பணம் சம்பாதிப்பதைவிட நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி
ஒருவருக்கு உணவளித்து அவர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. உணவகங்கள் பல இருந்தாலும் அதனை பிசினசாக மட்டும் இல்லாமல் அதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு சேவை செய்யும் பாலமாகவும் அமைத்துள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த ரேவதி. இவர் தன் உணவகமான ‘அன்னம் கேட்டரிங்’ மூலம் திருமணம், காது குத்து போன்ற வைபவங்களுக்கு உணவு அளிப்பது மட்டுமில்லாமல் அன்னதானம் செய்ய விரும்புபவர்களுக்கும் தன் கேட்டரிங் மூலம் உணவினை பரிமாறி வருகிறார். ‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை என்றாலும் வளர்ந்தது, படிச்சது எல்லாம் தஞ்சை, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில்.
என் பெற்றோர் இருவரும் பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். அதில் என் அப்பா காது கேளாதோருக்கான சிறப்பு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இதனால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பணி மாற்றம் அவருக்கு இருக்கும். என் குழந்தைப் பருவம் பெரும்பான்மையாக தஞ்சாவூரில் கழிந்தது. கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தேன். அதன் பிறகு வங்கியில் பணி நியமனம் கிடைக்கப் பெற்று கிருஷ்ணகிரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.
இதற்கிடையில் திருமணம், குழந்தை என்று ஆனதால் என்னால் வேலையினை தொடர முடியவில்லை. மேலும், என் கணவருக்கும் ஐதராபாத்திற்கு பணி மாற்றம் ஏற்பட்டதால், உடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனக்கு சின்ன வயசில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. காமிக்ஸ் முதல் சுஜாதா, ஜெயகாந்தன் என அனைவரின் கதைகளையும் படித்திருக்கிறேன். அதனால் எழுத்து மேல் ஈடுபாடு ஏற்படத் துவங்கியது. அந்த உந்துதலால், இணையதளத்தில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்றவர் அன்னம் கேட்டரிங் குறித்து பகிர்ந்தார்.
‘‘என் அம்மா திருவண்ணாமலையில் வசித்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், நான் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு குடி புகுந்தேன். உடன் இருந்து பார்த்துக் கொண்டதால், அம்மாவின் உடலும் தேறியது. அந்த சமயத்தில் தான் வீட்டில் சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கேட்டரிங் செய்யலாம்னு முடிவு செய்தேன். சிறிய அளவிலான மெஸ் அல்லது ஹோட்டல் வைக்கலாம். ஆனால், அதற்கான பெரிய அளவு என்னால் முதலீடு செய்ய முடியாது என்பதால், குறைந்த முதலீட்டில் செய்ய திட்டமிட்டேன். மேலும், நேரடியாக உணவகம் போல் இல்லாமல் அனைத்தும் ஆன்லைன் ஆர்டர்கள் மட்டுமே செய்ய திட்டமிட்டேன். எனக்கு உறுதுணையாக என் தந்தை இருந்தார். ஒரு வருட கால முயற்சிக்குப் பிறகு சமைக்க ஏதுவான இடம் வாடகைக்கு கிடைத்தது.
என்னுடைய பிசினஸ் முழுக்க முழுக்க சமூக வலைத்தளத்தை நம்பிதான் இருந்தது. ஆனால், நல்ல காரணத்திற்காக ஒரு விஷயம் செய்தால் அதை கண்டிப்பாக இந்த பிரபஞ்சமானது நடத்தி வைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. கேட்டரிங் தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். கேட்டரிங்கிற்கு அன்னம் என்று பெயர் வைத்தேன். வேலைக்கு பெண்களை நியமித்தேன்.
அதன் பிறகு 2023ம் ஆண்டு முகநூலில் என்னுடைய பிசினஸ் குறித்து பதிவு செய்தேன். அதில் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் ஆர்டரின் பேரில் செய்து தருவதாகவும், திருமண நாள், பிறந்த நாள், நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க விரும்பினால் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள சிவனடியார்களுக்கு நேரில் சென்று வழங்குவதாக தெரிவித்தேன். அன்று துவங்கி என் ஓட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பொறுத்தவரை 50% வெளிநாட்டு வாழ் தமிழர்கள்தான். அவர்களின் திருமண நாள், பிறந்தநாளுக்கு காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு உணவு வழங்க சொல்லி ஆர்டர் செய்திடுவார்கள். நாங்களே அங்கு சென்று உணவினை பரிமாறிடுவோம். மேலும், தனித்து வாழும் பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மூன்று வேளை உணவினை டோர் டெலிவரியும் செய்து வந்தேன். ஆனால், இங்கு அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பதால் அதை கைவிட வேண்டி இருந்தது.
காசு, பணம் சம்பாதிப்பதை விட நல்ல மனிதர்களை இந்த தொழில் மூலம் சம்பாதித்து இருக்கிறேன். அதுவே எனக்கு பெரிய அளவில் ஆத்ம திருப்தி அளிக்கிறது. அதற்கு காரணம் நான் இந்தத் தொழிலை நேசித்து செய்கிறேன். இந்த சமூகம் உனக்கு என்ன நன்மை தருகிறதோ நீ அதற்கு கால் பங்கேனும் திருப்பிக் கொடு என்பதே என் கொள்கையாக பின்பற்றி வருகிறேன்.
எங்க கேட்டரிங்கில் சைவம், அசைவம் இரண்டுமே உண்டு. சுவை மற்றும் தரத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்வதில்லை. திருமணம் மற்றும் விழாக்களுக்கு எத்தகைய தரத்தில் உணவை தயார் செய்கிறோமோ அதே தரத்தில்தான் ஆதரவற்றோருக்கும் வழங்கப்படும் உணவும் இருக்கும்’’ என்றார் ரேவதி.
தொகுப்பு: திலகவதி