முத்தான உடலுக்கு மூலிகை நாப்கின்!
ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வு மட்டுமில்லாமல் மனச்சோர்வினாலும் அவதிப்படுவார்கள். உடல் சோர்வினால் கூடவே கோபம், எரிச்சல் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகலாம். சில பெண்களுக்கு அந்த நாட்கள் நெருங்கும் போது வயிற்றுவலி பிரச்னையும் பாடாய்படுத்தும். இவை அனைத்தும் மாதவிடாயின் போது பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்னைகள். ஆனால், அந்த நேரத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவையாக கருதும் நாப்கின்களை பயன்படுத்துவதால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம், இதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பொருள்தானே என்ற அலட்சியத்தினால், அதில் இருக்கும் ரசாயனம் நம் உடலுக்கு கேடுகளை ஏற்படுத்தும் என்று மறந்துவிடுகிறோம். அதற்கு மாற்றாக முழுக்க முழுக்க இயற்கை முறையில் நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் ஈரோட்டைச் ேசர்ந்த ரதிப்பிரியா, இந்துப்பிரியா சகோதரிகள்.
‘‘அனைத்துப் பெண்களும் எங்களின் சகோதரிகள் என நினைத்து அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நாப்கின்களை நாங்க உருவாக்கி வருகிறோம்’’ என்று பேசத் துவங்கினார் ரதிப்பிரியா. “நானும் என் சகோதரியும் மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் வேலை பார்த்து வந்தோம். எத்தனையோ வேலை இருக்கும் போது ஏன் நாப்கின் தயாரிப்பில் எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக, அமெரிக்காவிலிருந்து வேலை வருவது குறைந்துவிட்டது. அதனால் இனிமேல் தற்சார்பு உடைய பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இயற்கை வழியில் சானிட்டரி நாப்கின்கள் சந்தையில் அவ்வளவாக இல்லாத காலம். மேலும், குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அத்தியாவசியமான பொருள். மாதா மாதம் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள் என்பதால், அந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தோம். குறிப்பாக முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்.
நாங்க புதுமுயற்சியாக முதன் முதலில் தயாரித்த நாப்கின்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்கள் கொடுத்த உத்வேகம் எங்களை நம்பிக்கையுடன் அந்தத் தொழிலில் ஈடுபட வைத்தது. ஒரு குழந்தை எப்படி படிப்படியா எழுந்து நின்று நடந்து பிறகு ஓடும் நிலையை அடையுமோ அதே போல்தான் நாங்களும் எங்களின் தொழிலில் படிப்படியாக முன்னேறினோம். என்ன பிரச்னை வந்தாலும் தரத்தில் காம்பிரமைஸ் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். மேலும், மக்கள் கொடுத்த ஆதரவும் எங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். மக்களிடமும் நாப்கினில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் ரசாயனம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், பலர் இயற்கை நாப்கின்களுக்கு மாறி வருகிறார்கள். ஏழு வருஷம் முன்பு நாங்க ஆரம்பித்த போது இருந்த விழிப்புணர்வை விட இப்போது மூலிகை நாப்கின்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல புரிதல் ஏற்பட்டு இருக்கு. அதனாலேயே மக்கள் எங்கள் தயாரிப்புகளை தேடி வராங்க.
எங்களின் நாப்கின்களில் சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, நெல்லிக்காய், தான்தோன்றிக்காய், கடுக்காய் மற்றும் பல பொருட்கள் சேர்ந்து பாதுகாப்பான முறையில் தயாரிக்கிறோம். நாப்கின்கள் மட்டுமில்லாமல் உள்ளாடையில் பயன்படுத்தும் லைனரும் விற்பனை செய்கிறோம். தற்போது எங்களின் பிராண்டினை பெண்கள் விரும்பி வாங்குகிறார்கள் என்பதைவிட ஒரு கோடி பெண்களுக்கு எங்களின் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்களின் தற்போதைய இலக்காக உள்ளது. அவர்களை ‘கிரீன் லேடி’ என்ற எங்களின் இயற்கை குடும்பத்தில் இணைக்க விரும்புகிறோம். அவர்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம். நீங்கள் செய்யும் தொழிலை நேசித்தால் கண்டிப்பாக அந்தத் தொழில் உங்களை உயரத்திற்குக் கொண்டு செல்லும்” என்றார் ரதிப்பிரியா.
மதுரை ஆர்.கணேசன்