சுற்றி நடக்கும் விஷயங்களை கலை மூலம் பிரதிபலிக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி
ஐஸ்வர்யா
‘‘மயிஷா ஆரம்பிச்சு 15 வருஷமாகிறது. கடந்த ஆறு வருஷமா என் மாணவர்கள் உருவாக்கும் கலைப் பொருட்களை கண்காட்சியா வைத்து வருகிறேன். இதன் மூலம் தனித்துவமாக யோசிப்பவர்கள், கிரியேடிவ்வான பொருட்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தர விரும்பினேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா மணிவண்ணன். இவர் 14 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு கலை சார்ந்த அனைத்துப் பயிற்சியினை அளிப்பது மட்டுமில்லாமல் அதற்கான பாதையும் வகுத்து வருகிறார். ‘கோடு’ என்ற தலைப்பில் இவரின் மாணவர்கள் தங்களின் சிந்தனைகளை அழகான ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களாக அமைத்து கண்காட்சியில் காட்சிப் படுத்தி இருந்தனர்.
‘‘நான் படிச்சது ஆர்ட் அண்ட் டிசைன். எங்க வீட்டில் எல்லோரும் டாக்டர்கள். அம்மா, அப்பா அனைவரும் அந்த துறையில்தான் இருந்தாங்க. எனக்கோ கலை சார்ந்த விஷயங்களில்தான் என் மனம் சென்றது. அதற்கு காரணம் என் பாட்டின்னு சொல்லலாம். அவங்கடாக்டராக இருந்தாலும் அழகாக வரைவாங்க, எம்பிராய்டரி எல்லாம் செய்வாங்க. நான் சின்ன வயதில் இருக்கும் போது அவங்க வரைவதை பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கும் டிசைனிங் குறித்து படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆர்ட் அண்ட் டிசைனிங் துறையை தேர்வு செய்து படிச்சேன். மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றேன்.
அதன் பிறகு சென்னையில் ஆர்டிஸ்ட் ஒருவரின் ஸ்டுடியோவில் வேலை பார்த்தேன். அங்கு நான் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் செய்தேன். மேலும், பல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடிந்தது. அப்போது அங்கு வருபவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு டிசைனிங் ெசால்லித் தரச்சொல்லி கேட்டார்கள். எனக்கும் சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் இருந்ததால், சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் மயிஷா ஸ்டுடியோ உருவானது.
என் கலைப் பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தற்போது உலகம் முழுக்க பல கலை சார்ந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு பயின்ற மாணவர்கள் ஃபைன் ஆர்ட்ஸ், பிலிம் மேக்கிங், போட்டோகிராபி, ஆர்கிடெக்சர், இன்டஸ்டிரியல் டிசைன், டெக்ஸ்டைல் டிசைனிங் என அனைத்து துறையிலும் இருக்கிறார்கள்’’ என்றவர் ‘கோடு’ கண்காட்சி பற்றி விவரித்தார்.
‘‘பொதுவா மாணவர்கள் பயிற்சி பெற்று அதன் பிறகு தங்களின் கலைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உருவாக்குவார்கள். அதே சமயம் அவர்களின் கலைகளை மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தி, அதனை பார்வையாளர்களுக்கு விவரிக்கும் ேபாது, அவர்களுக்கு பலவித அனுபவங்கள் கிடைக்கும். மேலும், இந்த துறையில் ஒரு கலையை உருவாக்கினால் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கவும் தெரிய வேண்டும். அந்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி அமைக்க முக்கிய காரணம். இதைப் பார்த்து கலையில் விருப்பமுள்ள 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் கற்றுக் கொள்ள முன்வருவார்கள். எல்லாவற்றையும் விட இவர்களின் ஒவ்வொரு கலையும் வல்லுனர்கள் உருவாக்கிய தரத்தில் இருக்கும்.
கண்காட்சியினை கடந்த ஆறு வருடமாகத்தான் நடத்தி வருகிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரு தலைப்பில் கண்காட்சி நடைபெறும். இந்த வருடம் கோடுதான் தீம். ஒரு கலையின் ஆரம்பம், தொடரக்கூடியது, இயற்கையுடன் ஒன்றி இருக்கும், முடிவில்லாதது என பல அர்த்தங்களை ேகாடுடன் இணைக்கலாம். மேலும், மாணவர்களுக்கு சாதாரண கோட்டினைக் கொண்டு எப்படி அழகான கலைகளை உருவாக்கலாம் என்று அவர்களை சிந்திக்க வைப்பது என் நோக்கம்.
ஒரு தீம் அமைக்கும் போது அவர்கள் அது குறித்து பல ஆய்வுகளில் ஈடுபடுவார்கள். அவர்களின் கிரியேடிவ் சிந்தனை வெளிப்படும். ஆழமாக யோசிப்பார்கள். கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட கலை காவியங்களை என் மாணவர்கள் உருவாக்கி இருந்தார்கள். ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பங்கள், இன்ஸ்டாலேஷன்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், அனிமேஷன் என ஒவ்வொரு மாணவர்களும் அமைத்திருந்தனர்.
இதை சாதாரண கோடாக மட்டும் பார்க்காமல், பல கோணங்களில் சிந்திக்கும் போது விதவிதமான கலையாக உருவாக்க முடியும். எல்லைக் கோடுகள், சருமத்தில் உள்ள ேகாடுகள், மக்களுக்கு இடையே உள்ள இணைப்பு, பாதைகள் என அவரவர் மனதில் தோன்றிய கோடுகளை இவர்கள் பிரதிபலித் திருக்கிறார்கள்’’ என்றவர், தன் பயிற்சி பள்ளிப் பற்றி விவரித்தார். ‘‘14 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். இங்கு தனிப்பட்ட பாடத்திட்டங்கள் எல்லாம் கிடையாது. சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கும். மற்றவர்கள் சிற்பங்கள் செதுக்குவதில் விருப்பம் காட்டுவார்கள்.
அதனால் அவர்களின் விருப்பம் என்ன என்று அறிந்து அதற்கேற்ப தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிப்போம். குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட வகுப்பு எல்லாம் இருக்காது. அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதைக் கொண்டுதான் நான் பாடங்களை அவர்களுக்கு ஏற்ப அமைத்து சொல்லித் தருவேன்.ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்பு கான்செப்ட்டில் கண்காட்சி நடத்தி வருகிறேன்.
மேலும், பல திட்டங்கள் இருக்கு. பள்ளி, கல்லூரிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கும் நாங்க சொல்லித்தர விரும்புகிறோம். கலை அனைவரின் மனதில், செயலில் மாற்றத்தினை கொண்டு வரும். குறிப்பாக சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு முதல் கட்டமாக இந்தக் கண்காட்சிக்கு சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை அழைத்திருக்கிறேன்.
அவர்கள் இதைப் பார்க்கும் போது, ஒரு தொழிலாக மாற்றி அமைத்துக் ெகாள்ள முடியும் என்று புரிதல் ஏற்படும். கலை, ஒருவரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பொறியியல் மருத்துவம்தான் தொழில் இல்லை. கலையும் அதை சார்ந்த விஷயங்கள் கொண்டும் நம்மால் ஒரு தொழிலை அமைக்க முடியும்.
அதை என்னால் கொடுக்க முடிகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் இருக்கு. அதை நாம் பார்ப்பதில்லை. என் கலை மூலம் அதை மக்களிடம் கொண்டு ெசல்ல முடிகிறது. இது போல் பல விஷயங்களை கலை வழியாக எடுத்துச் செல்ல இருக்கிறேன்’’ என்றார் ஐஸ்வர்யா.
தொகுப்பு: ஷன்மதி