இல்லத்தரசியை தொழில்முனைவோராக மாற்றும் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி!
நன்றி குங்குமம் தோழி
‘‘பெண்களுக்கு நகைகளை விட ஆடைகள் மேல் தனிப்பட்ட விருப்பம் உண்டு. டிரெண்டிங்கிற்கு ஏற்ப அன்றைய லேட்டஸ்ட் டிசைன் உடைகளை வாங்கி குவிப்பதில் அலாதிப் பிரியம். புதுசா, டிரெண்டியா டிரஸ் போட்டு ஒரு செல்ஃபி எடுத்து, உடனே ஸ்டேட்டஸ் போடணும். இதுதான் பெரும்பாலான பெண்களின் சின்ன ஆசை. சாதாரண குடும்ப விழாக்கள் முதல் திருமணம் வரை ஒரு பெண் மற்ற பெண்ணிடம் பேசும் பொதுவான விஷயம் “புடவை நல்லாருக்கே… ப்ளவுஸ் டிசைனும் சூப்பரா இருக்கு... எங்க வாங்கின, யாரிடம் தைச்சே’’ என்பதுதான்.
இன்று இளம்பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை புடவைகளை விட ஜாக்கெட்டுகளுக்கும் அதன் டிசைன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். புடவையின் விலை குறைவாக இருக்கும். ஆனால், அதற்காக டிசைன் செய்யப்பட்ட ஜாக்கெட்டின் விலை மட்டும் புடவையின் விலையை விட அதிகமாக இருக்கும். காரணம், அந்தளவிற்கு ஜாக்கெட் டிசைன்களில் டிரெண்டினை காட்ட விரும்புகின்றனர் பெண்கள்.
“இன்று தையல் கலை தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு ஜாக்கெட்டிற்கு அழகாக ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி செய்ய தெரிந்தாலே போதும். அதையே பிசினஸாக மாற்றி அமைக்கலாம். பெரும்பாலான கடைகளில் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பிட்டுகள் விற்பனையில் உள்ளன. புடவையின் நிறத்திற்கு ஏற்ப நாம் அதனை தேர்வு செய்து நம் விருப்பத்திற்கு தைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் மீனாட்சி. இவர் கம்ப்யூட்டர் மூலம் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யும் இயந்திரங்களை விற்பனை செய்வதோடு மட்டுமில்லாமல் அதன் பயன்பாட்டினையும் சொல்லித் தருகிறார்.
‘‘நான் இந்த கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி இயந்திர விற்பனையில் மூன்று வருடங்களாக இருக்கிறேன். சென்னையில் இந்த வகை இயந்திரங்கள் 2015ல் விற்பனைக்கு வந்தன. ஆனால், ஆந்திராவில் இந்த இயந்திரம் பிரபலம். பல பிராண்டுகள் இந்த இயந்திரத்தினை விற்பனை செய்து வருகின்றன. நாங்க ஃபுல்லி ஆட்டோமேடிக் இயந்திரங்களை விற்பனை செய்கிறோம். இவை கம்ப்யூட்டரில் இயங்கும் எம்ப்ராய்டரி இயந்திரம். முழுக்க முழுக்க ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு சீனாவில் அதனை அசம்பல் செய்யப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பேசிக் முதல் அட்வான்ஸ்ட் என அதில் நான்கு வகை மாடல்களை நாங்க விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் இயந்திரங்களின் மாடல் மற்றும் அதன் இயக்கம் குறித்து விவரித்தார்.
‘‘டேபிள் டாப் மாடல், வீட்டிலிருந்து சிறிய அளவில் டெய்லரிங் செய்யும் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. இது பேசிக் மாடல். கைக்கு அடக்கமாக இருக்கும் என்பதால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதில் சிறிய அளவிலான டிசைன்கள், நிறுவனத்தின் லோகோ, டி-ஷர்ட், சிம்பிள் ப்ளவுஸ், புட்டாஸ் வரை டிசைன்களை போடலாம். கண்ணாடி, நூல் மற்றும் ஜரி வேலைப்பாட்டினை செய்யலாம்.
10 இன்ச் LED கம்ப்யூட்டர் டச் ஸ்கிரீனுடன் இயங்கக்கூடிய இந்த மிஷின்களில் பொதுவாக எட்டு முதல் பனிரெண்டு ஊசிகள் இருக்கும். டேபிள் டாப் மிஷினில் 8x14 அளவில் ஃப்ரேம்ஸ் இருக்கும். இரண்டாவது மாடல் சற்று பெரிய அளவிலானது. பிளவுஸ் டிசைன்கள் வரை இதில் போடலாம். ஏற்கனவே தைக்கப்பட்ட பிளவுஸ்களுக்கும் டிசைன் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புட்டாஸ் மட்டுமே போட முடியும், மற்ற பெரிய டிசைன்களை போட முடியாது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் பிளவுசின் அளவினை டெய்லரிடம் சொன்னால் போதும், அதற்கு ஏற்ப பிளவுசில் டிசைன் செய்து தைத்து தர எளிதாக இருக்கும். இதன் ப்ரேம் சைஸ் 12x16. பொதுவாக கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி மிஷின்களுக்கு குறைந்த மின்சாரம் போதுமானது என்பதால், இந்த மிஷின்கள் இயங்க சிங்கிள் ஃபேஸ் மின்சார இணைப்பே போதுமானது. இவை இன்வெட்டரிலும் இயங்கும்.
ஆல்ரவுண்டர், இது மூன்றாவது மாடல். இதில் பிளவுஸ், சுடிதார், புடவை, லெகங்கா, குர்தீக்கள் போன்ற அனைத்திற்கும் கண்ணாடி முதல் அனைத்து வேலைப்பாடுகளும் செய்யலாம். இதன் ப்ரேம் சைஸ் 20x32. ஆரி வேலைப்பாடுகள் இன்று பிரபலமாக உள்ளது. இதில் மணி வேலைப்பாடு வரும் என்பதால், அவற்றை துவைப்பது கடினம். நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது. கையால் செய்யப்படும் ஆரி வேலைப்பாட்டில் இருக்கும் அதே தோற்றத்தினை இயந்திரம் மூலம் செய்யப்படும் டிசைன்களிலும் கொடுக்க முடியும். அதிக நாட்கள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிதான் பெஸ்ட் சாய்ஸ். உருவப் படங்களை எம்ப்ராய்டரியில் டிசைன் செய்து அதனை பிரேம் போட்டு பரிசாகவும் கொடுக்கலாம். வீட்டில் இருந்தே பிசினஸ் செய்ய விரும்பும் பெண்களுக்கு இது ஏற்றது.
இயந்திரங்களை எங்களிடம் வாங்கும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று பொருத்தி தருகிறோம். மேலும், இரண்டு நாட்கள் இலவச பயிற்சியுடன் தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் குறிப்பாக கண்ணாடி வேலைப்பாட்டிற்கு தேவையானவை, நூல்கள், ஜரிகள் போன்றவற்றை இலவசமாக வழங்குகிறோம். எங்களின் யுடியூப் சேனலில் பயிற்சி குறித்து நிறைய வீடியோக்கள் உள்ளன. அதைப் பார்த்து மேலும் டிசைன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் வீடியோ பயிற்சியும் தருகிறோம். இயந்திரம் பெறும் வாடிக்கையாளருக்கு 3000 டிசைன்களை இலவசமாக வழங்குகிறோம். மேலும், டிசைன்களை ‘UME INDIA’ என்ற ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். கணினி இயக்க தெரிந்தவர்கள் எங்களின் சாஃப்ட்வேர் பயன்படுத்தி அவர்களே புது டிசைன்களை வடிவமைக்கலாம். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மிஷின்களை இலவச சர்வீஸ் செய்து தருகிறோம். உதிரி பாகங்கள் பழுதடைந்தால் மாற்றித் தருவோம்.
ஆண்டு பராமரிப்பும் செய்து தருகிறோம். பொருட்கள் உடைந்தால் மட்டும் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். மற்ற நிறுவன மிஷின்களையும் சர்வீஸ் செய்து தருகிறோம். இந்தியா முழுவதும் எங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் விற்பனை மையங்கள் இருப்பதால், இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். அதில் கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக எம்ப்ராய்டரி டிசைன்களை பிசினஸாக செய்து வருகிறார்கள்.
இந்த இயந்திரங்களை வாங்க வங்கியில் தனிநபர் கடன், வணிகக் கடன், MSME லோன்ஸ், டாட்கோ லோன் அனைத்தும் மானியத்துடன் தராங்க. குறிப்பாக மகளிருக்கு தொழில் ஆரம்பிக்க முன்னுரிமை தராங்க. நாங்க இயந்திரத்தின் விலை பட்டியல் கொடுப்போம், அதை வங்கியில் கொடுத்து லோனுக்கு அப்ளை செய்யலாம்’’ என்றார் மீனாட்சி.
நானும் ஒரு தொழில்முனைவோர்!
- ஹேமலதா சரவணன், டிசைனர்.
‘‘படிச்சது சைக்காலஜி. குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போக முடியல. ஆனா, ஏதாச்சும் பண்ணணும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. வீட்டில் நேரம் இருக்கும் போது, யூடியூப் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பதான் இந்த கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி பிசினஸ் வீடியோ பார்த்தேன். டெய்லரிங் தெரியாது. ஆனால், எம்ப்ராய்டரி செய்யலாம் என்பதால் அது குறித்து கணவரிடம் தெரிவித்தேன். அவரும் இந்த எம்ப்ராய்டரி இயந்திரத்தை லோன் மூலமாகத்தான் வாங்கித் தந்தார்.
ஆரம்பத்தில் எனக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் டிசைன் போட கற்றுக்கொடுத்தேன். நிறைய பேர் என் பிளவுஸ் டிசைனை பார்த்து நல்லாருக்கு, எங்களுக்கும் போட்டுத் தரச் சொல்லி கேட்டாங்க. அப்படி ஆரம்பிச்ச என் பயணம் இன்று நன்றாகவே போகுது. கஸ்டமர் விரும்பும் டிசைன்களையும் போட்டுத் தருகிறேன். ஆன்லைனிலும் நிறைய டிசைன்கள் இருப்பதால், அதைப் பார்த்தும் டிசைன் செய்து தருகிறேன். இன்று நானும் ஒரு தொழில்முனைவோர் என்று பெருமையா உணர வச்சது இந்த கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிதான்.’’
தொகுப்பு: கலைச்செல்வி