் உதவிகளுக்கு பலனாக எனக்கும் ஒரு உதவி கிடைத்தது. எனக்குத் தெரிந்த செவிலியர்கள் வட்டத்தில் இருப்பவர்களின் நிதி உதவியால் இன்று நான் நர்சிங் படித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது நான் மேற்படிப்பிற்காக கர்நாடகா வந்துள்ளதால் குழுவில் உள்ள மற்ற தன்னார்வலர்கள் சேவை பணியை தொடர்ந்திருக்கிறார்கள்’’ என்றார் மனிஷா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

Related News